ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்புக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, "சென்னையில் ரூ.260 கோடி மதிப்பில் 1,000 படுக்கை வசதிகள் கொண்ட தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம். அதை ஜூன் 3-ல் திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவரை அழைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
ஆனால், அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அணியினர் மக்கள் பிரச்னை குறித்து பேச டெல்லி செல்லாமல், தங்கள் உட்கட்சி பஞ்சாயத்தை சரி செய்ய டெல்லிக்கு அலைந்து வருகின்றனர். நான் அமைச்சராக பொறுப்பேற்றதும், பிரதமரை டெல்லியில் சந்தித்து 30 நிமிடங்கள் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினேன்.

அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என்பதே அவர்களின் கட்சிக்காரக்களுக்கே தெரியாது. எடப்பாடி தலைமையிலான அணி, ஓபிஎஸ் தலைமையிலான அணி, சசிகலா தலைமையிலான அணி, டிடிவி தினகரன் தலைமையிலான அணி, ஜெ.தீபா தலைமையிலான அணி என பல அணிகள் உள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் மேட்சை போன்று இந்த அணிகளை வைத்து ஒரு கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம்" என்றார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அக்ரஹாரம், கருங்கல்பாளையம் மற்றும் மரப்பாலம் ஆகிய மூன்று இடங்களில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், ஒரு இடத்தில் கூட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசவோ அல்லது அமைச்சர் உயதநிதி பேசும்போது அவரது அருகில் நிற்கவோ இல்லை.

வேனில் நின்றவாறு உதயநிதி மட்டும் பேசிவிட்டுச் சென்றார். காங்கிரஸ் தொண்டர்களையும், அக்கட்சிக் கொடிகளையும் இந்த மூன்று இடங்களிலும் பார்க்க முடியவில்லை.
எல்லையில் காத்திருந்த ஆட்சியர்:
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த உதயநிதி, அங்கிருந்து கார் மூலம் ஈரோடுக்கு சனிக்கிழமை மாலை வருகை வந்தார். ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் திமுகவினர் சார்பில் அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக முதல்வர் வருகையின்போதுதான் மாவட்ட எல்லையில் ஆட்சியர்கள் நின்று வரவேற்பது வழக்கம். இந்த முறை ஈரோடு மாவட்ட ஆட்சியர் உன்னிகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகிய இருவரும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் காத்திருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

அதேபோல் முதல்வருக்கு அளிக்கும் பாதுகாப்புக்கு நிகராக கோவை சரக டிஐஜி விஜயகுமார் தலைமையில் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேஷாங்சாய் தலைமையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.