அலசல்
அரசியல்
Published:Updated:

ஸ்மார்ட் சிட்டி ஊழல் பொறியாளரை நிரந்தர பொறியாளராக்கியது எப்படி? - மதுரை மாநாகராட்சி மல்லுக்கட்டு!

மேயர் இந்திராணி பொன் வசந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
மேயர் இந்திராணி பொன் வசந்த்

கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சியின் நகரப் பொறியாளராக இருந்துவருகிறார் அரசு. ஆட்சி மாறியதும், இவரை இடம் மாற்றினார்கள். ஆனால், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து திரும்பவும் மதுரைக்கே வந்துவிட்டார்.

நெல்லை, சிவகாசியைத் தொடர்ந்து மதுரையிலும் தி.மு.க மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்களே கலகம் செய்துவரும் நிலையில், நகரப் பொறியாளர் மீதும் குற்றச்சாட்டுகள் குவிந்துவருகின்றன.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக அறியப்படுபவர் மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த். மாநகராட்சியின் முதல் கூட்டத்திலேயே தி.மு.க கவுன்சிலர் ஜெயராம், மேயருக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டமும் தி.மு.க கவுன்சிலர்களின் எதிர்ப்புடன் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் மேயருக்கும், தி.மு.க மாமன்ற உறுப்பினர்குழுத் தலைவரான ஜெயராமுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு
அரசு

இது குறித்து ஜெயராமிடம் கேட்டபோது, “தி.மு.க ஆட்சிக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் மேயர் மற்றும் அவரின் கணவர் பொன் வசந்தின் செயல்பாடுகள் தொடர்கின்றன. மேயருக்கு பதிலாக அவரின் கணவர்தான் மாநகராட்சியில் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு செய்தவர் என்று ஏற்கெனவே தி.மு.க-வினரால் குற்றச்சாட்டுக்கு ஆளான நகரப் பொறியாளர் அரசுவை கூட்டணி சேர்த்துக்கொண்டு, தி.மு.க ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் முறைகேடுகளைச் செய்துவருகிறார்கள். இப்படியே போனால், மக்கள் மத்தியில் கட்சிக்குத்தான் ரொம்ப கெட்ட பெயர் ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலில் மக்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். இவர்கள்மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால்தான் கட்சியின் மாவட்டச் செயலாளர், கவுன்சிலர் களுடன் கலந்தாலோசித்து ‘மாமன்ற தி.மு.க உறுப்பினர்களின் தலைவராக’ என்னை கட்சித் தலைமை அறிவித்தது. இந்த நிலையில் எனக்கும், துணைத் தலைவர், கொறடா உள்ளிட்டவர்களுக்கும் மாமன்றத்தில் தனி அறைகள், கூட்ட அரங்கில் தனி இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டுமென மேயருக்குக் கடிதம் கொடுத்தோம். சமீபத்தில் நடந்த மாமன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தினோம். ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், சீனியர்களான எங்களை, ‘போலீஸ் மூலம் வெளியேற்றுவேன்’ என்று மிரட்டுகிறார். இது கட்சித் தலைமையையே மிரட்டுவது போலாகும்” என்றார்.

வி.சி.க மாநில நிர்வாகியான மாலின், “கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சியின் நகரப் பொறியாளராக இருந்துவருகிறார் அரசு. ஆட்சி மாறியதும், இவரை இடம் மாற்றினார்கள். ஆனால், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து திரும்பவும் மதுரைக்கே வந்துவிட்டார். அரசுதான் எப்போதும் மாநகராட்சியை நிர்வாகம் செய்கிறார். பெரும்பாலான ஒப்பந்ததாரர்களைத் தன் பாக்கெட்டில் வைத்திருக்கிறார். ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டார்; தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், நகரப் பொறியாளர் அரசுமீது நடவடிக்கை எடுப்போம்’ என்று அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த பி.டி.ஆர்., சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது பி.டி.ஆர் ஆதரவுடனேயே நிரந்தர நகரப் பொறியாளராகிவிட்டார்’’ என்றார் ஆதங்கமாக.

மேயர் இந்திராணி பொன் வசந்த்
மேயர் இந்திராணி பொன் வசந்த்

ஆர்.டி.ஐ ஆர்வலர் ஹக்கிம், “கல்வி நிறுவனங்கள், பெரிய மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரிபாக்கி வைத்திருப்பதையும், வாகனப் பராமரிப்புக்கு கோடிக்கணக்கில் பில் எழுதியதையும், ஸ்மார்ட் சிட்டியில் நடந்த முறைகேடுகளையும் ஆர்.டி.ஐ மூலம் வெளியே கொண்டு வந்தேன். இந்த முறைகேடெல்லாம் பத்து வருடங்களாகப் பொறுப்பு நகரப் பொறியாளராக அரசு இருந்தபோது நடந்ததுதான். மாநகராட்சி சட்டத்தின்படி எந்த ஓர் அலுவலரும் ஆறு மாதங்களுக்கு மேல் பொறுப்பு அலுவலராக பணியாற்றக் கூடாது. ஆனால், அரசு விஷயத்தில் இது மீறப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி, அவர்மீது விஜிலென்ஸ் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நகரப் பொறியாளராக நியமித்திருக்கிறார்கள்’’ என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு நகரப் பொறியாளர் அரசுவிடம் பேசினோம். “நான் 30 வருடங்கள் நல்லவிதமாகப் பணியாற்றி இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. தற்போது அலுவலகப் பணிக்காக சென்னை வந்திருக்கிறேன். மதுரை வந்ததும் நேரில் பேசுகிறேன்” என்றார் சுருக்கமாக.

ஜெயராம், பொன் வசந்த்
ஜெயராம், பொன் வசந்த்

இதையடுத்து, மேயர் இந்திராணியிடம் விளக்கம் கேட்பதற்காகத் தொடர்புகொண்ட போது, ‘மேயர் மீட்டிங்கில் இருக்கிறார். அவரிடம் விவரத்தைச் சொல்லிப் பேசச் சொல்கிறோம்’ என்றார் அவரின் உதவியாளர். இதையடுத்து மேயரின் கணவர் பொன் வசந்த் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் விளக்கம் கேட்டபோது, “மேயரின் கணவர் என்பதைத் தவிர எனக்கு வேறு எந்தப் பொறுப்பும் இல்லை. நான் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குச் சென்றே எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. மாமன்ற தி.மு.க உறுப்பினர் குழுத் தலைவரான ஜெயராம், ‘தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அனைத்து முடிவுகளையும் தான்தான் எடுப்பேன்’ என்று தொடர்ந்து தகராறு செய்கிறார். அவருடன் இரண்டு, மூன்று கவுன்சிலர்கள் மட்டும் இருக்கிறார்கள். சுயமாகச் செயல்பட்டுவரும் மேயரை இழிவுபடுத்தும் வகையில், நான் பின்னாலிருந்து இயக்குவதாகவும், மாநகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாகவும் கூறிவருகிறார். தலைமைக்குப் புகார் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

“அ.தி.மு.க ஆட்சியில், `மாநகராட்சிக்குத் தேர்தலே நடத்தாமல் இருக்கிறார்களே...’ என்று வருத்தப்பட்டோம். இப்போது, ‘ஏண்டா தேர்தல் நடத்தினார்கள்?’ என்று கவலைப்பட வைத்துவிட்டார்கள் தி.மு.க-வினர்” என்று நொந்துகொள்கிறார்கள் தூங்கா நகர மக்கள்!