
தற்போது கோவை மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் என்ற கால இடைவெளி படிப்படியாகக் குறைந்திருக்கிறது.
கோயம்புத்தூரின் அடையாளமே சிறுவாணி தண்ணீர்தான். ஆனால், ‘கோவையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், பெரும்பாலான பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது’’ என்று கொதித்துப்போயிருக்கிறார்கள் மக்கள்.
இது குறித்து வழக்கறிஞர் லோகநாதன் கூறுகையில், ‘‘கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில், கோவை மாநகராட்சியில் 24 × 7 அடிப்படையில் குடிநீர் வழங்க 3,167 கோடி ரூபாய் மதிப்பில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த ஆண்டு திட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால், தற்போதுவரை கோவை மாநகராட்சியில் 25 சதவிகித பகுதிகளில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. சில இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை” என்றார்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கூறுகையில், “சிறுவாணி உள்ளிட்ட விவகாரங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி, கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்க முயன்றார். கூட்டணியில் இருந்தும்கூட தி.மு.க அரசாங்கம், கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் பேச எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது சூயஸ் திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய தி.மு.க., இப்போது பல்டி அடித்துவிட்டது. என் தொகுதியில்கூட சூயஸ் திட்டத்துக்காகப் பல இடங்களில் சாலைகளைத் தோண்டி, அதைச் சீரமைக்காமல் இருக்கின்றனர். விரைவில் அந்தப் பணிகளை முடிக்க வேண்டும். கோவை தண்ணீர் பிரச்னையைச் சரிசெய்யாத தி.மு.க அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, விரைவில் பா.ஜ.க சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என்றார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்பிடம் விளக்கம் கேட்டபோது, “குடிநீர் பிரச்னையைத் தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தற்போது கோவை மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் என்ற கால இடைவெளி படிப்படியாகக் குறைந்திருக்கிறது. கோடைக்காலம் என்பதால் இடையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் கொரோனா ஊரடங்கால் 24 x 7 அடிப்படையில் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான பணிகள் தொய்வடைந்தன. இதனால் திட்டமிட்டபடி இந்த ஆண்டு பணிகளை முழுவதுமாக முடிக்கவில்லை. 2025-ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் முழுவதும் முடிக்கப்படும்” என்றார்.
ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில் என்று கோவையில் பல ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவித்தாலும், குடிநீர் பிரச்னை மட்டும் தீராத தலைவலியாகவே தொட்டுத் தொடர்கிறது!