Published:Updated:

டெல்டா மழைச் சேதம்: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு - விவசாயிகள் நலன் காக்கப்படுமா?!

டெல்டா மழைச் சேதம்: ஸ்டாலினிடம் அமைச்சர் குழு அறிக்கை!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதலே தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது.

Published:Updated:

டெல்டா மழைச் சேதம்: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு - விவசாயிகள் நலன் காக்கப்படுமா?!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதலே தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது.

டெல்டா மழைச் சேதம்: ஸ்டாலினிடம் அமைச்சர் குழு அறிக்கை!

கடந்த ஒரு வாரமாகப் பெய்த எதிர்பாராத கனமழையால், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பல லட்சக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கின்றன. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதலே தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது.

மழைச் சேதம்
மழைச் சேதம்

இந்தப் பருவம் தவறிய மழையால், சம்பா, தாளடி நெற்பயிர்கள் மட்டுமல்லாமல் ஊடுபயிராகப் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, கடலை போன்ற பயிர்களும் மழையில் மூழ்கின. மேலும், அறுவடை செய்யப்பட்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நெல் மூட்டைகளும் போதிய இடவசதி, தார்ப்பாய் வசதி இல்லாமல் முற்றிலும் நனைந்து முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.

விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை:

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ``வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு விளைவித்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கிவிட்டன. வயல்களில் தேங்கியிருக்கும் நீரும் வடிய வாய்ப்பின்றி பயிர்களைச் சூழ்ந்திருப்பதால் வெள்ளத்தில் சாய்ந்துகிடக்கும் நெற்பயிர்களை அறுவடைசெய்யக்கூட முடியாமல் தவிக்கிறோம். மழை தொடர்ந்தால் நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாகிப்போகும். எனவே, சேதமடைந்த பயிர்களுக்கு அரசாங்கம் உரிய நிவாரணத்தொகை அறிவிக்க வேண்டும்.

மழை சேதம்
மழை சேதம்

மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 15% வரை ஈரப்பதம்கொண்ட நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது மழை பெய்திருப்பதால் இயல்பாகவே நெல்லின் ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது. எனவே, நெல்லின் ஈரப்பதத்தைக் கணக்கிடாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 22% ஈரப்பதம்கொண்ட நெல்லையாவது கொள்முதல் செய்ய வேண்டும்" எனக் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இ.பி.எஸ் அறிக்கை:

அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கில் செலவழித்தது மட்டுமின்றி, தங்களது கடைசி வியர்வைத்துளி வரை நிலத்தில் சிந்தி பாடுபட்ட விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு நிதி வர வேண்டும்; காப்பீட்டுத் திட்டம் மூலம் நிதி வழங்கப்படும் என்றெல்லாம் தாமதப்படுத்தாமல், எங்கள் ஆட்சியின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மாநில நிதியிலிருந்து நிதியை விடுவித்ததுபோல், இந்த அரசும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என அறிக்கையின் வாயிலாகக் கோரிக்கை வைத்தார்.

முதலமைச்சர் அனுப்பிவைத்த ஆய்வுக்குழு:

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட்டு, விவசாயிகளின் கோரிக்கை, குறைகளைக் கேட்டறிந்து, நீரில் மூழ்கிச் சேதமடைந்த நெற்பயிர்களைக் கணக்கிட்டு ஆய்வுசெய்து விவரங்களைப் பெறுவதற்காக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோரை நேரடியாகக் கள ஆய்வுக்கு அனுப்பிவைத்தார். இரண்டு அமைச்சர்கள் தலைமையில் இரு குழுக்களாகப் பிரிந்து டெல்டா மாவட்டங்களில் துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் என அரசு அதிகாரிகள் தீவிர ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஆய்வில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

ஆய்வுப்பணியின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் அதிகாரிகள் ஆய்வுப்பணியை மேற்கொண்டுவருவதால், இந்த பாதிப்பின் அளவு அதிகரிக்கும் எனவும், இது இறுதி பாதிப்பு அளவு இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆய்வில் அமைச்சர் சக்கரபாணி
ஆய்வில் அமைச்சர் சக்கரபாணி

மேலும், ``தற்போதைய சூழ்நிலையில் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், 22% வரை தளர்வு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஒன்றிய அரசிடம் பேசி, தளர்வுகளைப் பெற்றுத்தரும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

ஆய்வில் அமைச்சர் சக்கரபாணி
ஆய்வில் அமைச்சர் சக்கரபாணி

2.28 லட்சம் ஏக்கர் பாதிப்பு:

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மொத்தமாக 2.28 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் 87,000 ஏக்கர் சம்பா, நாகை மாவட்டத்தில் 40,000 ஏக்கர் சம்பா, மயிலாடுதுறை மாவட்டத்தில் 30,000 ஏக்கர் சம்பா, தாளடி, திருவாரூர் மாவட்டத்தில் 15,000 ஏக்கர் சம்பா, புதுக்கோட்டையில் 18,000 ஏக்கர் சம்பா, அரியலூரில் 5,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மற்றும் கடலை, உளுந்துப் பயிர்கள் என மொத்தத்தில் 2.28 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சரைச் சந்தித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு:

இந்த நிலையில், இன்று (6-2-2023), பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர்ச் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சக்கரபாணி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, பயிர்ச் சேத விவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை அளித்து, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் காண்பித்தனர்.

முதலமைச்சரைச் சந்தித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்த அமைச்சர்கள் குழு
முதலமைச்சரைச் சந்தித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்த அமைச்சர்கள் குழு

இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குப் பயிர் காப்பீடுத் தொகை பெற்றுத்தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சில நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். அதன்படி, ``கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின் படி 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூபாய் 20000 வழங்கப்படும். மேலும் நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதம் அடைந்த இளம் பயறு வகைகளுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 3,000 நிவாரணம் வழங்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் 8 கிலோ விதைகள் தரப்படும். நெல் அறுவடை மேற்கொள்ள 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்” என அறிவிக்கப்படிருக்கிறது.

இதற்கிடையே, `முதல்வர் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் அறிவித்திருக்கிறார். இது போதாது’ என சில விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர்.