இதுவரை குறிப்பிட்ட நாடுகள் எல்லாம் போதாது என்று நவம்பர் 5, 1914 அன்று வேறொரு நாடும் முதலாம் உலகப்போரில் நேரடியாகப் பங்குபெறத் தொடங்கியது. ஜெர்மனி அணிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய அந்த மிக முக்கியமான மற்றொரு நாடு துருக்கி. இது அப்போது ஒட்டோமான் சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்டது.
1908ல் மன்னர் சுல்தான் இரண்டாவது அப்துல் ஹமீது என்பவருக்கு எதிராகப் புரட்சி செய்து இளம் துருக்கியர்கள் (Young Turks) என்ற அமைப்பினர் துருக்கியின் ஆட்சியில் அமர்ந்தனர். அதற்கு முன்பு மன்னராட்சியாக இருந்த அந்தப் பகுதியை அரசியலமைப்பின்படி நடக்கும் அரசாங்கமாக மாற்றியதில் இந்த அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த நாட்டின் சரித்திரத்தில் முதல்முறையாகப் பல கட்சிகள் அமைந்த ஜனநாயகம் மலர்ந்தது.

இந்த இளம் துருக்கியர் அமைப்பின் மீது ஜெர்மனி ஒரு விதத்தில் அதிகாரம் செலுத்தியது எனலாம். ஏற்கெனவே ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் துருக்கிய ராணுவத்தில் நுழைந்து ராணுவப் பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் முதலாம் உலகப் போர் உண்டானபோது ஜெர்மனி அணிக்கு துருக்கி எனப்படும் ஒட்டோமான் சாம்ராஜ்யம் ஆதரவளிக்கத் தொடங்கியது.
இதுதான் தங்களுக்கும் பாதுகாப்பு என்றும் துருக்கியின் தலைவர் என்வெர் பாஸா (Enver Paşa) கருதினார். தங்களிடம் உள்ள ஜலசந்தி பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமிக்கக் கூடும் என்ற பயம் துருக்கிக்கு இருந்தது. எனவே துருக்கியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஹலீம் பாசா ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் 2 அன்று கையெழுத்திட்டு இருந்தார்.
இதன்படி ஆஸ்திரியா ஹங்கேரிக்கு ஆதரவாக ஜெர்மனி களம் இறங்கி, இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராகவும் ஜெர்மனி செயல்பட்டால் துருக்கி ஜெர்மனிக்கு ஆதரவளிக்கும். ஆகஸ்ட் 10-ம் தேதி கோபென் மற்றும் ப்ரெஸ்லூ (Goeben and the Breslau) என்ற இரு ஜெர்மானிய போர்க்கப்பல்கள் துருக்கியின் டார்டனெலெஸ் (Dardanelles) ஜலசந்தியை அடைந்தன. போரில் பங்கேற்காத (நடுநிலை வகிக்கும்) நாடுகள், போரில் பங்கேற்கும் நாடுகளின் போர்க்கப்பல்களை அனுமதிக்கக் கூடாது என்பது யுத்த விதி.
அதுவரை துருக்கி தான் போரில் பங்கேற்பதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லைதான். ஆனால் அது தந்திரமாக ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டது. மேற்படி இரண்டு போர்க்கப்பல்களையும் தான் வாங்கிக் கொண்டதாக அறிவித்தது (வணிகம் நடைபெறத் தடையில்லையே). ஆனால் அந்தக் கப்பல்களிலிருந்த பணியாட்கள் அனைவரும் ஜெர்மானியர்கள்தான்!

ஜெர்மனியிடமிருந்து தான் 'வாங்கி'யிருந்த கோபென் (SMS Goeben) என்ற போர்க்கப்பலை கருங் கடலில் செலுத்தி (இப்போது உக்ரைன் பகுதியில் அமைந்த, அப்போது ரஷ்யாவின் பகுதியாக விளங்கிய) ஒடெஸா துறைமுகத்தை அழித்தது. தவிர வேறு சில ரஷ்யத் துறைமுகங்களையும் சீர்குலைத்தது.
நவம்பர் 1, 1940 அன்று துருக்கியின் மீது போர்ப் பிரகடனத்தை அறிவித்தது ரஷ்யா. ஏற்கெனவே (அக்டோபர் மாதத்தில்) துருக்கி அரசு டார்டன்லஸ் என்ற தனது ஜலசந்தியை மூடியிருந்தது. இது ஐரோப்பியப் பகுதியையும் ஆசியப் பகுதியையும் இணைக்கும் ஜலசந்தி. இதை மூடியதன் காரணமாக கூட்டு நாடுகளின் போர்க்கப்பல்களால் அங்குப் பயணம் செய்ய முடியவில்லை. தவிர ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகங்களை உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தச் செயல் தனிமைப்படுத்திவிட்டது. ஏற்கெனவே நலிந்திருந்த ரஷ்யாவின் பொருளாதாரம் மேலும் தள்ளாடத்தொடங்கியது.
அது மட்டுமல்ல, தங்கள் எல்லைக்குள் வந்த பிரிட்டிஷ் கப்பல்களை (வணிகக் கப்பல்கள் உட்பட) துருக்கி தடுத்து நிறுத்தியது. நேச நாடுகள் கொந்தளிக்கத் தொடங்கின.
இதன் காரணமாக ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் துருக்கியின்மீது போர் தொடுப்பதாக அறிவித்தன. இன்றைய ஈராக்கின் பகுதியாகவும் அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியாகவும் இருந்த மெசபடோமியாவில் நடைபெற்ற போர் என்பதால் முதலாம் உலகப்போரின் ஒரு காலகட்டம் மெசபடோமியன் திட்டம் (The Mesopotamian Campaign) என்று அழைக்கப்பட்டது.
நேச நாடுகளின் இந்தத் திட்டம் மற்றும் தாக்குதலின் முக்கிய நோக்கம் பிரிட்டிஷ் இந்தியா, ரஷ்யாவுக்கான வணிகப் பாதை. அந்தப் பகுதியிலிருந்த பிரிட்டனின் வசம் உள்ள பெட்ரோலியக் கிணறுகள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

இந்தப் போர்த் திட்டத்தில் பிரிட்டன் தரப்பில் மிக அதிகம் கலந்து கொண்டது இந்திய ராணுவத்தினர்தான். இந்தியாவிலிருந்து பிரிட்டன் சார்பாக வந்திருந்த இந்திய ராணுவம் பாரசிக வளைகுடாவிலிருந்த பஸ்ரா நகரை நவம்பர் 21, 1914 அன்று ஆக்கிரமித்தது. ஆனால் டைக்ரிஸ் நதியைத் தாண்டிச் செல்ல முடியாததால் பிரிட்டிஷ் ராணுவம் தவித்தது. அங்கங்கே குழிகள் வெட்டி தங்கத் தொடங்கியது. உணவு மற்றும் ராணுவத் தளவாடங்களுக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம்.
(அதற்கு சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு (ஏப்ரல் 1915ல்) ஜெர்மனியின் படைத் தளபதி கொல்மர் வான் டெர் கோல்ட்ஸ் (Colmar von der Goltz) என்பவரின் கீழ் ஒரு பதில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் ஜெனரல் சார்லஸ் டெளன்ஷெட் என்பவரின் (General Charles Townshend) கீழ் அணி திரண்ட பிரிட்டிஷ் ராணுவம் தோற்கடிக்கப்பட்டது வேறு விஷயம்.)