அரசியல்
அலசல்
Published:Updated:

தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?

செறிவூட்டப்பட்ட அரிசி
பிரீமியம் ஸ்டோரி
News
செறிவூட்டப்பட்ட அரிசி

ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறுதானியங்கள் உடல்நலத்துக்கு நல்லது எனக் கூறி, இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது.

`செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாடு அரசும் பின்விளைவு தெரியாமல் மக்களுக்கு அதை விநியோகிக்கிறது’ என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசி!

இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified Rice) மத்திய அரசு அறிமுகம் செய்தது. முதலில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய நுண்ணூட்டச் சத்துகளைச் சேர்த்து ‘ஃபோர்டிஃபைடு கெர்னல்’ (Fortified Rice Kernel) அரிசி உருவாக்கப்படுகிறது. பிறகு சாதாரண அரிசியுடன் இந்த அரிசியை 100:1 விகிதத்தில் கலந்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.

இதற்காக, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த அரசு, முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 112 மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டம் வாயிலாக மக்களுக்கு விநியோகிக்கச் செய்தது. முதற்கட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி மாவட்டம் இடம்பெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்டமாக விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 5.51 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த அரிசி வழங்கப்பட்டது.

செறிவூட்டப்பட்ட அரிசி
செறிவூட்டப்பட்ட அரிசி

உள்ளூர் அரிசியை என்ன செய்வது?

தற்போது இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 18.64 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி கடந்த ஒரு மாதமாக வழங்கப்பட்டுவருகிறது. இதற்கு, தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தினர், ``ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறுதானியங்கள் உடல்நலத்துக்கு நல்லது எனக் கூறி, இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் ஊட்டச்சத்தை அதிகரிக்க, செயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதை எப்படி ஏற்க முடியும்... அரசுக்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு... மேலும், இந்த அரிசி வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்கின்றனர். அப்படியானால் உள்ளூர் விவசாயிகள் விளைவித்த அரிசியை எங்கே அனுப்புவது?” எனக் கேள்வி எழுப்பினர்.

சக்கரபாணி
சக்கரபாணி

கேரளாவில் தடை!

அதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., ``தொடக்கம் முதலே இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதுடன், சட்டசபையிலும் என் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறேன். ‘இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என அமைச்சர் சொன்னார். ஆனால், இது பெரும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதே மருத்துவர்கள் கருத்தாக இருக்கிறது. இதனால் நேரடியாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான் என்பதால், மற்றவர்கள் யாரும் எதிர்ப்பதில்லை. ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் பரவாயில்லையா... அரசு இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, ‘`உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஒழுங்குமுறை விதி 7(4)-ல், தலசீமியா (மரபணு ரத்தசோகை) நோய் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரிவாள் செல் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக் கிறது. ஆனால், இது தொடர்பாக மக்களிடையே எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. அடுத்தகட்டமாக செறிவூட்டப்பட்ட உப்பு (ஐயோடின்+இரும்பு), பால், கோதுமை, மைதா ஆகிய உணவுப் பொருள்களையும் வழங்க அரசு முற்படுகிறது. பால் செறிவூட்டப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க F+ என பாக்கெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ரேஷனில் வழங்கும் அரிசிக்கு எந்தக் குறியீடுமில்லை. இதுவரை இந்த அரிசியால் ஏற்பட்ட விளைவுகளை வெளிப்படையாகச் சொல்லாமல், திட்டத்தைப் பரவலாக்குவது ஏற்புடையதல்ல. 100% மத்திய அரசு நிதி ஒதுக்கும் இந்தத் திட்டத்தில் இத்தனை சிக்கல்கள் இருப்பதைக் குறிப்பிட்டுத்தான், ‘எங்கள் மாநிலத்தில் விநியோகிக்க மாட்டோம்’ என கேரளா அரசு கூறியிருக்கிறது. தமிழகத்திலும் விநியோகிக்க மாட்டோம் எனச் சொல்லியிருக் கலாமே?” எனும் கேள்வியை முன்வைத்தார்.

வேல்முருகன் - வெற்றிச்செல்வன்
வேல்முருகன் - வெற்றிச்செல்வன்

நம்மிடம் பேசிய மருத்துவர்கள் சிலர், ``இந்தியாவில் 45% மக்கள் ரத்தசோகையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதைத் தடுக்க செறிவூட்டப்பட்ட அரிசியை அரசு தேர்ந்தெடுத்திருப்பது சரிதான். ஆனால், சோதனை அடிப்படையில் இதுவரை இந்த அரிசியைப் பெற்ற மக்களிடம், அரிசியால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” என்கின்றனர்.

இந்தச் சிக்கல்கள் குறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் விளக்கம் கேட்டோம். ``செறிவூட்டப்பட்ட அரிசியை, சோதனையோட்டமாக தமிழக மாவட்டங்களில் விநியோகித்தோம். அவை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து எந்த ஆய்வறிக்கையும் மத்திய அரசு தரவில்லை. இருப்பினும், இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதனால் இதை அமல்படுத்தியிருக் கிறோம். மரபணு ரத்தசோகை, அரிவாள் செல் ரத்தசோகை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2,000 பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட வாரியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு சாதாரண அரிசியை விநியோகிக்க உத்தரவிட்டிருக்கிறோம். இதற்காக மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுவருகிறது” என்றார்.