
தலையங்கம்
தமிழ்நாடு அரசுக்கும், தமிழக ஆளுநருக்குமான மோதல் தொடர்கிறது. இது, சித்தாந்தரீதியிலானது என்றால், நாம் கடந்துவிடலாம். ஆளுநர் என்கிற பொதுப்பதவியில் இருப்பவர், தனிப்பட்ட சித்தாந்தம் எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றாலும்கூட கடந்துவிடலாம். ஆனால், மாநில உரிமைகளைச் சர்ச்சைக்குள்ளாக்குவதும், நசுக்குவதுமான போக்கில் அவர் வினையாற்றும்போது, பொதுத்தரப்பும் எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது.
‘தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்’ என்றது முதல், சமீபத்தில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என்று மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்தியிருப்பது, ‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைத்திருப்பதால், அவை இறந்துவிட்டன’ என்று பேசியிருப்பது வரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், ஆணவப்போக்கிலேயே இருக்கின்றன. அவருடைய அதிகாரங்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான ஆயுதமாகவேதான் தொடர்ந்து தூக்கிப் பிடிக்கிறார். குறிப்பாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.
தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றி, இரண்டு தடவை அனுப்பியும், இதுவரை 45-க்கும் மேற்பட்டோரின் உயிர் பறிபோயிருக்கும் சூழலிலும், மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை ஆளுநர். விளக்கங்கள் கேட்பது... வியாக்கியானம் பேசுவது என்றே காலத்தைக் கடத்திவிட்டு, ‘மசோதா செத்துவிட்டது' என்று கொஞ்சம்கூட சட்ட நாகரிகமின்றி பேசியிருக்கிறார். அதிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்குத் தேர்வாகியிருப்பவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்!
மக்கள் பிரதிநிதிகள் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் செத்துவிட்டது என்று பேசுகிறார் என்றால், இதன் மூலம் ஆளும் தி.மு.க-வை அவர் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களையும்தான் அவமதித்திருக்கிறார். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்திருக்கிறார்.
இதற்கு எதிராக வழக்கம்போல, ஆளும் தி.மு.க-வும் கூட்டணிக் கட்சிகளும் ‘அறிக்கை' என்கிற பெயரில் எதிர்வினையாற்றியுள்ளன. ஆனால், தீர்மானத்தை ஆதரித்த அ.தி.மு.க., பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் அதையும்கூட செய்யவில்லை... சுய அரசியல் லாபத்துக்காக.
‘தமிழ்நாடு என்பது தி.மு.க அல்ல' என்பதை ஆளுநர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. தமிழ்நாடு முழுக்கச் சாலைகள் சீர்கெட்டுக் கிடக்கின்றன; கனிம வளங்கள் கொள்ளைபோகின்றன; கல்விக்கூடங்களில் பணக்கொள்ளைகள் நடக்கின்றன. இதையெல்லாம் வைத்து தி.மு.க அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கலாம்... உரிய நடவடிக்கைகள் எடுக்கவைப்பதன் மூலம் மக்களுக்குப் பணியாற்றலாம். ஆனால், யோசிக்கக்கூட நேரமில்லை ஆளுநருக்கு!
அரசியலமைப்புச் சட்டங்கள் கொடுத்திருக்கும் அதிகாரங்கள், மக்கள் நலனுக்காகத்தான். அதில் ஏற்படுத்தப்படும் தடைகள், மக்களுக்கு எதிரானவையே! மக்களுக்கு எதிராக ஒரு துரும்பு இருந்தால்கூட அது மக்களாட்சிக்குத் தேவையில்லை, ஆளுநராக இருந்தாலும்கூட!