Published:Updated:

`சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு' - திமுக., பாஜக-வின் நிலைப்பாடு என்ன?!

ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மறுபுறம் பாஜக ஆதரவு தெரிவித்திருக்கிறது.

`சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு' - திமுக., பாஜக-வின் நிலைப்பாடு என்ன?!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மறுபுறம் பாஜக ஆதரவு தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் 9-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பின்னர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து தனது உரையை வாசித்த ஆளுநர், அரசு வழங்கிய உரையில் சில வார்த்தைகளை, சில பகுதிகளைத் தவிர்த்தார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தீர்மானம் ஒன்றை வாசித்தார். அப்போது அவர், "தமிழக அரசால் ஆளுநருக்கு வரைவு உரை ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்கப்பட்டு, பின்னர் அச்சடிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிடப்பட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன. நமது `திராவிட மாடல்' கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டுவரும் ஆளுநரின் செயல்பாடுகள், ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும், சட்டப்பேரவை விதிகளை நாங்கள் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்கும் முன்னதாக எங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்யவில்லை.

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடும், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்திருக்கும் ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையிலும் நடந்துகொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமின்றி, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்துகொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாகவும், முழுமையாகவும் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, பேரவை மரபுகளை மீறியதும் ஆகும்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

எனவே, சட்டப்பேரவை விதி 17-ஐ தளர்த்தி, இன்று அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, படித்த பகுதிகள் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிகிறேன்" என்று தெரிவித்தார்.

பிறகு இந்த தீர்மானத்தைப் பேரவைத் தலைவர்  நிறைவேற்ற எழுந்தபோது, திடீரென பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். இதையடுத்து, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேசியகீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவையின் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மறுபுறம் பாஜக ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "சட்டப்பேரவையில் ஆளுநர் கண்ணியக் குறைவோடு நடந்துகொண்டார். அரசியலமைப்புச் சட்டம், ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கும் மாண்பையும், தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இருக்கும் கண்ணியத்தையும் குறைத்துக்கொள்கிற வகையில் நடந்துகொண்டிருக்கிறார். அது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அதனால்தான் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரைக்கும் இல்லாத நிகழ்வு. கேரளாவில் ஒரு நிகழ்வு இதுபோல் நடந்திருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - நாராயணன் திருப்பதி
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - நாராயணன் திருப்பதி

அப்போது ஆளுநருக்கு உடல்நலம் சரியில்லாததால் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் படிக்கவில்லை. பின்னர் உரையை சபாநாயகர் படித்தார். ஆனால், இதுபோல் யாரும் செய்தது இல்லை. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து ஆளுநர் உரை இருந்திருக்கிறது. அப்போது, `அந்த வார்த்தைகளை நான் படிக்க மாட்டேன். ஆனால், நீங்கள் வைத்துக்கொள்வதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார் அந்த மாநில ஆளுநர். கொள்கை விளக்கக்குறிப்பில் மாற்றம் செய்யப்பட்டதாக வரலாறு எங்கும் இல்லை" என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "தேசியகீதம் இசைக்கப்பட்டபோது ஆளுநர் வெளியேறவில்லை. முதல்வர் சட்டத்துக்குப் புறம்பாகவும், சட்டசபை விதிகளுக்குப் புறம்பாகவும் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் வெளியேறினார். அவர்கள் கூறுவது தவறு. இப்படிப் பொய் சொல்லியே பிழைப்பை ஓட்டுபவர்களை என்ன செய்வது?" என்று முடித்துக்கொண்டார்.