அரசியல்
அலசல்
Published:Updated:

“டாஸ்மாக் சரக்கில் சயனைடு வந்தது எப்படி?” - தஞ்சை 2 பேர் இறப்பில் விலகாத மர்மம்!

டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
News
டாஸ்மாக்

உயிரிழந்தவர்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டில் சயனைடு இருப்பதாகத் தெரியவந்ததன் அடிப்படையில்தான், இந்த மரணத்துக்கு சயனைடு காரணம் என்கிறோம்

‘சயனைடு கலந்த மது அருந்திய இருவர் உயிரிழப்பு’ என தஞ்சை விவகாரத்தில் அரசுத் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட... ‘டாஸ்மாக் சரக்கில் சயனைடு வந்தது எப்படி?’ என்ற எதிர்க்கேள்வி எழுந்திருக்கிறது!

மே 21-ம் தேதி காலை 11 மணியளவில், தஞ்சாவூர் மீன் மார்க்கெட் எதிரிலுள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திய குப்புசாமி (68), விவேக் (36) இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து, விளக்கமளித்த தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ஆஷிஷ் ராவத் ஆகியோர், ‘குப்புசாமி, விவேக் அருந்திய மதுவில் சயனைடு இருந்திருக்கிறது. எனவே, இது குடும்பப் பிரச்னையால் நடந்த தற்கொலையாகக்கூட இருக்கலாம்’ என கூட்டாகப் பேட்டியளித்தனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “காலை 11 மணிக்கு எப்படி பாரில் மது விற்பனை நடந்தது... விற்கப்பட்டது டாஸ்மாக்கில் வாங்கிய மதுதானா... மதுவில் சயனைடு இருந்ததாகச் சொல்லும் அரசு, அந்த மதுவில் சயனைடு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்லாதது ஏன்... இருவரும் உறவினர்கூட அல்ல... பிறகெப்படி ஒரே நேரத்தில் இருவரும் தற்கொலை செய்ய நினைத்திருப்பார்கள்?” என்றனர்.

உயிரிழந்த குப்புசாமியின் மனைவி காஞ்சனாதேவி, “எங்க வீட்ல எந்தப் பிரச்னையுமே இல்லை. ஆனா, குடும்பப் பிரச்னையால அவர் விஷம் குடிச்சுட்டாருன்னு ஏதேதோ சொல்றாங்க” எனக் கதறினார்.

குப்புசாமி - விவேக்
குப்புசாமி - விவேக்

உயிரிழந்த விவேக்கின் சகோதரர் ராஜன், “மனைவியைப் பிரிஞ்சு இருந்த துக்கத்துலதான் என் தம்பி சயனைடைக் குடிச்சு தற்கொலை செஞ்சுக்கிட்டான்னு சொல்றாங்க. அப்படின்னா அவன் மனைவியைப் பிரிஞ்ச ஒரு வருஷத்துக்கு முன்னாடியே செத்துப்போயிருக்கணும். அரசுக்கு எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுங்கறதுக்காக, கட்டுக்கதை சொல்லி கேஸை திசைதிருப்புறாங்க” என்றார் கொதிப்பாக.

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல், “உயிரிழந்தவர்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டில் சயனைடு இருப்பதாகத் தெரியவந்ததன் அடிப்படையில்தான், இந்த மரணத்துக்கு சயனைடு காரணம் என்கிறோம்” என்றார். தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செளந்தரபாண்டியன், “சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் பணியாற்றிய சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் என நான்கு பேரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம்” என்றார்.

தினேஷ் பொன்ராஜ், ஆஷிஷ் ராவத், ராஜன், காஞ்சனாதேவி, செளந்தரபாண்டியன்,
தினேஷ் பொன்ராஜ், ஆஷிஷ் ராவத், ராஜன், காஞ்சனாதேவி, செளந்தரபாண்டியன்,

தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி ராஜா, “பாரில் கைப்பற்றப்பட்டிருக்கும் மது பாட்டில்கள் போலியானவை அல்ல. அவை டாஸ்மாக் கடையிலிருந்துதான் வாங்கப்பட்டிருக்கின்றன. சம்பவ இடத்தில் என்ன நடந்தது... 12 மணிக்கு முன்பாக பார் திறக்கப்பட்டது ஏன்... மதுவில் கலக்கப்பட்ட சயனைடு எங்கிருந்து வாங்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விசாரணையின் முடிவில்தான் விடை கிடைக்கும்” என்றார்.

தி.மு.க அரசுக்குத் தண்ணியில கண்டம்போல!