ஜெர்மனி, பெல்ஜியத்தில் நுழைந்து அதை (கிட்டத்தட்ட) தன் வசமாக்கியது. "பெல்ஜியம் நடுநிலைமையாக நடந்துகொள்ளவில்லை" என்று ஒரு காரணத்தைக் கூறி சமாளிக்கப் பார்த்தது ஜெர்மனி. பிரிட்டன் இதை ஒத்துக்கொள்ளவில்லை. "உடனடியாக பெல்ஜியத்திலிருந்து உங்கள் படைகளைப் பின்வாங்கச் செய்யுங்கள். இல்லை என்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்" என்றது பிரிட்டன். பிரிட்டன் இப்படிக் கூறும் என்று ஜெர்மனி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் முன் வைத்த காலை பின்வைத்தால் அது அவமானம் என்று நினைத்தது ஜெர்மனி. தன் பிடிவாதத்தைத் தொடர்ந்தது.

ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனத்தைச் செய்தது பிரிட்டன். இதற்கு வேறொரு காரணமும் இருந்தது. பிரிட்டனும் பெல்ஜியமும் இதற்கு முன்பே ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தன. இதன்படி இப்போது பெல்ஜியத்துக்கு உதவிக்கு வரவேண்டிய கட்டாயம் பிரிட்டனுக்கு. பிரிட்டன் தன் ராணுவத்தில் ஒரு பகுதியை பெல்ஜியத்துக்கு அனுப்பியது. மற்றபடி போரில் தான் முழுவீச்சில் கலந்து கொள்கிறோமோ இல்லையோ போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது பிரிட்டன்.
ஆனால் போர்த் தளவாடங்களைத் தயார் செய்து வந்த உற்பத்திச் சாலைகள் போதிய அளவு வேகமாகச் செயல்படவில்லை. எனவே அரசு முழுவீச்சுடன் அவற்றை இதில் ஈடுபடச் செய்தது. துப்பாக்கிகள், மெஷின் கண்கள், பீரங்கிகள், போர் விமானங்கள் என்று தன் இருப்பைப் பல மடங்கு பலப்படுத்திக் கொண்டது.
பிரிட்டனும் போரில் இறங்குகிறது என்று அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பல பகுதிகளில் அதன் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு மையங்கள் உருவாகின. அவற்றில் இளைஞர்கள் திரண்டு நின்று தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டார்கள். போர்ப் பயிற்சிக்குத் தயாரானார்கள். நாடு முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பான விளைவை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ராணுவத் தளபதி மார்ஷல் கிச்னெர் எதிரில் இருப்பவரை (போஸ்டரைப் படிப்பவரை) பார்த்து விரலை நீட்டியபடி, 'உங்கள் நாட்டுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்' என்று கூறுவது போல் அமைந்திருந்தது அந்த போஸ்டர்.

முதலாம் உலகப் போர் தொடங்கியவுடன் மார்ஷல் கிச்னெருக்கு யுத்த அமைச்சர் என்ற பதவி வழங்கப்பட்டது. மற்ற பல நாடுகளும் யுத்தம் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்க இவர் மட்டும் அந்தப் போர் நீண்ட காலத்துக்கானதாக இருக்கும் என்பதைச் சரியாக அனுமானித்தார். போர் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு நடக்கும் என்று கிட்டத்தட்டச் சரியாகவே யூகித்தார். எனவே பிரிட்டிஷ் போர்த் தளவாடங்கள் அந்தக் காலகட்டத்துக்குத் தேவையான அளவு இருக்க வேண்டும் என்பதையும் பிரிட்டனுக்கு எக்கச்சக்கமான ராணுவ வீரர்கள் தேவைப்படுவார்கள் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். பெருமளவில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

என்றாலும் கூட 1915-ல் பிரிட்டனில் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இல்லாததை உணர்ந்த போது அதற்கு கிச்னெர் மீதே குற்றம் சுமத்தியது அரசு. காரணம் இது அரசியலில் எதிரொலித்து கூட்டணி அரசு உருவாகவும் காரணமாக அமைந்ததுதான். அதற்குப் பிறகு இவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் மக்கள் தங்கள் நாடு போரில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதில் இரண்டாகப் பிரிந்து நின்றார்கள். பிரிட்டன் அரசு ஒரு தந்திரம் செய்தது. பெல்ஜியத்தில் ஜெர்மன் ராணுவம் பலவித அட்டூழியங்களைச் செய்வதாக (நிறையக் கூடுதல் கதைகளையும் சேர்த்து) செய்தியைப் பரப்பியது. இதை அப்படியே பிரபல பத்திரிகைகள் வெளியிட்டன. மக்கள் நம்பினார்கள். "பாவம் பெல்ஜியம். நம் ராணுவம் அதற்கு ஆதரவாகச் செயல்படத்தான் வேண்டும்" என்று உருகினார்கள்.
இன்று பெல்ஜியத்துக்கு நேர்ந்தது நாளைக்கு பிரிட்டனுக்கும் நேரும் என்ற பிரசாரம் பெரும் பலனை அளித்தது. அதற்கு அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு மாதத்துக்கு ஒரு லட்சம் பேர் என்கிற அளவில் ராணுவத்தில் சேர்ந்தார்கள் (இது அதன் காமன்வெல்த் நாடுகளையும் சேர்த்த புள்ளி விவரம்).

பிரிட்டிஷ் ராணுவம் பிரான்சில் போரிட்டுக் கொண்டிருக்க, புதிதாக ஒரு பெரும் இளைஞர் படை பிரிட்டனில் தயாராகிக் கொண்டிருந்தது. தான் மட்டும் இல்லாமல் தன் காலனி நாடுகளில் உள்ள ராணுவ வீரர்களையும் போரில் தன் தரப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டது பிரிட்டன். தனது காலனி நாடுகளில் இதற்கான முயற்சிகளை அது வேகமாக முன்னெடுத்தது. ஆக, கடல் கடந்தும் தன் ராணுவப் படையைப் பலமாக்கிக் கொள்ளத் தொடங்கியது பிரிட்டன்.
பிரிட்டனின் காலனி நாடுகளில் பலவும் பிரிட்டனுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கின. இது அவர்களுக்குப் பெரும் பலமாக அமைந்தது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று!