இரண்டாண்டுகளை நிறைவுசெய்திருக்கும் தி.மு.க அரசு மாவட்டம்தோறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்தியது. மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், தி.மு.க அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லப்பட்டதாகவும் அறிவாலய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக சென்னை, பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பு, காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பெருமிதமடைந்திருந்தார். இரண்டாண்டு ஆட்சி நிறைவின் கொண்டாட்டங்களிலிருந்து வெளிவருவதற்குள் வேதனைக்குரிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கள்ளச்சாராயம்/விஷச்சாராயம் அருந்தி விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர் மரணித்திருக்கின்றனர். விற்கப்பட்ட சாராயத்தில் மெத்தனால் எனும் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி, தி.மு.க அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.
நேரில் சென்ற முதலமைச்சரும், அறிவிக்கப்பட்ட நிதியுதவியும்!
கள்ளச்சாராயம் அருந்தியதால் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரே நேரடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக 10 லட்சம் ரூபாய் வரை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

``தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அண்டை மாநிலங்களிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவதும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதால், சிலர் தொழிற்சாலையிலிருந்து விஷச்சாராயத்தைத் திருடி விற்றிருக்கின்றனர். இதன் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது” என விளக்கமளித்திருக்கிறார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.
கள்ளச்சாராயமும் கைதும்...
”கள்ளச்சாராய விவகாரத்தில் உள்ளூர் போலீஸாரில் தொடங்கி மாவட்ட எஸ்.பி மீதே துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. காவல்துறையே லஞ்சம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராய வியாபாரத்தைக் கண்டும் காணாமல் இருந்ததாகத்தான் தெரிகிறது. மதுவிலக்குப் பிரிவு எனத் தனிப்பிரிவு இருக்கிறதே... அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்...

வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா... என்ற கேள்வி எழுகிறது. இவ்வளவு அலட்சியமாக இருப்பதற்கு எதற்கு அந்தத் தனிப்பிரிவு. கலைத்துவிடலாமே?” எனக் கொதிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் உளவுத்துறைப் பிரிவின் மிகப் பெரும் தோல்வியாகவும் பார்க்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் பாக்கெட் சாராயம் விற்கப்படுகிறது என்பது பயணப்பட்டவர்களுக்குத் தெரியும்.
ஆனால், மதுவிலக்குப் பிரிவு காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் அவை தெரியாதா... மதுவிலக்குப் பிரிவு காவல்துறை தோல்வி, சட்டம்-ஒழுங்கு தோல்வி, உளவுத்துறையும் தோல்வி என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்... 20-க்கும் மேற்பட்டோர் மரணித்த சூழலில் நடவடிக்கையை விரைவுபடுத்தியிருப்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுதான். நிதியுதவியாக 10 லட்சம் ரூபாய் வழங்கியதென்பது கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் எங்கள் அரசு தோற்றுவிட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகப் பார்க்கிறேன்'' என்றார் காட்டமாக.
நம்முடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் “கள்ளச்சாராயம் இன்று நேற்று வந்ததல்ல, 1983-ம் ஆண்டு டாஸ்மாக் அமைக்க முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சொன்ன காரணம் கள்ளச்சாராய ஒழிப்பு. 2001-ல் 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைந்தனர். 2001-02 சமயங்களில் சென்னையில் 15 பேர் மரணமடைந்தனர். எல்லா ஆட்சிக்காலத்திலும் கள்ளச்சாராயம் வியாபாரம் ஜோராக நடந்துவருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிப் பிரமுகர்களே வியாபாரத்தில் ஈடுபடுவதும், காவல்துறையே உடந்தையாக இருந்துவருவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது” என்றார் வேதனையுடன்.

காவல்துறை செயல்பாடுகள் குறித்து வினவியபோது “காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய வியாபாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை. லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிக்கும் காவல் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கள்ளச்சாராயம் விற்பனை குறித்து எஸ்.பி வரை தெரியும்” என்றார் அதிர்ச்சி கிளப்பும் விதமாக.
``அதே சமயம் 2023 ஜனவரி முதல் இதுவரையில் 55,474 சாராய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 55,173 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு 1,077 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 79 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், 2 லட்சம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டிருப்பதாகவும் டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் மதுவிலக்கு போலீஸ் ஏதோவொரு ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால், இத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகும் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறதென்றால் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. கள்ளச்சாராயம் வழக்கில் கைதாகி வெளியே வந்து மீண்டும் அதே வியாபாரத்தில் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் கிளம்புகிறது. அடுத்த முறை கள்ளச்சாராயம் விற்க நினைக்காத வகையில் தண்டனைகள் இருந்திட வேண்டும். குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எத்தனால், மெத்தனால் போன்ற கெமிக்கல்கள் கள்ளச்சாராயத்தில் கலந்திருப்பதே காரணம் எனத் தெரிகிறது.

நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் எத்தனால், மெத்தனால் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எப்படிக் கிடைக்கிறது... விஷத்தன்மைகொண்ட கெமிக்கல் சர்வ சாதாரணமாகக் கிடைத்திருப்பது அதிர்ச்சியைக் கிளப்புகிறது. எத்தனால், மெத்தனால் நடமாட்டத்தை மிகத் தீவிரமாக அரசு கண்காணிக்க வேண்டும். மிக முக்கியமான ஒன்று அரசியல் பிரமுகர்கள் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுத்திடுவதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதிசெய்திட வேண்டும்'' என்கிறார் ப்ரியன்.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், காவல்துறைக்கு இந்த விவகாரம் குறித்து மிகத் தெளிவாகவே தெரியும் என்ற குற்றச்சாட்டுகள் மிகப் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தோற்றுப்போயிருக்கிறது தி.மு.க அரசு என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தைப் புறந்தள்ளவும் முடியாது. 20-க்கும் மேற்பட்ட உயிர்களை அலட்சியத்தால் பலிகொடுத்துவிட்டனர். காவல்துறை, மதுவிலக்கு காவல் பிரிவு, உளவுத்துறையின் தோல்வி என நேரடி விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலர்.