Published:Updated:

`தமிழகம்’ முதல் ‘லோகோ’ வரை - ஆளுநர் ரவியின் அரசியல் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?!

ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழுக்குத் தேவையானது அரசியல் அதிகாரம். திருக்குறள் புத்தகத்தை அச்சடிப்பதில்லை” - ஆழி செந்தில்நாதன்

`தமிழகம்’ முதல் ‘லோகோ’ வரை - ஆளுநர் ரவியின் அரசியல் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?!

``தமிழுக்குத் தேவையானது அரசியல் அதிகாரம். திருக்குறள் புத்தகத்தை அச்சடிப்பதில்லை” - ஆழி செந்தில்நாதன்

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்குமிடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சனாதனம், இந்து தர்மம், மனுஸ்மிருதி, திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன, தெரிவித்தும் வருகின்றன. தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் தடைச் சட்ட மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா போன்றவற்றுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவருகிறார் என்கிற புகாரோடு, திமுக., அதன் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள் ஆர்.என் ரவியைத் திரும்பப் பெற குடியரசுத் தலைவருக்கு மனு அளித்திருந்தனர். இவ்வாறான தொடர் மோதல் போக்கின் உச்சக்கட்டமாக, கடந்த ஒன்பதாம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில பகுதிகளை ஆளுநர் தவித்துவிட்டு பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தச் சம்பவம் இன்னும் சூடு தனியாத விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பொங்கல் பண்டிகைக்கான அழைப்பிதழ்களை மாநில அரசின் முத்திரை இல்லாமல் மத்திய அரசின் முத்திரையுடன் அனுப்பி, தன்னை ‘தமிழக ஆளுநர்’ என்று குறிப்பிட்டு மற்றொரு போரையும் தமிழக அரசுமீது தொடுத்திருக்கிறார். வி.ஐ.பி-க்கள் மற்றும் மூத்த அரசுப் பிரமுகர்களுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட பொங்கல் அழைப்பிதழ் பலத்த எதிர்விளைவுகளைத் தூண்டியிருக்கிறது.

ஏனெனில், ஏப்ரல் 2022 -ல் நடைபெற்ற சித்திரைத் திங்கள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு அனுப்பப்பட்டவை உட்பட, ஆளுநர் அலுவலகத்திலிருந்து வந்த இதேபோன்ற அழைப்பிதழ்களில், ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் ராஜ்பவனிலிருந்து வந்த அழைப்பிதழ்களில் தமிழக அரசின் சின்னம் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கு மாறாக, சமீபத்திய அழைப்பிதழில் மத்திய அரசின் சின்னம் இடம்பெற்றிருக்கிறது. சித்திரைத் திங்கள் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிட்டிருந்த ஆளுநர் மாளிகை, இப்போதைய பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டையும் தவிர்த்திருக்கிறது. இதோடு நில்லாமல் கடந்த வாரம் தமிழ்நாட்டின் பெயரை ‘தமிழகம்’ என மாற்ற வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரையும் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது.

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

இது தொடர்பாக தன்னாட்சி தமிழகம் ஆழி செந்தில்நாதன், “தமிழ்நாடாவும், தமிழகமாகவும் இல்லாமல், வெறும் தட்சணை பிரதேசமாக எந்த அடையாளம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் விருப்பம். அதை முதலில் தமிழ்நாடு என்கிற பெயருக்கு எதிராக ஆரம்பித்திருக்கிறார்கள். நாளை தமிழகம் என்பதும் வேண்டாம் என்று சொல்வார்கள். தமிழ்நாட்டுக்கு, தமிழுக்கு எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்பதில் ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறார்கள். அதைத்தான் அவர்களின் பிரதிநிதியாக ஆளுநர் பிரதிபளிக்கிறார். அவர்கள் தமிழுக்கு என்று இப்போது செய்வதெல்லாம் உண்மையான நோக்கமாக இல்லாமல் பொய்யாக ஒவ்வொன்றும் செய்து வருகிறார்கள்.

தமிழுக்குத் தேவையானது அரசியல் அதிகாரம். திருக்குறள் புத்தகத்தை அச்சடிப்பதில்லை. தமிழ் மொழிக்கான ஆட்சிமொழி அங்கீகாரம் வேண்டும் என்பதும், எல்லா மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கையே ஒழிய, திருக்குறள் புத்தகத்தை அச்சிட்டு பத்து இடத்தில் கொடுப்பது என்பதில்லை. அது சாதாரண பப்ளிசரே பண்ணிடுவாங்க. தமிழ்நாடு, தமிழகம் இரண்டுமே ஒன்றுதான். அதென்ன தமிழ்நாடு வேண்டாம் தமிழகம் வேண்டும் என்று சொல்வது. இரண்டுமே இருக்கக் கூடாது என்பதற்கான ஆரம்ப திட்டம்தான் இது” என்கிறார்.

எஸ்.ஜி.சூர்யா
எஸ்.ஜி.சூர்யா

தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, “காசி தமிழ் சங்கமம் நிகழ்வை நல்லபடியாக நடத்தி முடித்ததற்கான பாராட்டு விழாவில் ஆளுநர் பேசும்போது எந்த இடத்திலும் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையாகவோ, கட்டளையாகவோ ஏதும் வைக்கவில்லை. அவருக்குத் தெரிந்த தமிழக இலக்கிய வரலாறுக்கு உட்பட்டு தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வது நல்லா இருக்கும் எனப் பேசியிருக்கிறார். அதேவேளையில் தமிழகம் என்கிற வார்த்தை ரொம்ப இயல்பாக உபயோகப்படுத்தப்படுவது. அதை வைத்து ஏன் இப்படி அரசியலாக மாற்றிவருகிறார்கள் என்பது தெரியவில்லை. சட்டப்படி பெயரை மாற்றுங்கள் என்று சொன்னால்தானே பிரச்னை. அதேபோல் ஆளுநர் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று வந்திருப்பதையும் அரசியலாக முன்னெடுக்கிறார்கள்.

ஆளுநர் அழைப்பிதழ்
ஆளுநர் அழைப்பிதழ்

இதற்கு முன் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்தபோது, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலத்தில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்றும், தமிழில் ‘தமிழக ஆளுநர்’ என்றுதான் அழைப்பிதழ் வந்திருக்கிறது. ஆளுநரின் முழு விஷயமும் மத்திய அரசின் வரம்புக்குள் இருக்கக்கூடிய ஒன்று. அந்த வகையில், இந்த அழைப்பிதழில் இந்திய இலச்சினை போடப்பட்டிருப்பதும் ப்ரோட்டகால் பிரகாரமாகதான் இருந்திருக்கும். ஒருவேளை இதற்கு முன் அவ்வாறு பின்பற்றப்படவில்லை என்றாலும், இப்போது அதில் மாற்றம் உண்மையாலுமே சட்டவிதிகளுக்கு உட்பட்டிருந்தால் அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படி இல்லாமல் தவறாக ஒருவேளை மாற்றப்பட்டிருந்தாலும் அதற்கான உரிய விளக்கம் ஆளுநர் தரப்பிலிருந்து அளிப்பார்கள் என நம்புகிறேன்” என்கிறார்.