சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

போதைக்குழிக்குள் தள்ளாதீர்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். உலகில் வேறெந்த தேசத்துக்கும் வாய்க்காத வரம் இது. இந்த இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக மாற்றி வளர்த்தெடுக்கும் கடமை அரசுகளுக்கு உண்டு. தமிழக அரசு இந்தப் பொறுப்பை உணரவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்கெனவே கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் மது உள்நுழைந்து அமைதியைக் குலைத்துவரும் நிலையில், ‘திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், கூட்ட அரங்குகள், விருந்து அரங்குகளில் அனுமதி பெற்று மது பரிமாறலாம். தனிப்பட்ட முறையில் வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும்' என்று தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவிலிருந்து பின்வாங்கியது அரசு. ‘மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு அரங்குகளுக்கு மட்டும் இந்த அனுமதி பொருந்தும்’ என்று அறிவித்திருக்கிறது.

தமிழக அரசின் இந்தச் செயல் உண்மையிலேயே பதற்றத்தில் ஆழ்த்துகிறது. குழந்தைகளும் பெண்களும் மகிழ்வாகப் பங்கேற்கும் நிகழ்வுகளில் மதுவைப் பரிமாற அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் குழந்தை, அங்கிருந்து எதைக் கற்றுக்கொண்டு வரும், அது அடுத்த தலைமுறையை எப்படி மாற்றும் என்ற தொலைநோக்குச் சிந்தனை ஏதுமில்லாத அபத்தமான முடிவு இது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று நலத்திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தும் அதே அரசு, ‘மக்களைத் தேடி டாஸ்மாக்’ என்று இதையும் செயல்படுத்துவது நியாயமற்ற நடவடிக்கை.

ஏற்கெனவே சில மாநிலங்களில் இது நடைமுறையில் இருப்பதையும் தமிழ்நாடு அரசு சுட்டிக் காட்டுகிறது. ஆனால், தமிழகத்தின் நிலை வேறு! Crisil நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, மது அருந்தும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள். 2020-21-ல் 33,811 கோடி, 2021-22-ல் 36,013 கோடி, 2022-23-ல் 45,000 கோடி என ஆண்டுக்காண்டு மாநில அரசின் மது வருவாய் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு மதுவே அடிப்படையாக இருப்பதாகக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கைகள் சொல்கின்றன. ‘படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்று சொல்லி ஓட்டுவாங்கி வென்ற முதல்வர், இப்போது இதைச் செய்வது எதிர்பாராதது. மக்கள் எதிர்ப்பால் எங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றனவோ அங்கெல்லாம் FL-2 என்ற சிறப்பு அனுமதி மூலம் மனமகிழ் மன்றங்கள் திறக்க அரசு அனுமதியளித்து வருவதும் சர்ச்சையாகியுள்ளது. அதற்கான விதிமுறைகளும் வெகுவாகத் தளர்த்தப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டே 500 மதுக்கடைகள் மூடப்படும்' என்றார். இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை.

எவ்விதக் கட்டுப்பாடுகளோ கண்காணிப்போ இல்லாமல் மது விற்பனை செய்யப்படுவதால் இளம் சிறார்கள்கூட மதுவுக்கு அடிமையாகும் அவல நிலையில், இன்னும் கைக்கு நெருக்கமாக மதுவைக் கொண்டு செல்வது பெரும் அவலம். இன்றைய வருமானத்தை மட்டுமே பெரிதாக நினைத்து, ஒரு தலைமுறையையே போதைக்குழிக்குள் தள்ளுவது நிச்சயம் நல்லரசு அல்ல. தமிழ்நாட்டில் முதல்முதலாக மதுவிலக்கைத் தளர்த்தி தந்தை கருணாநிதி செய்த தவற்றை, இன்னும் ஒரு படி மேலே போய் மகன் ஸ்டாலினும் செய்வது சரியல்ல. அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் ‘நல்லாட்சி’ என்பதற்கான இலக்கணம் நிச்சயம் இது இல்லை.