
அரசு அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து, அந்தத் திட்டம் மாநிலத்துக்கு முக்கியமெனக் கருதினால் ‘சிறப்புத் திட்டம்' என்று அறிவிக்கும். அதன்பிறகு, இதற்கென உருவாக்கப்படும் நிபுணர் குழுவுக்கு விண்ணப்பம் அனுப்பப்படும்.
`12 மணி நேர வேலை', `திருமண மண்டபங்களில் மது பரிமாறலாம்' என்றெல்லாம் அறிவித்துத் தமிழகம் கொதிநிலையில் இருந்த நேரத்தில், சத்தமேயில்லாமல் அதையெல்லாம்விட விபரீதமான ‘நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட மசோதா’வை விவாதமே இல்லாமல் நிறைவேற்றிவிட்டது தமிழக அரசு. இந்தச் சட்டம் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிற நீர்நிலைகளை மொத்தமாக தனியார் கையில் தந்து ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்கிறார்கள் விவசாயிகள்.
38,321 குளங்கள், 43,837 குட்டைகள், 13,629 ஏரிகள், 111 நீர்த்தேக்கங்கள் என இந்தியாவில் அதிக நீர்நிலைகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது தமிழகம். இந்த நீர்நிலைகளெல்லாம் சுதந்திரத்துக்கு முன்பு அரசர்களும் ஆங்கிலேயர்களும் உருவாக்கிப் பராமரித்தவை. சுதந்திரத்துக்குப் பின் வந்தவர்கள் பெரிதாக எதையும் உருவாக்கவில்லை.
தண்ணீர் வணிகம் பெரிதாக வளர்ந்துவரும் சூழலில், இனிவரும் காலங்களிலேனும் இருக்கிற நீர்நிலைகளைப் பாதுகாத்து முறைப்படுத்தினால்தான் அடுத்த தலைமுறையின் தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கிறோம் என்ற பெயரில் தமிழக ஆட்சியாளர்கள், இருக்கிற சட்டங்களையும் விதிகளையும் மாற்றுகிறார்கள். அப்படியான ஒன்றுதான் நில ஒருங்கிணைப்புச் சட்டம்.

வருவாய் நிலையாணை என்று சொல்லப்படும் ரெவின்யூ ஸ்டேண்டிங் ஆர்டரின் 26ஏ பிரிவு, ‘நீர்வரத்து ஓடைகளோ வேறு நீர்நிலைகளோ தனியார் நிலத்தில் இருந்தால் தனியாருக்கும் நீர்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அந்த நிலத்துக்கு ஈடாக தனியாருக்கு அரசு வேறு நிலத்தை வழங்க வேண்டும்’ என்கிறது. 2022, ஏப்ரலில் அரசு இந்த நிலையாணையில் ஒரு மாற்றத்தைச் செய்தது. தனியார் நிலம் அல்லது அந்த நிலத்துக்குச் செல்லும் பாதையில் நீர்நிலைகள், ஓடைகள் இருக்குமானால் தனியார் அந்த நீர்நிலையின் 30% இடத்தை எடுத்துக்கொண்டு வேறு நிலத்தை அரசுக்குத் தரலாம். இது எல்லோருக்கும் பொருந்தாது. உரிமையாகவும் கோரமுடியாது. தனியார் விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின்படி, 100 ஹெக்டேருக்கு அதிகமாக நிலம் தேவைப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நபர், இந்தத் திட்டத்தைச் சிறப்புத் திட்டமாக அறிவித்து நிலங்களை ஒருமுகப்படுத்தித் தாருங்கள் என்று அரசுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த நில வரம்புக்குள் நீர்நிலைகள் வந்தால் உறுதிமொழி பெற்றுக்கொண்டு அந்த நிறுவனத்தின் பயன்பாட்டுக்கே அவற்றைத் தரலாம்.
‘‘இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டம், 14 பிரிவுகள் அடங்கிய சிறிய சட்டம். 100 ஹெக்டேருக்கு அதிகமாக நிலம் தேவைப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நபர், ‘சிறப்புத் திட்டமாக அறிவித்து நிலங்களை ஒருமுகப்படுத்தித் தாருங்கள்' என்று அரசுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த நிலத்துக்குள் இத்தனை நீர்நிலைகள் உள்ளன; அவற்றின் கொள்ளளவு இவ்வளவு; தண்ணீர் வருவதற்கும் வெளியே செல்வதற்கும் இத்தனை கால்வாய்கள் உள்ளன என்ற தகவல்களை உள்ளடக்கி ‘ஹைட்ரலாஜிக்கல் பிளானை'யும், ‘இந்த நீர்நிலைகளை இதே நிலையில் பாதுகாப்பேன்' என்ற சான்றிதழையும் அந்த விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
அரசு அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து, அந்தத் திட்டம் மாநிலத்துக்கு முக்கியமெனக் கருதினால் ‘சிறப்புத் திட்டம்' என்று அறிவிக்கும். அதன்பிறகு, இதற்கென உருவாக்கப்படும் நிபுணர் குழுவுக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அந்த நிபுணர் குழுவில் நீர்வளத்துறை அலுவலர், கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், அரசு நியமிக்கும் சூழலியல் நிபுணர், ஒரு கல்வியாளர் இடம்பெற்றிருப்பார். இந்தக்குழு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி நிலத்தை ஒருமுகப்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்கும். இந்தக் குழுவின் வேலை, நிலத்தை ஒருங்கிணைப்பதற்கான திட்டத்தை உருவாக்குவது மட்டும்தான். விண்ணப்பத்தை நிராகரிக்க இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இந்தக்குழு தரும் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன் கருத்தை இணைத்து, இந்தச் சட்டத்துக்கென உருவாக்கப்படும் மேலதிகாரி ஒருவருக்கு அனுப்புவார். அந்த அதிகாரிக்கும் இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று அப்ரூவ் செய்யலாம். அல்லது நிபந்தனைகளுடன் அப்ரூவ் செய்யலாம். நிராகரிக்க முடியாது. அவர் அப்ரூவ் செய்தபிறகு அரசிதழில் வெளியிடப்படும். பிற்காலத்தில் அந்த நிறுவனம் நீர்நிலைகளை சரிவரப் பராமரிக்கவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் இந்த அனுமதியை ரத்து செய்யலாம். தனியார் நிலம், நீர்நிலைகள், அரசுப்பாதுகாப்பில் இருக்கும் நிலம், வேறு திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் என அனைத்தையும் இந்தச் சட்டத்தின்படி தனியார் நிறுவனத்துக்கு ஒருங்கிணைத்துத் தரலாம்.
நில ஒருங்கிணைப்புச் சட்டம் கொண்டு வந்த அன்றே 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் Tamil Nadu Town and Country Planning Act-ல் செய்யப்பட்ட திருத்தங்களும் ஒன்று. அதில் பிரிவு 39ல் ‘சதுப்பு நிலங்களை சமப்படுத்தி வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படு்த்திக்கொள்ளலாம்' என்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தையும் இணைத்துப் பார்த்தால் நமக்கு சில விஷயங்கள் புரிகின்றன.
தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் எதுவும் கிடையாது. நம் நீர்நிலைகள் அனைத்தும் 6 மாதங்களுக்குக் காய்ந்துதான் கிடக்கும். மழை வந்தால்தான் தண்ணீர். இந்தச் சட்டமும் சட்டத் திருத்தமும் காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளை சமன்படுத்தி அவற்றை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதியை வழங்குகின்றன. நில ஒருங்கிணைப்புச் சட்டம் மூலம் நீர்நிலைகளை நிறுவனங்களுக்கு வழங்கி, Tamil Nadu Town and Country Planning Act மூலம் அவற்றைத் தூர்த்து, வேறு பயன்பாட்டுக்கு வழங்கிவிடும் திடடத்தைத்தான் தமிழக அரசு தீட்டியிருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கிறது’’ என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. பெரு நிறுவனங்களுக்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் சட்டங்களும் தொழிலாளர் சட்டங்களும் இடையூறாக இருக்கின்றன. அதனால்தான் தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
ஏற்கெனவே இருக்கும் சட்டங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன. ரெட் பிரிவில் வகைப்பட்டுத்தப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை நீர்நிலைகளுக்கு அருகில் அமைக்கக்கூடாது. சில நேரங்களில் பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை, சில நேரங்களில் வனத்துறையின் அனுமதியைக் கூட பெறவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் இனி அவசியமில்லை. ஒற்றைக் கையெழுத்தில் நீர்நிலைகளைத் தனியார் கையில் தந்துவிடலாம்.
‘‘தமிழக வரலாற்றில் இதுவரை இப்படி நீர்நிலைகளைத் தனியார் வசம் ஒப்படைக்கிற நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்ததேயில்லை. ஆங்கிலேயர்கள் கூடச் செய்ததில்லை. ஆங்கிலேயர்கள்கூட நீர்நிலைகளைப் பொதுவான வளங்களாகத்தான் (Common Property Resource) வைத்திருந்தார்கள். மக்கள் சொத்தாகப் பராமரிக்கப்பட்டுவந்த நீர்நிலைகளை தற்போதைய தமிழக அரசு, தனியார் பயன்பாட்டுக்கு விடுவது மிக மோசமான முன்னுதாரணம். இதைக் கண்காணிக்கவும் அனுமதிக்கவும் நிபுணர் குழு அமைப்பார்களாம். கனிம வளம், மணம் கொள்ளை என இதுவரை ஏகப்பட்ட நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களெல்லாம் எப்படிச் செயல்படும் என எல்லோருக்கும் தெரியும்.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மூன்றுவிதமான பாதிப்புகள் ஏற்படும். ஒன்று, தண்ணீர் முழுமையாக வணிகமாகிவிடும். இப்போதே கட்டுப்பாடில்லாமல் குடிநீர் விற்பனை நடக்கிறது. இரண்டாவது, தமிழகத்தில் ஏரிகளை நம்பி பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி நடக்கிறது. நீர்நிலைகளை தனியார் நிறுவனங்களிடம் தரும்போது, அவர்கள் சாகுபடிக்கு அனுமதிப்பார்களா என்பது முக்கியமான கேள்வி. மூன்றாவது, நிலத்தடி நீர் பாதிக்கப்படும். கொள்ளிடம், காவிரி போன்ற ஆறுகளில் மணல் அள்ளும் குவாரிகளில் பொதுமக்கள் பிரவேசிக்கக்கூடாது என்று போர்டே வைத்துவிட்டார்கள். நமது ஆற்றங்கரையில் நம்மால் நடக்கக்கூட முடியாத நிலை வந்துவிட்டது. கிராமப்புறங்களில் நீர்நிலைகளில் யாரேனும் கழிவைக் கொட்டினால் கிராம மக்களே தடுத்து சண்டை போடுவார்கள். தனியார் கையில் தருவதால் அவர்கள் அதை எப்படிப் பராமரிக்கிறார்கள் என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்கமுடியாது.
இந்த நீர்நிலைகளை நம்பித்தான் கால்நடைகள் இருக்கின்றன. பறவைகள் இருக்கின்றன. இப்போதே நதிகள் அனைத்திலும் தொழில் நிறுவனங்களின் கழிவைக் கொட்டிப் பாழ்படுத்தி விட்டார்கள். வைகையில் மட்டும் 98 லட்சம் லிட்டர் சாக்கடைக் கழிவுகள், 5 லட்சம் லிட்டர் மருத்துவக் கழிவுகள் சேர்வதாக கோமதிநாயகம் எழுதி யிருக்கிறார். காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. நீர்நிலைகள் கழிவுகளால் திணறிவரும் சூழலில் அவற்றைத் தடுக்க வேண்டிய அரசே நிறுவனங்கள் கையில் தூக்கித் தருவது மேலும் அழிவுகளைத்தான் உருவாக்கும்’’ என்கிறார் வேளாண் செயற்பாட்டாளர், வழக்கறிஞர் ஜீவகுமார்.
இந்த மசோதா சட்டமன்றத்தில் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லாப் பிரச்னைகளிலும் எதிரெதிர் துருவங்களாக நிற்கிற அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும்கூட இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.
‘‘பெரு நிறுவனங்களுக்குத் துணைபோகும் நடவடிக்கைகளில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒன்றுதான் என்பதே எங்களுக்குக் கிடைத்திருக்கும் தெளிவு. நாடாளுமன்றத்தில் எந்த விவாதங்களையும் நடத்த விடாமல் பா.ஜ.க ஜனநாயகத்தை நசுக்குகிறது என்று சொல்கிற தி.மு.க, இங்கே விவாதமே இல்லாமல் இதுமாதிரியான சட்டங்களை நிறைவேற்றுகிறது.
பெருந்துறையில் சிப்காட் உள்ளது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு குளத்தில் இரும்பாலை ஒன்று கழிவுகளைக் கொட்டியதால் தண்ணீர் சிவப்பு நிறத்துக்கு மாறிவிட்டது. பொதுமக்கள் போராட்டம் நடத்தியபிறகு அமைச்சரெல்லாம் வந்து பார்த்து அந்த ஆலையை மூடியிருக்கிறார்கள். இப்போதே இந்த நிலை என்றால் சட்டபூர்வமாக நிறுவனங்கள் கையில் நீர்நிலைகளைத் தந்துவிட்டால் என்னவாகும்?
திருப்பூர், ஈரோடு, கோவைப் பகுதிகளில் கழிவுநீரை போர் குழாய்கள் மூலம் நிலத்திற்குள் விடுகிறார்கள். இதையெல்லாம் அதிகாரிகள் கண்டும் காணாமலும்தான் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு 1,000 ஏக்கருக்கு மேல் சுமார் 26,000 ஏக்கர் நிலம் எடுத்து நில வங்கியை தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது. எல்லாம் முதலாளிகள் கையில் தருவதற்குத்தான். ஏற்கெனவே மாவட்டம்தோறும் சிப்காட் நடத்தும் தொழிற்பேட்டைகளில் பாதிக்கு மேல் காலியாக இருக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விருத்தாசலம் போகும் வழியில் உள்ள தொழிற்பேட்டையில் ஆடுதான் மேய்கிறது. ஒருவரும் தொழில் செய்ய வரவில்லை. கங்கைகொண்டான் தொழிற்பேட்டைக்கு இப்போதுதான் இரண்டு நிறுவனங்கள் வந்துள்ளன. பெருந்துறை சிப்காட்டில் 40 சதவிகித இடங்கள் காலியாக உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6வது சிப்காட்டுக்கு இடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இரண்டு தொழிற்பேட்டைகள்கூட முழுமையாகச் செயல்படவில்லை.
அக்காலத்தில் இருந்தவர்கள், நீர்நிலைகளின் முக்கியத்துவம் கருதி கடுமையாக உழைத்து, குளம், குட்டைகள், ஏரிகள், கால்வாய்கள், ஊருணிகள் எல்லாவற்றையும் புல வரைபடத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். தனியார் நிலத்துக்குள் போகும் ஓடைகள் வரைக்கும் பதிவாகியிருக்கிறது. தனியார் நிலத்துக்குள் ஓடை சென்றால், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருபுறமும் 50 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியும். அதனால்தான் இவ்வளவுகாலம் நீர்நிலைகள் தாக்குப்பிடித்தன. இனிமேல் ஓடைகளையே மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். அதற்கு இந்தச் சட்டம் அனுமதியளிக்கிறது. ஓடையை நிறுவனத்தின் விருப்பத்துக்கு மாற்றி அமைத்தால் நீர்நிலைக்குத் தண்ணீரே வந்து சேராது. சீக்கிரமே வற்றி வறண்ட நிலமாகிவிடும். நிறுவனம் தன் விருப்பத்துக்கு அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஏரிகள் மக்களின் சொத்து. ஏரிகளை நம்பித்தான் இங்கே விவசாயம் நடக்கிறது. ஏரிக்கரைகளை நம்பித்தான் கால்நடைகளை வளர்க்கிறார்கள். இங்கே ஏராளம் பேருக்கு நீர்நிலைகளில் மீன்பிடிப்பதுதான் தொழில். இன்றைக்கு பெரும்பாலான பகுதிகளில் சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானங்களாக இருப்பவை நீர்நிலைகள்தான். பெரு நிறுவனங்கள் காம்பவுண்ட் சுவர் கட்டி, செக்யூரிட்டி போட்டு வைத்துவிட்டால் யார் உள்ளே போகமுடியும். தமிழக அரசு தற்போது செய்திருப்பது, மக்களிடமிருந்து நீர்நிலைகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல்’’ என்கிறார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி.
1852-ல் வெள்ளைக்காரர்கள்தான் பொதுப்பணித்துறையை உருவாக்கினார்கள். மன்னர் நிதி, மாகாண நிதி, குடி மராமத்து எனப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி நீர்நிலைகளை மேம்படுத்திப் பாதுகாத்தார்கள். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளில் ஏராளமான நீர்நிலைகளை அழித்துவிட்டோம். மிஞ்சியவற்றையாவது பாதுகாக்க வேண்டும்.
ஒரு பக்கம் சுற்றுச்சூழல் துறை வைத்துத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இன்னொரு பக்கம், இருக்கும் நீர்நிலைகளையும் இயற்கை வளங்களையும் அழிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் தமிழக அரசின் செயல் நியாயமற்றது.