அரசியல்
அலசல்
Published:Updated:

கோயில் நிலம் பத்திரப்பதிவு! - சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்?

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

2006 -11 தி.மு.க அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த மு.பெ.சாமிநாதன், அடுத்து வந்த இரண்டு தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ‘இதுவரை 4,226 கோடி ரூபாய் மதிப்பிலான 4,578 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம். கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்’ என்று பேசியிருந்தார். ஆனால், அவரின் அமைச்சரவை சகாவான செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மீதே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தை,பத்திரப்பதிவு செய்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது!

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள நல்லூர், அமர்ஜோதி கார்டன் பகுதியில், 4,850.5 சதுர அடி நிலம் கடந்த 2007, ஜூன் மாதம் 7-ம் தேதி அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் மனைவி உமாதேவி பெயரில் 6,08,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர், 2009 மார்ச் மாதம் 13-ம் தேதி, அதனருகேயுள்ள 4,850.5 சதுர அடி நிலமும் ரூ.6,84,505-க்கு உமாதேவி பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர், 2011-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் மு.பெ.சாமிநாதன் போட்டியிட்டபோது, மேற்கண்ட சொத்து விவரங்களைத் தனது பிரமாணப் பத்திரத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்.

கோயில் நிலம்
கோயில் நிலம்

இந்த நிலையில் 2020-ம் ஆண்டு, செப்டம்பர் 16-ம் தேதி பி.செந்தில்குமார் என்பவருக்கு, மேற்கண்ட சொத்து ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அமைச்சரின் மனைவி உமாதேவி பெயரிலிருக்கும் நிலம், நல்லூர் கிராமத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அருள்மிகு விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் மற்றும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்களுக்குச் சொந்தமானது என்று புகார் எழுந்தது. கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததோடு, அதைப் பெரிய தொகைக்கு விற்பனை செய்து அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் குடும்பம் ஆதாயம் அடைந்திருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய திருப்பூர் அ.தி.மு.க வட்டாரத்தினர், “2006 -11 தி.மு.க அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த மு.பெ.சாமிநாதன், அடுத்து வந்த இரண்டு தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்தார். இதனால் அவர் மனைவி பெயரில் வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு ராசியில்லை என்று ஜோசியர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, செந்தில்குமார் என்பவருக்கு 2020-ல் அந்த வீட்டை விற்பனை செய்தார் அமைச்சர். இந்த நிலையில், அந்த வீடு கட்டப்பட்ட நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்று சர்ச்சை கிளம்பியதால், அவரால் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. மேலும், அமைச்சர் தரப்பிடமிருந்து நிலத்தை மீட்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் வீட்டை விலைக்கு வாங்கிய செந்தில்குமாரிடம், ‘அடுத்தது நம்ம ஆட்சிதான். ஆட்சிக்கு வந்ததும் பத்திரப்பதிவு செய்துவிடலாம்’ என்று சமாதானம் பேசியது அமைச்சர் தரப்பு. சொன்னபடியே பத்திரப்பதிவும் நடந்திருக்கிறது. இதன் பின்னணியில் பல கோடிகள் கைமாறியிருக்கின்றனவாம்” என்றனர்.

கோயில் நிலம் பத்திரப்பதிவு!
கோயில் நிலம் பத்திரப்பதிவு!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “சர்ச்சைக்குரிய அந்த நிலம் 1883-ம் ஆண்டு மைசூர் மகாராஜாவால் நல்லூர் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. பின்னர் 1934-ல் அது தேவதாசி தாயாள் என்பவருக்கு வழங்கப்பட்டு, அவர் வாரிசின்றி இறந்ததால், பழனிசாமி கவுண்டர் என்பவர் அந்த நிலத்தை அனுபவித்துவந்தார். அதன் பிறகு பலரிடம் கை மாறி, மு.பெ.சாமிநாதனின் மனைவி உமாதேவியின் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. சட்டப்படி, தாசி மானியத்தில் வழங்கப்பட்ட இந்த நிலத்தை யாரும் வாங்கவோ, விற்கவோ கூடாது. வாடகை செலுத்தி அனுபவித்துக்கொள்ளலாம். இதனால், அமைச்சர் தரப்பிடமிருந்து நிலத்தை மீட்க வேண்டும் என ஆட்சியருக்கும், பத்திரப்பதிவுத் துறைக்கும் 2020, நவம்பர் மாதம் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால், தற்போது அதே சொத்து செந்தில்குமார் என்பவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக் கிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவுசெய்திருக்கிறோம்” என்றனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் பேசும்போது, “அமர்ஜோதி கார்டன் நிலத்துக்கு யார் உரிமையாளர் என்பது சிவில் விவகாரம். அதை நீதிமன்றத்தில் முடிவுசெய்தால், நிலம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தேன். மற்றபடி, அந்த நிலத்துக்கான தடையில்லாச் சான்று எதையும் வழங்கவில்லை. பத்திரப்பதிவு நடந்தது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது” என்றார் சுருக்கமாக.

அமர்ஜோதி கார்டனிலுள்ள நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய, பலரும் தடையில்லாச் சான்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அரசுப் பொறுப்பிலிருக்கும் அமைச்சர் ஒருவரே அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை விற்று, பத்திரப்பதிவும் செய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

மு.பெ.சாமிநாதன்
மு.பெ.சாமிநாதன்

“பட்டா உறுதிசெய்யப்பட்டே பத்திரப்பதிவு செய்யப்பட்டது!”
அமைச்சரின் விளக்கம்


இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விளக்கம் கேட்டு, காங்கேயத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

“முதலில் அந்த நிலத்தை நான் வாங்கவில்லை. என் மனைவி உமாதேவி அவரது சொந்தப் பணத்தில், கடந்த 2007 மற்றும் 2009-ல் அந்த நிலத்தை வாங்கினார். அதற்கு முன்பு ஒன்பது பேர் வாங்கி விற்பனை செய்து, அதற்காகப் பத்திரப்பதிவும் நடைபெற்றிருக்கிறது. 10-வது நபராகத்தான் அந்த நிலத்தை என் மனைவி உமாதேவி வாங்கியிருக்கிறார். 2020-ல் சொந்தக் காரணங்களுக்காக, அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடு செந்தில்குமார் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதற்கான பட்டா பதிவின்போது, அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதிவுத்துறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிலத்தை எனது மனைவியிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீமிடம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், `கோவை மாவட்ட ஆட்சியரின் 1934-ம் ஆண்டு உத்தரவுப்படி, சர்வே எண் 671/1 உள்ள நிலம் தனிநபருக்குப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ஆட்சியர் வழங்கிய பட்டாவின்மீது தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’ என்று கூறி, விஸ்வேஸ்வரா விசாலாட்சியம்மன் கோயில் செயல் அலுவலர் கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்து 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டார். என் மனைவி உமாதேவி பெயரில் நிலத்தின் பட்டா உறுதிசெய்யப்பட்டதால், அதன் அடிப்படையிலேயே செந்தில்குமார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது” என்றார்.

கோயில் நிலம் பத்திரப்பதிவு! - சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்?

``அமர்ஜோதி கார்டனில் வசிக்கும் மற்றவர்களுக்குப் பட்டா உறுதி செய்யப்படாத நிலையில், உங்கள் மனைவிக்கு மட்டும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் பட்டாவை எப்படி உறுதி செய்து கொடுத்தார்?’’ என்று கேட்டோம்,

“அமர்ஜோதி கார்டனில் வசிக்கும் மற்ற யாரும் பட்டா தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்யவில்லை. என் மனைவி மனுத்தாக்கல் செய்ததன் அடிப்படையில், இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் அல்லது நில நிர்வாக ஆணையரையோ நான் தொடர்புகொண்டு பேசியதுகூட இல்லை. இது தொடர்பான மற்ற விவரங்களை என் வழக்கறிஞர் முருகேசனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்” என்றார்.

அமைச்சரின் அருகில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் முருகேசன் நம்மிடம் பேசுகையில், “இந்த நிலத்துக்கான பட்டா யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறையின் மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தள்ளுபடி செய்தார். அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டு, செப்டம்பர் 16-ம் தேதி செந்தில்குமார் பெயரில் பத்திரப்பதிவு நடைபெற்றது. இதை எதிர்த்து 2022-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி, விஸ்வேஸ்வரா விசாலாட்சியம்மன் கோயில் செயல் அலுவலர் சார்பில் சென்னையிலுள்ள நில நிர்வாக ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய நில நிர்வாக ஆணையர், ‘நீண்ட ஆண்டுகள் கழித்து இந்த நிலத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை உரிமை கொண்டாட முடியாது’ என்று கூறி அவர்களின் மனுவை, கடந்த மார்ச் 1-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். அந்த உத்தரவை மேற்கோள்காட்டி, அமர்ஜோதி கார்டனில் வசிக்கும் சிலர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்கள் இடத்துக்கான பட்டாவை உறுதிசெய்யக் கோரி மனு அளித்திருக்கின்றனர்” என்றார்.