போலீஸ் பணியில் சேர்பவர்கள் ஆரம்பகாலகட்டத்தில் முழு உடற் தகுதியுடனும், கட்டுக்கோப்பான உடலமைப்புடனும் வருகின்றனர். அதுவே, காலப்போக்கில் உடற்தகுதி என்பதையே மறந்துவிட்டு, அதிக உடல்பருமனுடன் இருக்கும் போலீஸாரை நாம் பார்க்கிறோம். அனைவரும் அப்படி இல்லையென்றாலும், அத்தகைய போலீஸார் இல்லையென்று முழுவதுமாக மறுக்க முடியாது.
இவ்வாறான சூழலில், அஸ்ஸாம் மாநிலத்தில் அதிக குடிப்பழக்கமுள்ள 300 போலீஸாருக்கு விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) வழங்க, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அஸ்ஸாம் காவல்துறையில் அடுத்தகட்டமாக, அதிக உடல்பருமன் மற்றும் ஃபிட்டாக (Fit) இல்லாத போலீஸாருக்கு விருப்ப ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அஸ்ஸாம் காவல்துறை இயக்குநர் ஜி.பி.சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், ``முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஐ.பி.எஸ்/ஏ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து டி.இ.எஃப்/பி.என்/ பிற அமைப்புகள் உட்பட அனைத்து அஸ்ஸாம் போலீஸாரின் உடல் நிறை குறியீட்டெண்ணை (BMI) பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி அனைத்து அஸ்ஸாம் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு, அதற்கடுத்த பதினைந்து நாள்களில் BMI மதிப்பீடு தொடங்கப்படும்.
அதன் பின்னர் உடல் பருமன் BMI அளவில் 30-க்கும் அதிகமாக இருக்கும் அனைவருக்கும் உடல் எடையைக் குறைக்க மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும். இறுதியில் தைராய்டு போன்ற உண்மையான மருத்துவக் காரணங்கள் இருப்பவர்களுக்கு மட்டும் விருப்ப ஓய்வு வழங்கப்படாது. இந்த நடவடிக்கையின் தொடக்கமாக ஆகஸ்ட் 16-ம் தேதியன்று அஸ்ஸாம் டிஜிபி முதல் ஆளாக BMI எடுப்பார்" என இன்று பதிவிட்டிருக்கிறார்.