ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், சட்டத் திருத்தங்கள் உள்ளிட்டவைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கிகாரம் வழங்கியதால், அதிகாரபூர்வமாக எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க பொதுச் செயலாளராகியிருக்கிறார். இதனால், அ.தி.மு.க தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் ஏப்ரல் 20-ம் தேதி மாலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சியைப் பலப்படுத்துவற்கான பல முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதால், எப்போதுமில்லாத அளவுக்கு கூட்டத்தில் சிரித்த முகமாகவே இருந்தார். கூட்டம் தொடங்கியதும், துணைப் பொதுச்செயலாளர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர், உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கினார்கள். இதையடுத்து இறுதியாகப் பேசிய எடப்பாடியார், முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி குறித்தே பேசினார்.
`அம்மா இருக்கும்போது கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 1.5 கோடியாக உயர்த்தினார். அதை இரண்டு கோடியாக்க வேண்டும். தி.மு.க-வும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணியை மேற்கொண்டுவருகிறார்கள். அவர்களுக்குச் சவால்விடும் அளவுக்கு மாவட்டச் செயலாளர்கள் முழு மூச்சோடு பணி செய்ய வேண்டும்.
மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையாகச் செயல்படுங்கள். குறிப்பாகக் கட்சியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணியில் அதிகளவில் உறுப்பினர் சேர்த்திட வேண்டும். அம்மா இருக்கும்போதிருந்த பலத்துடன் மகளிரணி செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க-வின் பூத் கமிட்டி சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. பூத் கமிட்டியை வலுவாக்கும் வேலையில் முழுவீச்சில் ஈடுபடுங்கள். ஒரு பூத்துக்குக் குறைந்தது 100 நபர்களையாவது அவசியம் சேர்த்திட வேண்டும். பூத் கமிட்டி பணிகளை நானே நேரடியாகக் கண்காணிக்கப்போகிறேன். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க-தான். அதை மனதில் வைத்து வேலை செய்யுங்கள்’ என்று அன்பு கட்டளையிட்டிருக்கிறார்” என்றனர் விவரமாக...

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களிலும் பூத் கமிட்டி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறார். அதன் காரணம் குறித்து அ.தி.மு.க-வின் சீனியர் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் விசாரித்தோம்.
``கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான் ஒற்றைத் தலைமை விவகாரம் முதன்முறையாக வெடித்தது. அதன் பின்னர், பல சட்டப்போராட்டங்களில் வெற்றிபெற்று பொதுச் செயலாளராகியிருக்கிறார் எடப்பாடி. அதை தற்போது தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. அதன் பிறகு நடைபெற்ற முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்து முழுக்க முழுக்க எடப்பாடி பேசியிருக்கிறார்.
ஒரு தொகுதிக்குள் சுமார் 15 முதல் 20 பூத் வரை இருக்கும். பிற கட்சிகள் 15 முதல் 20 பூத் ஏஜென்ட்கள் வைத்திருந்தால், அ.தி.மு.க-தான் 40 வரையிலான எண்ணிக்கையில் ஏஜென்ட்கள் வைத்திருக்கும். இந்தியாவில் எந்த மாநிலக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு பூத் கமிட்டி அ.தி.மு.க-வில் மிகப் பலமாக இருந்தது. ஆனால், தற்போது அ.தி.மு.க-வின் பூத் கமிட்டி மிகவும் வீக்காக இருக்கிறது. இதனால்தான், அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கவேண்டிய ஓட்டும் தவறிக்கொண்டேயிருக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க-வின் பூத் கமிட்டி நபர்களை பா.ஜ.க., தி.மு.க-வினர் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆகவேதான் பூத் கமிட்டி விவகாரத்தை மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் அழுத்தமாகப் பேசிவருகிறார் எடப்பாடி. பூத் கமிட்டி அமைப்பை 100 பேராக உயர்த்தவும் சொல்லியிருக்கிறார். முப்பது நாப்பதெல்லாம் பழைய பார்முலா, 100 பேரை நியமித்தால் நிச்சயம் பூத் ஒன்றுக்கு 500 வாக்குகளை உறுதிசெய்துவிடலாம் என கணக்கோடுதான் இந்த டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க வாக்குவங்கிக்கு மிகப்பெரிய அரணாக இருக்கும்” என்றனர் விரிவாக.