Published:Updated:

மீண்டும் பரவும் கொரோனா - அலர்ட்டாக இருக்கிறதா தமிழக மருத்துவத்துறை?!

கொரோனா டெஸ்ட்

மார்ச் 1-ம் தேதி 15-க்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 50-ஐ நெருங்கியிருக்கிறது. மேலும் தொற்று உறுதியாகும் விகிதம் 1.99%-ஆக உயர்ந்திருக்கிறது.

Published:Updated:

மீண்டும் பரவும் கொரோனா - அலர்ட்டாக இருக்கிறதா தமிழக மருத்துவத்துறை?!

மார்ச் 1-ம் தேதி 15-க்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 50-ஐ நெருங்கியிருக்கிறது. மேலும் தொற்று உறுதியாகும் விகிதம் 1.99%-ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா டெஸ்ட்

தமிழகத்தில் ஓய்ந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மார்ச் 1-ம் தேதி 15-க்கும் குறைவான எண்ணிக்கையில் பதிவான கொரோனா தொற்று, மார்ச் 10-ல் 40-ஐ நெருங்கியது. தற்போது தமிழகத்தில் நாளொன்றுக்கு 50 நபர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலைகளைப்போல மீண்டும் பரவுமா கொரோனா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. மேலும், இந்திய அளவில் கொரோனா உறுதியாகும் விகிதம் 0.61%-ஆக இருக்கும் தருணத்தில் தமிழகத்தில் 1.99% இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அனுப்பியிருக்கும் கடிதத்தில் தொற்றுப் பரிசோதனை, நோயாளியைக் கண்காணித்தல், சிகிச்சை அளிப்பது, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இது குறித்து நம்முடன் பேசிய நுண்ணுயிரியல்துறை பேராசிரியர் நித்யா, ``தமிழகத்தில் 50-க்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருவதாகத் தெரிகிறது. எவ்வளவு அதிகரித்தாலும் முன்புபோலான வீரியம் தற்போது கொரோனாவுக்கு இருக்குமா என்றால் வாய்ப்புகள் குறைவுதான். கொரோனாவோடு வாழப் பழக வேண்டும் எனப் பலர் சொல்வதைக் கேட்க முடிகிறது, உண்மை என்னவெனில், நாம் கொரோனாவோடு நன்கு வாழப் பழகிவிட்டோம். முற்காலத்தில் ஒரு காய்ச்சலை எப்படிக் கையாள வேண்டுமோ அதைப்போலவே கொரோனாவைக் கையாளலாம். தமிழகத்தில் அதிக அளவிலான நபர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கூடுதல் வலிமை. ஆனால் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் பல கணிப்புகளை கொரோனா வீழ்த்தியிருக்கிறது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். மிகப்பெரிய அலைகளுக்கு வாய்ப்பில்லை என்றபோதிலும் மக்களும் அரசும் விழிப்புடன் இருப்பது நல்லது” என்கிறார்.

மாஸ்க்
மாஸ்க்
Pixabay

இது குறித்து நம்முடன் பேசிய மருத்துவர் ரவீந்திரநாத், “கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு, மாநில அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதை மாநில அரசு முறையாகப் பின்பற்ற வேண்டும். தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுப்பதில் அலர்ட்டாக இருக்கிறது எனச் சொல்லிவிட முடியாது. சில கூடுதல் நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்தருக்க முடியும். பரவல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள கொரோனா டெஸ்ட் எடுப்பதை அதிகப்படுத்துவதே முதன்மையாகச் செய்யவேண்டிய பணி. தொற்றுப் பரவலைத் தடுக்க, பொதுமக்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை மாநில அரசு அறிவித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழக மருத்துவத்துறையை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் மருத்துவத்துறைக்குத் தற்போதைய நிதியைவிட மூன்று மடங்காக உயர்த்தப்படும் எனச் சொன்னார்கள். இதுவரை அதற்கான நடவடிக்கைகள் இல்லை. கொரோனா பரவல் எந்த நிலைக்குச் சென்றாலும் அதைக் கையாளும் திறனுடன் தமிழக மருத்துவத்துறை இருப்பது அவசியம். கொரோனா வேகமெடுக்கும் முன்னரே அந்தப் பணிகளைச் செய்வது கட்டாயம். கொரோனாவோடு சேர்ந்து H3N2 தொற்றும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் எந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதைக் கண்டறியும் வசதிகளைச் செய்திட வேண்டும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
pexels

தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தலாம். தகுந்த ஆய்வுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பொதுமக்கள் பலர் தனியார் மருத்துவமனைக்குச் செல்வார்கள். ஆகவே, தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவேண்டியவை குறித்து மாநில அரசு சுற்றறிக்கை அனுப்புவது நல்லது. நோய் பரவத் தொடங்கும் காலங்களில் மட்டுமல்லாமல் நிரந்தரமாகவே மருத்துவத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். ஆள் பற்றாக்குறை பிரச்னைகள் இருந்தால் அதைக் கண்டறிந்து களைந்திட வேண்டும்” என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்

 சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

முன்னதாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவது குறித்துப் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ``நாடு முழுவதுமே கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. திருச்சியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனோ தொற்றால் உயிரிழந்திருக்கிறார். ஆனால், அவருக்குப் பல்வேறு இணை நோய் பாதிப்புகள் இருந்தன.

தமிழகத்தில் தற்போது பரவும் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க 104 என்ற உளவியல் ஆலோசனை மையத்தை அவர்கள் அணுகலாம்" என்றார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முன்னர்போல் கொரோனா பரவல் வேகமெடுக்க வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் குறிப்பிட்டாலும், வேறு நாடுகளிலிருந்து வரும் நபர்களிடமிருந்து உருமாறிய கொரோனா தொற்று வகைகள் பரவிவிடாமல் தடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியிருக்கிறது. ஆகவே, எந்தெந்த உலக நாடுகளில் தொற்றும் உயிரிழப்பும் அதிகமாகின்றனவோ, அதைக் கண்டறிந்து அந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களைக் கண்காணிப்பது அவசியம். அந்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தற்போதே தொடங்கினால் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், மத்திய மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். கொரோனா அறிகுறிகள் தென்பட்டவுடனே மருத்துவமனையில் பரிசோதனைக்கு முன்வருவதும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயலாற்றுவதும் மிக அவசியம்!