மே 17-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று கள்ளச்சாராய மரண விவகாரம், சட்டம் - ஒழுங்கு, தி.மு.க அமைச்சர்கள்மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு கொடுப்பதாக முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி மே 22-ம் தேதி காலை 10:25 மணிக்கு சென்னையின் மையப்பகுதியான சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் அருகிலிருக்கும் தாலுகா சாலையிலிருந்து பேரணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டப்படி, இன்று காலை 9 மணிக்கே சின்னமலை அருகே அ.தி.மு.க தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கார் பார்க்கிங் முறையாக இல்லாததால், சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதேபோல, சைதாப்பேட்டை கோர்ட் அருகேயும் வாகனங்களை அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர் அ.தி.மு.க நிர்வாகிகள். இதனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் சாலை, சைதாப்பேட்டை பாலம், கிண்டி உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரம் ஆக ஆக... அலுவலகத்துக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், அந்தப் பகுதியைக் கடக்க பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
சென்னையின் மையப்பகுதி என்பதால், சென்னை மாநகர் முழுக்கக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கிண்டி, தாம்பரம் நோக்கிச் செல்லக்கூடிய அண்ணா சாலை, விமான நிலையம் செல்லும் சாலை, கத்திபாரா-போரூர் சாலை, வேளச்சேரி பகுதி சாலைகள், ஓ.எம்.ஆரி-லிருந்து சென்னையின் மையப்பகுதிக்கு வரக்கூடிய சாலைகள், அண்ணா பல்கலைகழகம், ஆளுநர் மாளிகையைச் சுற்றியிருக்கும் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. 10 நிமிடங்களில் கடக்கவேண்டிய இடத்தை, ஒன்றரை மணி நேரமாகியும் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறிவிட்டனர்.

10:25-க்கு வருவதாக அறிவித்திருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி, பேரணி தொடங்குமிடத்துக்கே 11:40-க்குத்தான் வந்தார். பேரணியில் பங்கேற்க வந்தவர்கள் ஒரு மணி நேரம் சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே சாலைகளை மறித்தபடி நின்றனர். இதில் அலுவலகம், கல்வி நிலையங்கள், மருத்துவமனைக்குச் செல்லவேண்டியவர்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
குறிப்பாக சைதாப்பேட்டை பாலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் 25 நிமிடங்களுக்கு மேலாக அங்கேயே நின்றுகொண்டிருந்தது, பார்ப்போரை சினம்கொள்ளச் செய்தது. நம்முடன் பேசிய வாகன ஓட்டிகள் சிலர், ``இன்று திங்கள்கிழமை, பல கல்லூரிகளுக்குத் தற்போதுதான் செமஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன. இந்த வேளையில் பல பகுதிகளுக்குச் செல்லவேண்டிய சாலைகளை இணைக்கும் மையப் பகுதியில் மாபெரும் கூட்டத்தைக் காவல்துறை அனுமதித்தது மாபெரும் பிழை" எனக் கொதித்தனர். முக்கியச் சாலைகள் முடங்கியதால் தோராயமாக சுமார் 50,000 பேர் அவதிப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பேரணி தொடங்குமிடத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததும், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், `ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் செல்வோம்' என சூளுரைத்தவர்கள், 50 அடிகூட நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏற, சீனியர்களும் காரில் ஏறி ஆளுநர் மாளிகைக்குப் பறந்தனர். அவர்களின் கார்களுக்குப் பின்னால் நடந்து வந்த அ.தி.மு.க தொண்டர்களை பேரிகாடுகளை அமைத்து போலீஸார் தடுக்க முயன்றதால், அவர்களுக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ``5,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறிய இடத்தில் கூடியிருக்கிறார்கள். `எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 50 அடிதான் நடப்பார். அதன் பின்னர், கார்கள் சென்ற பிறகு பேரிகார்டுகளை வைத்து அடைத்துவிடுங்கள்' என்பது மேலிட உத்தரவு” என்றார்.

கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க தொண்டர் ஒருவரோ, ``எடப்பாடி உள்ளிட்டவர்கள் நடந்து செல்வார்கள், பின்னால் நாங்களும் நடந்து செல்ல வேண்டும் என்றுதான் சொன்னார்கள். மைக்கில்கூட அதைத்தான் அறிவித்தார்கள். ஆனால், பெரிய தலைகளெல்லாம் காரில் பறந்துவிட்டனர். இப்போது போலீஸாரோ எங்களை அடைத்துவைத்துவிட்டனர்... இப்போது நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை” எனப் புலம்பித் தள்ளினார்.
கார்களெல்லாம் ஆளுநர் மாளிகைக்குள் சென்ற பின்னரும், பேரிகார்டுகள் அகற்றப்படாததால், அந்தச் சாலை முழுக்கவும், வாகனங்களின் ஹாரன் சத்தத்தில் அதிர்ந்தது. ஒருகட்டத்தில், வாகன ஓட்டிகள் போலீஸாருடன் நேரடியாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வேறுவழியில்லாமல் பேரிகார்டுகளை போலீஸார் ஒருபக்கம் மட்டும் அகற்றினர். ஆனால், காலை 9 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து ஸ்தம்பிப்பு, இயல்புநிலைக்குத் திரும்ப மதியம் 2 மணிக்கு மேலாகிவிட்டது.
பேரணிக்காகப் பதாகைகளுடன் வந்த தொண்டர்கள் சாலையோரத்தில் அமர்ந்துவிட்டனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து, `தி.மு.க அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள்’ என்ற தலைப்பில் துறைரீதியான ஊழல் குற்றச்சாட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு வழங்கினர்.

பேரணியால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து எடப்பாடியிடம் கேள்வி எழுப்பியபோது, "நாட்டில் நடக்கும் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளுநரிடம் புகார் கொடுக்கவிருக்கிறோம் என டி.ஜி.பி-யிடம் அனுமதி கேட்டோம். அரசுதான் இடத்தைத் தேர்வுசெய்தது. `ஊர்வலமாகச் செல்ல முடியாது, காரில் வந்துவிடுங்கள்’ என்று சொன்னார் டி.ஜி.பி.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்குக் காவல்துறைதான் காரணம். அவர்கள்தான் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். அதற்குத்தானே அவர்கள் இருக்கிறார்கள்... வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படிச் செய்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். முறையாக அதைச் செய்திருந்தால் இந்தக் குளறுபடி ஏற்பட்டிருக்காது" என்றார்.