
சென்னை மாநகராட்சியின் 114-வது வார்டு பங்காரு தெருவில் பல வருடங்களாக இயங்கிவந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்றுவந்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் திருமண மண்டபம் கட்டிவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.


இது குறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம், “சென்னை மாநகராட்சியின் 114-வது வார்டு பங்காரு தெருவில் பல வருடங்களாக இயங்கிவந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்றுவந்தனர். கடந்த ஆண்டு, டிசம்பரில் ஸ்டார் தியேட்டருக்கு அருகிலிருக்கும் வேறு பள்ளிக்கு அந்த மாணவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அப்போது, புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்போவதாகப் பெற்றோர்களிடம் சொல்லப்பட்டது. இதற்காக, மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இடமாற்றம் செய்யப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள மாநகராட்சி உருது நடுநிலைப் பள்ளிக்கு மீண்டும் மாற்றப்பட்டனர். இந்தத் தொடர் அலைக்கழிப்புகளால் மாணவர்களின் எண்ணிக்கை 80-ஆகக் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் திருமண மண்டபம் (சமுதாயக்கூடம்) கட்டுவதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி மேயர் பிரியா தலைமையில் மோசடியான தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதில், ஏற்கெனவே புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக பள்ளியை இடிக்கிறோம் என்று போடப்பட்ட தீர்மானம், அதற்கான டெண்டர் உள்ளிட்ட விவரங்களை மறைத்து, திருமண மண்டபம் கட்ட முடிவெடுப்பதாக மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. கூடவே, அந்தப் பள்ளியில் 60 மாணவர்கள் மட்டுமே படிப்பதாகப் பொய் சொல்லியிருக்கிறார்கள். முன்பு இதே பள்ளியில் 115 மாணவர்கள் படித்ததற்கான ஆதாரம் 2021-ல் மத்திய அரசிடம் சமர்ப்பித்த தகவலில் இடம்பெற்றிருக்கிறது. கடந்த மே மாதம் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலிலேயே 75 மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இவர்கள் பள்ளிக்கூடத்தை இடித்து, திருமண மண்டபம் கட்ட, அடுத்தடுத்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்” என்றார் சூடாக.

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக மாநகராட்சி மேயர் பிரியாவைப் பலமுறை தொடர்புகொண்டும் பதில் பெற முடியவில்லை. இதையடுத்து துணை மேயர் மகேஷ்குமாரிடம் பேசினோம். “சம்பந்தப்பட்ட பள்ளியில் 75 மாணவர்கள்தான் இருந்தார்கள். எனவே, செலவைக் குறைக்கும் வகையில் அருகிலுள்ள பள்ளிக்கு மாணவர்களை மாற்றினோம். மேலும், அந்தப் பகுதி மக்கள் கேட்டதால்தான் சமூக நலக்கூடம் கட்டுவதற்கு முடிவுசெய்தோம். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றிவந்த ஆசிரியர்கள் இடம் மாறிச் செல்வதற்குத் தயக்கம் காட்டுவதால், அ.தி.மு.க-வினருடன் சேர்ந்து இது போன்ற தவறான தகவலைப் பரப்பிவருகிறார்கள். தற்போது திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். அமைச்சர் வெளியில் இருக்கிறார். அவர் வந்த பிறகு கலந்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.