
தலையங்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணிநேரத்தில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முன்னதாக இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கான சூழலை ஆளுநர் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதும், அதற்கான காரணங்களும் அப்படியேதான் இருக்கின்றன.
சட்டமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம், சட்டமன்றங்களுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையே ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்விக்குள்ளாக்கிவருகிறார் என்று சொல்வதைவிட கேலிக்குள்ளாக்கிவருகிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். குறிப்பாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்களை அழைத்துப் பேசும்போது அவரது உரையில் இந்தத் தொனியே வெளிப்படுகிறது. `சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி, அதற்கு ஆளுநர் நீண்டகாலம் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தால், அது நிலுவையில் இருக்கிறது என்று நாகரிகமாகச் சொன்னாலும், அது செத்துவிட்டது என்றுதான் அர்த்தம்' என்று புது அர்த்தம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ஆளுநர்.

`செத்துவிட்டது என்று ஆளுநர் சொல்வது சட்டமன்றம் இயற்றி அனுப்பிய மசோதாவையா, அல்லது ஜனநாயகத்தையா' என்ற கேள்வி இப்போது அரசியல் அரங்கில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. `சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்புவது வெறும் மசோதா மட்டும்தான். ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அது சட்டமாகும்' என்று அரசியல் சட்ட விளக்கமும் சொல்லி, `ஆளுநர்தான் நம்பர் 1' என்று வலியுறுத்துகிறார் அவர். அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை, மாநில அரசுடன் அதிகாரப் போட்டி நடத்துவதற்கான உரிமை என்று அவர் எடுத்துக்கொள்ள முடியாது.
மாநில அரசையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பொதுவெளியில் மட்டந்தட்டுவது மாதிரி ஆளுநர் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வருவது அந்தப் பதவிக்கு கண்ணியம் சேர்க்காது. ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் கருத்துகளும் சித்தாந்தங்களும் தாராளமாக இருக்கலாம். ஆனால், மாநில அரசின் செயல்பாட்டு அங்கமாகவே அவர் இருக்க வேண்டும்.
எல்லையில்லாத அதிகாரங்கள் கொண்ட பிரிட்டிஷ் கால ஆளுநர்கள் இப்போது கிடையாது. தெலங்கானா ஆளுநர் 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக, அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்டிருக்கிறது நீதிமன்றம். பஞ்சாப் ஆளுநர் அம்மாநில பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார். `ஆளுநர் இந்த விஷயத்தில் தன் விருப்புரிமையைக் காட்ட முடியாது' என்று நீதிமன்றம் குட்டு வைத்தது. பேரறிவாளனின் கருணை மனுமீது முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு இதே தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தபோது, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளின்படி சட்டமன்றம் அதன் கடமையைச் செய்யட்டும். ஆளுநர் மாளிகை அதன் எல்லையில் நிற்கட்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டால், பாதிப்பு தமிழ்நாட்டுக்குத்தான்!