அரசியல்
Published:Updated:

வாக்களித்த எங்களை ஏமாற்றுகிறது தி.மு.க! - கொதிக்கும் மீனவர் அமைப்புகள்

மீன்பிடி படகுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மீன்பிடி படகுகள்

ஒருபுறம் அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கம், மறுபுறம் தனியார் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பே செய்யாமல் திறந்துவிடும் ரசாயனக்கழிவுகள் கடலில் கலந்து மீன் இனங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, மீனவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்திருந்தது தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலிலும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கொதிக்கின்றன மீனவர் அமைப்புகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி, “மீன்பிடித் தடைக்காலத்தை 45 நாள்களாகக் குறைப்பது, தடைக்காலத்தில் நிவாரணத் தொகையாக ரூ.8,000, மீன்பிடிப் படகுகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் மானிய விலை டீசல் அளவை 1,800 லிட்டரிலிருந்து 2,000 லிட்டராக உயர்த்துவது, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது... என தி.மு.க கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதி எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மாண்டஸ் புயலில் 500 விசைப்படகுகளும், 1,000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் சேதமடைந்தன. இவற்றில் 133 விசைப்படகுகளுக்கும், 82 ஃபைபர் படகுகளுக்கும் மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.6,500 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தருகிறோம். ஆனால், பட்ஜெட்டில் ரூ.1,358.26 கோடிதான் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் அழிவுநிலையில் இருக்கின்றன. அங்கு தூண்டில் வளைவு அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், அரசு செவி சாய்க்கவில்லை. 35 சட்டமன்றத் தொகுதிகளிலும், 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எங்களின் வாக்குதான் வெற்றியை முடிவுசெய்யும். ஆனால், வாக்களித்த மீனவர்களான எங்களை ஏமாற்றுகிறது தி.மு.க அரசு” என்றார் சூடாக.

நாஞ்சில் ரவி, அனிதா ராதாகிருஷ்ணன்
நாஞ்சில் ரவி, அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் போஸ், “தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150 படகுகளை இலங்கை ராணுவம் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுக் கொடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருபுறம் அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கம், மறுபுறம் தனியார் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பே செய்யாமல் திறந்துவிடும் ரசாயனக்கழிவுகள் கடலில் கலந்து மீன் இனங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை கடற்கரையை நம்பியிருக்கும் 13 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும்படி, 81 கோடியில் பேனாவுக்கு சிலைவைக்கத் திட்டம்போட்டு, அதற்கு மத்திய அரசு அனுமதியையும் வாங்கிவிட்டார்கள். பட்டினப்பாக்கத்தில் மீனவர்களுக்காகக் கட்டப்பட்ட குடியிருப்பில் மீனவர்கள் அல்லாதவர்களைக் குடியமர்த்தும் வேலை ஜரூராக நடைபெறுகிறது. காலம் காலமாக `கச்சத்தீவை மீட்போம்’ என்கிறார்கள். இதுவரை என்ன முன்னெடுப்பு நடந்திருக்கிறது... தேர்தலின்போது வாக்குறுதிகளை அள்ளிவிடுகிறார்கள்; ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றையெல்லாம் மறந்துவிடுகிறார்கள்” என்றார் ஆவேசத்துடன்.

அ.தி.மு.க மாநில மீனவர் அணிச் செயலாளர் கோசுமணியோ, “நீலக்கொடி திட்டம் மூலமாக கடற்கரைகளைச் சர்வதேசத் தரத்துக்கு மாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கு கடலைத் தாரை வார்க்கும் இந்த நடவடிக்கை, மீனவ கிராம மக்களைப் பெரிதும் பாதிக்கும்” என்றார்.

மீன்பிடி படகுகள்
மீன்பிடி படகுகள்

தென்னிந்திய மீனவர் அணியின் தலைவர் பாரதி நம்மிடம், “கடலில் காற்றாலைகள் அமைப்பதாகக் கூறுவது மீன்பிடித் தொழிலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். சேது சமுத்திர திட்டத்தால், ஆறு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாராளுமன்றத்தில் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கிறார்கள். அதேபோல, தென்மாவட்ட கடற்கரையோரங்களில் புதைந்துகிடக்கும் அரியவகை கனிமங்களை, வணிக நோக்கில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த மத்திய அரசின் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இவையெல்லாம் மீனவர்களின் நலனுக்கு எதிரானவையில்லையா..?” என்று கொதித்தார்.

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, “மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ரூ.5,500-லிருந்து ரூ.6,500-ஆக உயர்த்தினோம். உடனே ரூ.8,000-ஆக அதிகரிக்க நிதி நிலை ஒத்துழைக்காது. மீனவர்கள் இறந்தால் உதவித்தொகையை ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக அதிகரித்திருக்கிறோம். சிங்காரவேலர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியிருக்கிறோம். மீனவர்களுக்கு, அ.தி.மு.க ஆட்சியைவிடக் கூடுதலாகத்தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருக்கிறோம். பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார்” என்றார்.

போஸ், கோசுமணி, பாரதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
போஸ், கோசுமணி, பாரதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டோம். “மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறோம். மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மானிய விலையில் வழங்கப்படும் டீசலை அதிகரிப்பது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். கடலுக்கு நடுவே காற்றாலை அமைப்பது மத்திய அரசின் திட்டம். இலங்கையில் மீட்கப்படாமல் இருக்கும் 120 படகுகளுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறோம். மீதமிருக்கும் படகுகளை மீட்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறோம். இது தவிர படகுகளுக்கான லைசென்ஸைப் புதுப்பிப்பதை ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறோம். காணாமல்போகும் மீனவர்களின் குடும்பத்துக்கு நாள்தோறும் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.250-லிருந்து ரூ.350-ஆக அதிகரித்திருக்கிறோம். இவையெல்லாம் தேர்தல் அறிக்கையில் சொல்லாதவை. தூத்துக்குடியில் துறைமுகம் வரும்போது முதலில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதேபோல் சேது சமுத்திர திட்டம் வந்தால் ஹப் போர்ட்டாக தூத்துக்குடி மாறிவிடும். மேலும், எங்கெல்லாம் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனப் பட்டியல் தயாரித்திருக்கிறோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.