மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

ஊர் திடலில் உள்ள மரத்தடியில் ‘காய்கறி’ கண்ணம்மா ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி தனக்குத் தானே சிரித்துக்கொண்டே நடந்து வந்தார். ‘‘என்ன வாத்தியாரய்யா இப்படித் தனியா சிரிச்சுக்கிட்டு வர்றீங்க. காத்துக் கருப்பு புடிச்சுடுச்சோ’’ சற்று உரத்த குரலில் சொன்னார் காய்கறி. அப்போது ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் அங்கு வந்து சேர, ஆரம்பமானது அன்றைய மாநாடு.

‘‘வேற என்ன செய்ய... நாட்டுல நடக்குற கொடுமை கூத்துகளைப் பார்த்துச் சிரிக்கத்தான் முடியும். விவசாயிகிட்ட லஞ்சமா வாங்கின பணத்தை, ஒரு போலீஸ்காரரு வாயில போட்டு முழுங்கப் பார்த்திருக்காரு. ஆனாலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிங்க சும்மா விடல. தங்களோட கடமையைக் கண்ணும் கருத்துமா செஞ்சுருக்காங்க. அந்த போலீஸ்காரரோட வாய்க்குள்ளார கையை விட்டு அந்தப் பணத்தை எடுத்துட்டாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘இது என்ன புதுக் கதையா இருக்கு. லஞ்சம் வாங்கின அதிகாரி கையும் களவுமா பிடிப்பட்டாருனுதான் இதுவரைக்கும் பத்திரிகைக்காரங்க நியூஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப என்னடானா, அந்த போலீஸ்காரரு வாயும் களவுமால பிடி பட்டுருக்காரு’’ அடக்க முடியாத சிரிப்புடன் சொன்னார் காய்கறி.

‘‘இது ஹரியானா மாநிலத்துல நடந்த சம்பவம். காணாமல் போன தன்னோட எருமை மாட்டைக் கண்டுப்புடிச்சு தரச் சொல்லி, போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்கார் அந்த ஊரு விவசாயி. அவர்கிட்ட 6,000 ரூபாய் லஞ்சமா வாங்கியிருக்கார், அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ. ஆனா, மாட்டைக் கண்டு புடிக்கலை. இன்னும் 4,000 ரூபாய் கேட்டதுனால கடுப்பாகிப்போன அந்த விவசாயி, லஞ்ச ஒழிப்புத் துறையில அந்த போலீஸ் எஸ்.ஐ-யை மாட்டி விட்டுருக்கார்’’ முழுமையாக அந்தத் தகவலை சொல்லி முடித்தார் வாத்தியார்.

‘‘அங்க அப்படி... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில ரெண்டு அரசியல்வாதிங் களுக்கு இடையில நடக்குற மோதல்னால, அந்தப் பகுதி விவசாயிங்களுக்குச் சில நன்மைகள் நடந்துக்கிட்டு இருக்கு. அதைப் பத்தி விளக்கமா சொல்றேன்... கேளுங்க’’ சுவாரஸ்யமாகப் பேச்சைத் தொடங்கினார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில வில்லிசேரினு ஒரு ஊரு இருக்கு. அந்த ஊருலயும் அதோட சுற்றுவட்டார பகுதி கள்லயும் ரொம்ப செழிப்பா விவசாயம் நடந்துகிட்டு இருக்கு. ஆனா, அந்தப் பகுதியில தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒண்ணுகூட கிடையாதாம். விவசாயம் சம்பந்தமான எந்த ஒரு தேவைக்கும் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல பயணம் பண்ணி கயத்தாறு... இல்லைனா, கோயில் பட்டிக்குத்தான் போயாகணும். அதனால வில்லிசேரியில தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை திறக்கணும்னு அந்தப் பகுதி விவசாயிங்க நீண்டகாலமா வலியுறுத்திக்கிட்டு வந்திருக்காங்க. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இது சம்பந்தமா போன வருஷம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திச்சு மனு கொடுத் தாராம். இதைத் தன்னோட கௌரவப் பிரச்னையா எடுத்துக்கிட்டாராம், கோவில் பட்டி தொகுதி அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-வான கடம்பூர் ராஜு. சில வாரங்களுக்கு முன்னாடி அவரும் நிர்மலா சீதாராமனை சந்திச்சு மனு கொடுத்திருக்கார்.

இந்த நிலையிலதான் இப்ப அந்த ஊர்ல இந்தியன் வங்கிக் கிளை திறக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கு. தன்னோட முயற்சியாலதான் இது நடந்திருக்குனு கடம்பூர் ராஜு சொல்றார். ஆனா, இதுக்குத் தன்னோட அப்பா வைகோதான் காரணம்னு துரை வைகோ சொல்றாரு. யாரால நடந்துச் சுங்கறது அந்த நிர்மலா சீதா ராமனுக்குதான் வெளிச்சம்’’ ஏரோட்டி சொன்ன தகவலை கேட்டு உற்சாகமடைந்த காய்கறி ‘‘எது எப்படியோ விவசாயிகளுக்கு நல்லது நடந்தா சரிதான்’’ என்றார்.

‘‘அடுத்து நாம என்ன செஞ்சு விவசாயிகளை அசத்தலாம்னு கடம்பூர் ராஜு யோசிச்சுக்கிட்டு இருப்பார். சரி அதை விடுவோம். கோயம்புத்தூர் மாவட்டத்துல உள்ள அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகளோட தொடர் போராட்டத்துக்கு இப்ப வெற்றிக் கிடைச்சிருக்கு’’ எனத் தனக்குத் தெரிந்த ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் காய்கறி.

‘‘அங்கவுள்ள 17 கிராமங்களை உள்ளடக்கின 3,862 ஏக்கர் பரப்புல... தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்புல தொழில் பூங்கா அமைக்கப்போறதா தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாசம் அரசாணை வெளியிட்டுச்சு. அதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிங்க தொடர்ச்சியா போராட்டங்களை நடத்திக்கிட்டே இருந்தாங்க. நிலம் கையகப்படுத்துற பணியைத் தடுத்து நிறுத்த, 17 கிராமங்கள் லயும் போராட்டக்குழு சார்புல அலுவலகம் திறந்திருந்தாங்க. விவசாயிகள் அடங்கிய பறக்கும் படைகள் ராப்பகலா கண்காணிப்புல ஈடுபட்டுச்சு.

இந்த நிலையிலதான்... ‘விவசாய நிலங்களை எடுக்க மாட்டோம்.... தனியார் நிறுவனங் களுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள்லதான் தொழில் பூங்கா அமைக்கப்போறோம்’னு தமிழக அரசு இப்ப ஒரு அறிவிப்பை வெளி யிட்டுருக்கு. ‘இது ஒரு பக்கம் எங்களுக்குச் சந்தோஷம்தான்.

ஆனா, இந்தத் திட்டத்தையே கைவிட்டாதான், எங்களுக்கு நிரந்தரமான நிம்மதி கிடைக்கும். இது செழிப்பான விவசாயப் பூமி. என்னதான், தனியார் நிலங்கள்ல தொழில் பூங்கா அமைக்கப் பட்டாலும்கூட, நிலத்தடி நீர், காற்று மாசடையும். விவசாயம் பாதிப்படையும்னு அந்தப் பகுதி விவசாயிகள் சொல்றாங்க. சரி என்னதான் நடக்குதுனு பார்ப்போம்’’ தனது பேச்சை நிறைவு செய்த காய்கறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

கலைந்தது அன்றைய மாநாடு.

நபார்டு நிகழ்வில்
நபார்டு நிகழ்வில்

வளம் சார்ந்த மாநில அறிக்கை!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சார்பில், ‘மாநில கடன் கருத்தரங்கு 2023-24’, சென்னையில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 2023-24 நிதியாண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது,

‘‘கிராமப் புற வளச்சிக்கு உதவும் நபார்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வெளிநாட்டு வங்கியில் பணிபுரிந்தவன். சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளில் உள்ள வங்கிகளின் கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளேன். தொழில்துறை, நகரம்... என்று அங்கு மேல் மட்டத்தில் தொடங்கி கீழ் நோக்கி புள்ளி விவரத்தைச் சொல்வார்கள். இங்கு நாட்டின் அடிமட்டத்தில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியைக் குறிக்கும் புள்ளி விவரங்களைப் பார்த்தேன். கீழிருந்து மேல் நோக்கிப் பார்ப்பது என்பது சரியானதும் கூட. வளரும் பொருளாதாரத்துக்குக் கடன் என்பது மிகவும் அவசியமானது. சமூகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் கடனை பரவலாக்க வேண்டும். இதன்மூலம், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படும்’’ என்றார்.

நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் டி.வெங்கட கிருஷ்ணா பேசும்போது, ‘‘வரும் 2023-24-ம் நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள முன்னுரிமை துறைகளுக்கு ரூ.4.93 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான ரூ.4.13 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 11 சதவிகிதம் அதிகமாகும்.
குறிப்பாக, விவசாயத்துக்கு ரூ.2.18 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்’’ என்றார்.