Published:Updated:

ஒரே மேஜையில் எடப்பாடி, பன்னீர்; தவிர்த்த கட்சிகள் - `ஆளுநர் மாளிகை-பொங்கல்’ உணர்த்தும் அரசியல் என்ன?

`ஆளுநர் மாளிகை பொங்கல்’

``அதிமுக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆளுநர் ஒரே மேஜையில் அமர வைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.” - தராசு ஷ்யாம்

ஒரே மேஜையில் எடப்பாடி, பன்னீர்; தவிர்த்த கட்சிகள் - `ஆளுநர் மாளிகை-பொங்கல்’ உணர்த்தும் அரசியல் என்ன?

``அதிமுக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆளுநர் ஒரே மேஜையில் அமர வைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.” - தராசு ஷ்யாம்

Published:Updated:
`ஆளுநர் மாளிகை பொங்கல்’

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நேற்று (ஜனவரி 12) மாலை நடைபெற்ற இந்த விழாவுக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரின் மனைவி லக்ஷ்மி ஆகியோருக்குப் பாரம்பர்ய முறையில் பரிவட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்டி - சட்டை, பரிவட்டம் அணிந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மற்றொருபுறம் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இ.பி.எஸ், வேலுமணி, சி.விஜயபாஸ்கர்
இ.பி.எஸ், வேலுமணி, சி.விஜயபாஸ்கர்

விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, அவரின் தரப்பினர், ஓ.பன்னீர்செல்வம், அவரின் தரப்பினர், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், விளையாட்டு வீரர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், நீதிபதிகள், காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்றவர்கள், நீலகிரி பழங்குடியினர், அரசு உயர் அதிகாரிகளை அவர்களின் இடத்துக்கே சென்று வரவேற்று, பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். பின்னர் பொங்கல் வைக்கும் இடத்துக்குச் சென்ற ஆளுநரும், அவரின் மனைவியும் புத்தரிசியைப் பானையில் போட்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர். தமிழ் பாரம்பர்ய அரிசி வகைகள் காட்சிக்காக வைக்கப்பட்டன.

ஒரே மேஜையில் எடப்பாடி, பன்னீர்; தவிர்த்த கட்சிகள் - `ஆளுநர் மாளிகை-பொங்கல்’ உணர்த்தும் அரசியல் என்ன?

இந்த விழாவுக்கு முன்னதாக வந்த எடப்பாடி தரப்பினர் ஒரு பக்கமும், அதற்குப் பிறகு வந்த ஓ.பி.எஸ் தரப்பினர் மறுபக்கமும் அமர்ந்திருந்தனர். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் கலைநிகழ்ச்சிகளை ஆளுநரோடு கண்டுகழித்தனர். நாகஸ்வர மங்கள இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய கலை விழாவில் காவடி, கரகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் களைகட்டின. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களின் சிலம்பத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். அதைத் தொடர்ந்து மரக்கால் ஆட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கடைசியாக நடைபெற்ற காளியாட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கலைநிகழ்ச்சியின் முடிவில் கலைஞர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை ஆளுநர் கௌரவித்தார். இதையடுத்து, தேசியகீதம் முழங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் விருந்தினர்களுக்கு 22 வகையான பாரம்பர்ய உணவுடன் இரவு உணவு பரிமாறப்பட்டன.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

விழா முடிந்ததும் எடப்பாடி தரப்பினர் உணவு அருந்தும் இடத்துக்கு முன்னதாக வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்த நேரத்தில் ஆளுநரின் உதவியாளர், ‘ஆளுநர் அவரோடு சேர்ந்து சாப்பிடுவதற்காக உங்களை அழைக்கிறார்’ என்றதும் எடப்பாடி தரப்பினருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. அங்கு பன்னீர் வருகிறாரா... பன்னீர் அருகில் அமர வைத்துவிடுவார்களா... என்கிற கேள்விகளோடு அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார் சி.விஜயபாஸ்கர். எடப்பாடிக்கு வந்த அழைப்பு போலவே பன்னீருக்கும் அழைப்பு சென்றது. அவர் அமைதியாக வந்து உட்கார்ந்தார்.

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

இவர்கள் இருவரும் அருகில் அமரவில்லை என்றாலும், எதிர் எதிரில் ஒரு நெருடலோடே அமர்ந்திருந்தனர். அடிக்கடி ஓ.பி.எஸ் தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். எடப்பாடி, அவரின் ஆதரவாளர்களான விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜூவை நோட்டமிட்டப்படியே ஆளுநரோடு உணவு அருந்தினார்.

``அதிமுக உட்கட்சிப் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிற நிலையில், அதன் தீர்ப்புக்கான முன்னோட்டமாக ஒரே மேஜையில் இருவரையும் இணைத்துவைத்து இந்த உணவு விருந்து நடந்திருக்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில், இதற்கு முன் எடப்பாடி, பன்னீர் பிரிவை, இணைத்து வைத்ததும் ஒரு ஆளுநர்தான் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

ஷ்யாம்
ஷ்யாம்

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “போன ஆளுநர் கைபிடித்துச் சேர்த்துவைத்தார். இந்த ஆளுநர் உட்காரவைத்து சாப்பாடு போடுகிறார். எதிர்க்கட்சி பலவீனப்படுவது ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது. அந்த வகையில், இருவரும் இணைவது உண்மையில் நல்லது. இவர்கள் இணைய வேண்டுமென்று பாஜக விரும்புகிறது. எனவே, பா.ஜ.க-வின் தூதுவராகச் செயல்படும் ஆளுநருக்கு மேலிடத்திலிருந்து அசைன்மென்ட் கொடுத்திருக்கலாம். பொதுவாகக் கூட்டணிகள் உருவாகுவதே கல்யாண வீட்டில், சடங்கு வீடுகளில்தான். அங்கு இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் தலைவர்களிடம் கேட்டால், ‘பொது விசேஷம். கலந்துகொள்கிறோம்...’ என்பார்கள். எனவே, ஆளுநர் இருவரையும் ஒரே மேஜையில் அமர வைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம்வாய்ந்ததாக இருக்கிறது. இது இவர்கள் இணைப்புக்கான ஒரு வெள்ளோட்டம்” என்கிறவர், அதிமுக வழக்கு குறித்து பேசினார்.

ஆளுநர் மாளிகை பொங்கள் விழா
ஆளுநர் மாளிகை பொங்கள் விழா

``இந்த வழக்கு தேர்தல் ஆணையத்துக்குப் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கிறது. ஏனெனில், ‘பொதுக்குழு உறுப்பினர்கள் என்று சொல்றீங்களே... அவர்களின் பட்டியல் கொடுங்கள்’ என்று நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறார்கள். திங்கள் கிழமை இவர்கள் பட்டியல் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேரை உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வழி கிடையாது. அதற்கான வாய்ப்பு தேர்தல் ஆணையத்தில்தான் இருக்கிறது. இதனால், ஏதோ ஒரு வழியில் தேர்தல் ஆணையத்தை அணுக வாய்ப்பு இருக்கிறது. அங்கு ஒருவேளை போனால் தீர்ப்பு தாமதமாகும். இதற்கிடையே, ஈரோடு இடைத்தேர்தலும் வருகிறது. அதற்குள் இவர்கள் சேர்ந்திருந்தால்தான் இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார்.

இந்த நிகழ்வில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆளுநர் மாளிகைப் பொங்கல் விழாவைப் புறக்கணித்தனர். அதற்கு சட்டமன்றத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக சொல்லப்படுகிறது. இவர்களோடு பா.ம.க-வும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாதது கவனிக்கத்தக்கது. இதன் பின்னணியில் விசாரித்தால், ``சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து பா.ம.க-வும் வெளிநடப்பு செய்திருந்தது. ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக பா.ம.க கூறினாலும், தி.மு.க-வோடு திரைமறைவில் இணக்கமாகவே பா.ம.க இருக்கிறது. இதனாலேயே அ.தி.மு.க., பா.ஜ.க-வோடு பா.ம.க சமீப நாள்களாக சில மோதல் போக்கான கருத்துகளை எடுத்துவைக்கிறது” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஒரே மேஜையில் எடப்பாடி, பன்னீர்; தவிர்த்த கட்சிகள் - `ஆளுநர் மாளிகை-பொங்கல்’ உணர்த்தும் அரசியல் என்ன?

இந்த நிலையில், “இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை... ஆளுநர் மாளிகைப் பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு இல்லை... தமிழ் மாதம் இல்லை... தமிழ்நாடு இல்லை.... தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை. இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை!” என்று ஆளுநர் மாளிகைப் பொங்கல் விழா அழைப்பிதழை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.