2023 -24-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை, சென்னை மாநகர மேயர் பிரியா, இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி, ``மாணவர்களின் படிக்கும் திறனை ஊக்கப்படுத்த, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண்கள் பெறும் பட்சத்தில், அவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 10 லட்ச ரூபாய் வரை ஒதுக்கப்பட்டு, தனி வழிகாட்டுதல் குறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
அதோடு சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 100 சதவிகித தேர்ச்சி அளிக்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வழங்கப்படும் ஊக்கத்தொகை 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சர்வதேச செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் `மாதிரி ஐக்கிய நாடுகள் சபை’ நடத்தப்படும்’’ என மேயர் அறிவித்துள்ளார்.

அதோடு சென்னையில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் வழங்க 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமையப்பெற்ற இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.