திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு காலை முதல் மாலை வரை சுமார் 12 பேர் சமையல் உள்ளிட்ட இதரப் பணிகளைச் செய்து வருகின்றனர். மேலும், அம்மா உணவகத்தில் தினமும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்னர் அம்மா உணவகத்துக்கு துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காகப் பயன்படுத்தப்படும் லோடு ஆட்டோ வாகனம் மூலம் அரிசி மூட்டைகள் வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாமர மக்கள், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோர், ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவுக்குப் பயன்படுத்தும் அரிசியை குப்பை வாங்க பயன்படுத்தும் மினி ஆட்டோவில் கொண்டுவந்த சம்பவம் பேருந்து நிலையத்திலுள்ள பயணிகள், பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. மேலும், இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து துறையூர் நகராட்சி பொதுப் பிரிவு மேலாளர் அம்பிகாவிடம் கேட்டபோது, "பொதுவாக அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான பொருள்களின் பட்டியலை எங்களிடம் அனுப்புவார்கள். நுகர்பொருள் வாணிப அலுவலகம் வாடகை வண்டி அமைத்து அந்தப் பொருள்களைக் கொண்டுசேர்க்கும். இதுதான் வழக்கமாக இருந்தது. சம்பவ நாளன்று வாடகைக்கு வண்டி ஏதும் கிடைக்காததால் நகராட்சி அலுவலகப் பணிக்கும், குடிநீர் வழங்கல் பணிக்கும் பயன்படுத்தும் மினி ஆட்டோ வாகனத்தை அரிசி வழங்கியதற்குப் பயன்படுத்தினோம். குப்பை அள்ளுவதற்காக இந்த வண்டி பயன்படுத்துவதில்லை. சமூக வலைதளங்களில் தவறுதலான கருத்துகளை சிலர் பரப்பிவிட்டனர்" என்று சமாளித்தார்.

ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த வண்டியில், "குப்பைகளைப் பிரித்துக் கொடுப்போம், தூய்மையான நகரை உருவாக்குவோம்" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓரிரு நாள்களிலேயே சென்னையில் ஓர் அம்மா உணவகம் தாக்குதலுக்கு உட்பட்டது சர்ச்சையானது. பின்னர் அம்மா உணவகங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்து போகும். இந்த நிலையில், திருச்சி துறையூரில் நடந்த இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.