
- கள்ளழகர் திருவிழா அசம்பாவிதப் பின்னணி!
``கடந்த ஆண்டு, கள்ளழகர் திருவிழாவில் இரண்டு உயிர்ப்பலிகள் ஏற்பட்ட பிறகும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் காட்டிய அலட்சியமே இந்த ஆண்டும் ஐந்து அப்பாவி உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள் மதுரை மக்கள்.
மே மாதம் 5-ம் தேதி மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் திருவிழாவின்போது ஆற்றில் மூழ்கி மூன்று பேரும், ஒருவர் கொலை செய்யப்பட்டும், மற்றொருவர் கூட்ட நெரிசலில் மயங்கியும் மரணமடைந்திருக்கும் சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நூற்றுக்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள், 5,000 போலீஸ்காரர்கள், விபத்து மீட்புப்படையினர், 350 கண்காணிப்பு கேமராக்கள், 50 கண்காணிப்பு கோபுரங்கள், டிரோன் கண்காணிப்பு... என அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டியும் நடைபெற்றிருக்கும் இந்த அசம்பாவிதம் குறித்து நம்மிடம் பேசிய ‘வைகை நதி மக்கள் இயக்க’த் தலைவர் வைகை ராஜன்,

“முன்பெல்லாம் வைகை கரையின் எந்தப் பக்கமிருந்தும் விழா நடக்கும் இடத்துக்கு மக்கள் வரலாம். ஆனால், இப்போது வைகையின் இரு கரையிலும் தடுப்புச்சுவர் கட்டி சாலை அமைக்கப்பட்டுவிட்டதே நெருக்கடிக்கு முதல் காரணம். அடுத்து, அழகர் ஆற்றில் இறங்கும் இடத்துக்கு அருகே ஆகாயத்தாமரை நீண்ட தூரத்துக்கு அடர்ந்துகிடந்தது. இதனால் ஆபத்து நேரலாம் என சுட்டிக்காட்டியும் மாவட்ட நிர்வாகம் அதை அப்புறப்படுத்தவில்லை. தற்போது மூன்று பேர் நீரில் மூழ்கி இறக்க அதுவே காரணமாகிவிட்டது. அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-யினர் எந்தவொரு சிரமமுமில்லாமல் குடும்பத்துடன் கள்ளழகரை தரிசித்துச் செல்ல வசதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் இடது பக்க நடைமேடையையும், கைப்பிடிச்சுவரையும் உடைத்து புதிய பாதையை ஏற்படுத்தியவர்கள், மக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கத் தவறிவிட்டனர்’’ என்றார் கோபமாக.
பா.ஜ.க வழக்கறிஞர் முத்துக்குமாரோ, “வி.ஐ.பி பாஸ்கள் அதிகளவில் கொடுக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பிலேயே போலீஸார் கவனம் செலுத்தியதே விபத்துக்குக் காரணம். எனவே, வரும்காலங்களில் வி.ஐ.பி-களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்’’ என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் விளக்கம் கேட்டோம். ‘‘திருடர்களைப் பிடிக்க ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 60 மஃப்டி போலீஸார்கள் கூட்டத்தில் ரவுண்ட்ஸ் வந்தார்கள். அதனால்தான் வழிப்பறியில் ஈடுபட்ட, அட்ராசிட்டி செய்த கும்பல்களை உடனே பிடிக்க முடிந்தது. கடந்த முறை கோரிப்பாளையத்திலிருந்து ஆற்றுக்கு வி.ஐ.பி-கள் செல்லும் வழியால்தான் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது என்ற காரணத்தால், இந்த முறை ஏ.வி பாலத்தின் கைப்பிடிச்சுவரை அகற்றி வி.ஐ.பி-களுக்கென்று தனி வழி ஏற்படுத்தினோம். ஆற்றிலிருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றச் சொல்லியும் பொதுப்பணித்துறையினர் செய்யவில்லை. அது மட்டுமன்றி விபத்து மீட்புப்படையினரும் எங்கள் உத்தரவுகளைக் கண்டுகொள்ளவில்லை’’ என்றார்.
மாறி மாறிக் குறை சொல்லிக்கொண்டிருக்காமல் தங்கள் தவறுகளை கண்டுபிடித்து, இனியும் அது தொடராமல் பார்த்துக்கொள்வார்களா ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்!