சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி தேர்வில் தனது மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
"2022 - ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். அகில இந்திய அளவில் போட்டி நிறைந்த இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் எனது மகன் 361-வது இடம் வந்தது பெருமையாக உள்ளது. அதுவும், எம்.டி பொது மருத்துவம் படித்துக்கொண்டே தேர்வையும் எழுதி வெற்றிபெற்றுள்ளார்" என்று ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில் நாமும் வாழ்த்துகளுடன் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டு பேசினோம்,

"முதலில் தமிழ்நாட்டிலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ள அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அளவில் லட்சக்கணக்கானோர் எழுதிய தேர்வில் என் மகன் அரவிந்த் 361-வது ரேங்க் வந்ததை நினைத்து ஒரு தந்தையாக பெருமையாக உள்ளது. அதேநேரம், அவருக்கு எம்.டி மருத்துவப்படிப்பை முடிக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. 361-வது இடம் என்பது ரொம்ப நல்ல ரேங்க்தான். ஆனால், அரவிந்துக்கு இன்னும் நல்ல ரேங்க் வருவதற்கு வயதும் வாய்ப்புகளும் உள்ளன. அவர் 32 வயதுவரை தேர்வு எழுதலாம். அதனால், இன்னும் நல்ல இடம் வருவதற்கு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதப்போகிறார்" என்றார்.