நெடுஞ்சாலை அலுவலகங்களில் முறைகேடாக செய்யப்படும் செலவுகள்... வீணாகும் மக்கள் வரிப்பணம்!

கடந்த ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் மீண்டும் வரக் கூடாது என்பதற்காகவே, தற்போது நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது, தமிழ்நாடு அரசு. ஆனால், “பல மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேவையில்லாத பொறியியல், தளவாடப் பொருள்களை வாங்கிக்குவித்து, அவற்றைப் பயன்படுத்தாமல் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்” என்று புகார் வாசிக்கிறார்கள் சில நேர்மையான அதிகாரிகள்.
இது தொடர்பாக பெயர் வெளியிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், “ஒவ்வோர் ஆண்டு பட்ஜெட்டின்போதும் நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கப்படும் நிதி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஊராட்சி சாலையை, மாவட்ட இதர சாலையாக மாற்ற வேண்டுமென்றால், அந்தச் சாலையில் குறிப்பிட்ட அளவுக்கு வாகனப் போக்குவரத்து இருக்க வேண்டும். ஆனால், வாகனப் போக்குவரத்து அதிகமிருப்பதாக போலி ரிப்போர்ட் தயார்செய்து, தகுதியற்ற சாலைகளை நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புக்குப் பரிந்துரை செய்கிறார்கள். ஒரு கி.மீ நீளமுள்ள ஊராட்சி சாலையைப் புதுப்பிக்க, ரூ.17 லட்சம் மட்டுமே செலவிட முடியும். ஆனால், அதே சாலையை நெடுஞ்சாலைத்துறை புதுப்பித்தால் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகளின் அழுத்தமும் இருக்கிறது. கமிஷனுக்காக கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த நடைமுறையை, இப்போதும் கச்சிதமாகத் தொடர்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 100.799 கி.மீ. நீள ஊராட்சி சாலைகள் 88 கோடியே 76 லட்சம்ரூபாய் செலவில் தரம் உயர்த்தலுக்காக நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சாலை மற்றும் பாலங்களைப் பரிசோதிக்க நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அவர்கள் சாலை மற்றும் கட்டுமானத்தின் தரத்தைச் சோதிக்க, பல லட்ச ரூபாய் செலவில் பொறியியல் கருவிகள் இருக்கின்றன. ஆனால், அதே கருவிகளை தேவையின்றி மாவட்ட அலுவலகங்களிலும் வாங்கிவைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். அதேபோல தேவையில்லாத இடங்களில்கூட தரக்கட்டுப்பாடு ஆய்வகக் கட்டடங்களைக் கட்டுவது, தளவாடப் பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது என பணத்தை விரயப்படுத்துவது வாடிக்கையாக இருக்கிறது. அரசு ஒதுக்கும் நிதியில், கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இப்படி முறைகேடாக வீணாக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் பின்னாலிருப்பது கமிஷன்தான்” என்றார் விரிவாக.
குற்றச்சாட்டுகள் குறித்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசினோம். “தகுதியில்லாத ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை கைவசப்படுத்தி, பணிகள் பார்ப்பதென்பது பழைய செய்தி. கடந்த ஆட்சியில்தான் இது போன்ற தவறுகள் நடந்தன.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் மீண்டும் வரக் கூடாது என்பதற்காகவே, தற்போது நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். போக்குவரத்து அதிகமுள்ள யூனியன் சாலைகள் தரம் உயர்த்தலுக்குத் தேர்வுசெய்யப்பட்டாலும், அதை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் பரிசீலித்து, முறையாக ஒப்புதல் வழங்க அரசின் கவனத்துக்கு அனுப்பிவைப்பார்கள். அதன் பிறகே அந்தக் கோப்புகள் துறைரீதியாக மாற்றம் செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை பணி செய்வதற்கான அரசாணை வெளியிடப்படும். அதேபோல தரக்கட்டுப்பாடு அலுவலகம் அந்தந்த டிவிஷனில்தான் செயல்படுகிறது. தாலுகாவாரியாக எங்கேயும் இல்லை. ஒருவேளை இருந்தால், பழைய பெயர்ப் பலகைகளை மாற்றம் செய்யாமல் யாரேனும் அலுவலகங்களைப் பயன்படுத்திவருவார்கள் என நினைக்கிறேன். சாலையின் தரம், உறுதித்தன்மை ஆகியவற்றை நானே நேரடியாகக் கள ஆய்வு செய்யும்போது, பரிசோதனை செய்வேன். அதில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக மறுசீரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுப்பேன்.
நெடுஞ்சாலைத்துறையில் அநாவசியமாக பொறியியல், தளவாடப் பொருள்கள் வாங்குவது கிடையாது. ஒவ்வொரு நிதியாண்டிலும் பணிகளைச் செய்து முடிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகூட, போதாது என்ற நிலைதான் இருக்கிறது. திட்டமிட்ட பணிகளுக்குக்கூட, போதுமான அளவு நிதி ஒதுக்க முடியவில்லை. தமிழகத்தின் நிதிநிலையைக் கருத்தில்கொண்டே நெடுஞ்சாலைத்துறைப் பணிகள் திட்டமிடப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு முழுக்க இருக்கும் 66 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளைப் பராமரிப்பதென்பது எளிதான காரியமல்ல.

எங்கள் துறையைப் பொறுத்தவரை தவறுகளைக் களைய, துறைசார்ந்து ஆடிட் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சென்னையிலிருக்கும் உயரதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அலுவலகக் கோப்புகள், M-புத்தகம் உட்பட அனைத்தையும் ஆய்வுசெய்ய அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர, முடிக்கப்பட்ட சாலைப் பணிகளும்கூட சரியான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என சென்சார் இயந்திரங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, திருப்தியிருந்தால் மட்டுமே இறுதி செட்டில்மென்ட் செய்ய பில் பாஸ் செய்யப்படும் என்று சட்டசபையிலேயே சொல்லியிருக்கிறேன். அதை விரைவில் செயல் வடிவத்துக்குக் கொண்டுவருவோம்” என்றார்.