கோடைக்காலத்தில் ஏ.சி பேருந்துகள் குறைப்பு! - என்ன சொல்கிறது அரசு போக்குவரத்துக் கழகம்?

தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழக ஏ.சி பேருந்துகளை சாதாரணப் பேருந்துகளாக நாங்கள் மாற்றிவருகிறோம் எனப் பரவிவரும் செய்தி தவறானது.
“தகிக்கும் கோடை வெயில் தமிழ்நாட்டையே சுட்டெரிக்கும்போது, இருக்கும் ஏ.சி பேருந்துகளையெல்லாம் நான் ஏ.சி பேருந்துகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது அரசு போக்குவரத்துக் கழகம்” என எழுந்திருக்கும் புகாரையடுத்து விசாரணையில் இறங்கினோம்.
இது குறித்து கும்பகோணம், திருச்சி - துவாக்குடி உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது, ``கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக எந்த ஏ.சி பேருந்தையும் தமிழ்நாடு அரசு வாங்கவில்லை. நிதிச்சுமையைக் காரணம் காட்டி, இருக்கும் ஏ.சி பேருந்துகளையும் முறையாகப் பராமரிக்கவில்லை. பல பேருந்துகளில் ஏர் கண்டிஷனிங் யூனிட் முழுமையாகச் செயலிழந்துவிட்டது. அதைச் சரிசெய்வதற்கு பயிற்சிபெற்ற பராமரிப்பாளர்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. கும்பகோணம் பணிமனையில் மட்டுமே பத்து சதவிகித அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி பேருந்துகள் செயல்படாமல் இருக்கின்றன. இந்தப் பேருந்துகளின் ஏ.சி., கண்ணாடிகள் அகற்றப்பட்டு சாதாரணப் பேருந்துகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. மாநகரப் பேருந்துகளிலும் ஏ.சி பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

இது குறித்து, ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் ஆறுமுகம் நம்மிடம், ``தமிழ்நாடு அரசிடம் ஏற்கெனவே குறைவான ஏ.சி பேருந்துகளே இருக்கின்றன. இந்த நிலையில், இருக்கும் ஏ.சி பேருந்துகளையும் பராமரிக்காமல் சாதாரணப் பேருந்துகளாக மாற்றினால், கோடைக்காலத்தில் பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நோக்கிப் படையெடுப்பார்கள். அங்கு அரசுப் பேருந்துகளைவிட இரண்டு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டுவருகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், அரசு போக்குவரத்துக் கழகமும்தான்” என்றார்.
இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் விளக்கம் கேட்டோம். ``தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழக ஏ.சி பேருந்துகளை சாதாரணப் பேருந்துகளாக நாங்கள் மாற்றிவருகிறோம் எனப் பரவிவரும் செய்தி தவறானது. கடந்த ஆண்டு கும்பகோணம் அரசுப் பேருந்து ஒன்று விபத்தில் மோசமாகச் சேதமானது. அதைச் சரிசெய்ய முடியாமல் போனதால், சாதாரணப் பேருந்தாக இயக்கலாம் என இன்ஜினீயர்கள் அட்வைஸ் செய்தனர். அதன்பேரிலேயே அந்த ஒரு ஏ.சி பேருந்து மட்டுமே சாதாரணப் பேருந்தாக மாற்றப்பட்டது. மற்றபடி வேறு எந்த ஏ.சி பேருந்தும் நான்-ஏசியாக மாற்றப்படவில்லை. எண்ணிக்கையையும் குறைக்கவில்லை. கொரோனா சிக்கல்களால்தான் கடந்த இரு ஆண்டுகளாக எந்தப் புதிய பேருந்தும் வாங்கப்படவில்லை. தற்போது ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 2,300 எலெக்ட்ரிக் பேருந்துகளும், தமிழ்நாடு அரசின் நேரடி நிதியில் 2,000 பேருந்துகளும் வாங்கவிருக்கிறோம். அதற்கடுத்த கட்டங்களில் ஏ.சி பேருந்துகளையும் கொள்முதல் செய்வோம்” எனத் தெரிவித்தார்.

ஏ.சி பேருந்துகளையே சரியாகக் கையாள முடியாத அரசு போக்குவரத்துக்கழகம், எலெக்ட்ரிக் பேருந்துகளை எப்படிக் கையாளப்போகிறதோ தெரியவில்லை!