’சொன்னதைச் செய்தோம், செய்வதைச் சொல்வோம்’ என மேடைதோறும் முதலமைச்சர் முழங்கிவருகிறார். ஆனால், அதன்படி நடக்கிறார்களா… ஒரு திட்டம் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாகவும், வென்று ஆட்சியில் அமர்ந்த பிறகு அதன் வடிவம் வேறாகவும் மாறுகிறது. குறிப்பாக, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள பயிர், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வோம்’ என வாக்குறுதியளித்தனர். ஆனால், தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டி ’48,84,726’ நகைக் கடனாளிகளில் ’13,47,033’ பேருக்கு மட்டுமே தள்ளுபடியானது.
அதேபோல், பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததிலும் ’வருமான வரி செலுத்தாதவர்கள்’, 'அரசு வேலையில் இல்லாதவர்கள்' என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கோடிக்கும் குறைவானவர்கள்தான் பயனாளிகளாக இருப்பார்கள் என்பதை சமூக நலத்துறை அமைச்சரும் உறுதிசெய்கிறார். மேலும், சட்டசபையிலும் உழைக்கும் பெண்களுக்கும் இந்தத் திட்டம் சென்றடையும் என்னும் புது விளக்கத்தையும் முதலமைச்சர் கொடுத்தார். ஆக மொத்தத்தில் அனைவருக்கும் கிடைக்காது என்பது தெளிவாகிறது.

இவ்வாறு, தேர்தல் பிரசாரத்தின்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, வெற்றி பெற்ற பிறகு அதை வேறுமாதியாக மாற்றுகின்றனர். மேலும், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ‘உரிய பயனாளிகளுக்கு’ என்னும் போர்வையில் தகுதியானவர்களையும் ஒதுக்க தி.மு.க முயல்கிறது என்னும் விமர்சனம் எதிர்க்கட்சிகள் சார்பாக முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ``உரிய பயனாளிகளுக்குத் திட்டம் சென்றடைய வேண்டும் என்பதில் நிதித்துறை அமைச்சர் கவனமாக இருக்கிறார். இதனால், ஒவ்வொரு திட்டத்தின் பயனாளிகள் குறித்து முழு தரவுகள் இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்கிறார். யார் பரிந்துரைத்தாலும் வேலைக்கே ஆவதில்லை. இதனால், தரவுகள் சேகரித்து திட்டம் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஆட்சியில் அதிகரித்த நிதிச்சுமையைக் குறைக்க இருப்பிலுள்ள நிதியில் திட்டங்களைக் கொண்டுவர வேண்டுமென்றால் கெடுபிடி காட்டத்தான் வேண்டும்’’ என்கிறார்கள்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “நாங்கள் தொடங்கிய திட்டத்தைத் கிடப்பில் போட்டனர். சரி... அவர்கள் அறிவித்த திட்டத்தையாவது நிறைவேற்றுவார்களா என்று கேட்டால், அதுவும் நடக்கவில்லை. பொய் சொல்லி ஆட்சிக்கு வருவதில் தி.மு.க கைதேர்ந்த கட்சி. நீட் விலக்கை கிடப்பில் போட்டிருக்கின்றனர். அவர்களின் தேர்தல் அறிவிப்புகள் கட்டெறும்பாக இருந்தது. இப்போது தேய்ந்து சிற்றெறும்பாக மாறிவருகிறது. ஒரு தேர்தல் அறிக்கை என்பது குழு அமைத்து சாத்தியப்படும் திட்டங்களை ஆராய்ந்து அறிவிப்பதே. ஒரு சிறு கட்சியாக இருந்தால், நிதிநிலைமை பற்றி தெரியாது. அதனால் சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்தனர் எனச் சொல்லலாம். ஆனால், நான் நிதி அமைச்சராக இருந்தபோது பட்ஜெட் விளக்கப் புத்தகங்களை எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-விடம் வழங்கியிருக்கிறேன். அப்படியிருக்கும் நிலையில், நிதி நிலை தெரியாது, ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரியும் எனச் சொல்வது அபத்தம்.
’உரிமைத்தொகையைப் பொறுத்தவரை 2 கோடி பேருக்கு கொடுப்போம்’ என்றார்கள். ஆனால், அதில் விதிமுறைகள் கொண்டுவந்து, சில லட்சம் பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு ’நாங்கள் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டோம்’ என மார்தட்டிக்கொள்வார்கள். இப்படியாக விதிகள் இருப்பதை முன்பே விளக்கியிருந்தால் யாரும் வாக்களித்திருக்க மாட்டார்கள். பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றுவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நம்பிக்கைத் துரோகம்” எனச் சாடினார்.

இரட்டை நிலைப்பாடு, தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தான கருத்துகளைப் பத்திரிகையாளர் ப்ரியன் முன்வைக்க கேட்டோம். அவர், “எந்தக் கட்சியாக இருந்தாலும் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கும் திட்டங்களை ஆட்சிக்கு வந்த பிறகு, சில மாற்றங்களைக் கொண்டுவருவது வாடிக்கையானதே. அது உரிய பயனாளர்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தேர்தலின்போதே யாருக்கு திட்டம் என்பதைத் தெளிவாக அறிவிக்கும் பொறுப்பு கட்சிகளுக்கு இருக்கிறது. ஒரு திட்டத்தின் வாக்குறுதியை அளிக்கும்போது, அது நடைமுறை சாத்தியமா... என்பதை ஆராய வேண்டும். தி.மு.க அறிவித்த திட்டங்கள் அப்படியானதல்ல. அதனால் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த நிதியைக் காரணம் காட்டுகின்றனர். தற்போது முதல்வரும், அமைச்சர்களும் கடந்த ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்தானே!.. அவர்களுக்கு நிதி நிலைமை என்ன என்பது நன்றாகவே தெரியும். ’உரிமைத்தொகை திட்டம் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். ஆனால், அதைக் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்தான் எனச் சுருக்குவது அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் அளவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.

இது தொடர்பாகப் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயனிடம் பேசினோம். “மாநில அரசுக்கு தனியாக நிதி திரட்டும் சூழல் என்பது மிகக் குறைவு. அதன் அதிகாரம் அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. ஜி.எஸ்.டி போன்ற வருவாய் ஈட்டும் துறைகள் மத்திய அரசின் பிடியில் இருக்கிறது. இதை நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக தி.மு.க சுட்டுகிறது. ஆனால், தமிழகத்துக்கு பெரும் வருவாய் ஈட்டும் டாஸ்மாக் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தொடர்ந்து, யார் ஆட்சிக்கு வந்தாலும் மது விற்பனை, வருவாய் சமமின்மையில் இருக்கும் ஓட்டைகள் குறித்து விமர்சிக்கின்றனர்.

தி.மு.க-வின் சொந்தக் கட்சிக்காரர்களே டாஸ்மாக் பார் நடத்துவது ஊர் அறிந்த உண்மைதான். ஆனால், அதை ஒழுக்குப்படுத்த எந்தத் திட்டத்தையும் அரசுகள் கையாளுவதில்லை. அதேபோல், (இயற்கை) கனிம வளங்களைக் கொண்டு நிதியைப் பெருக்குவதில் அரசிடம் இருக்கும் திட்டங்கள் என்ன... இதை முற்றிலுமாக சீரமைத்தால் நிதிப் பிரச்னையைக் குறைக்க முடியும்” என்றார்.
இது குறித்து தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தியிடம் கேள்வியெழுப்பியபோது, ”பல ஆண்டுகளாகவே தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்று சேருவதற்குப் பதிலாக ’அனைவருக்குமான திட்டம்’ என்னும் அடிப்படையில் நிதி வீணாக்கப்பட்டது. தமிழகத்தில் நிலவும் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு வல்லுநர்கள் அறிவுறுத்தல்படி நிதி விரயமாவதைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதால் திட்டங்களுக்கு சில விதிகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

நிதிப் பிரச்னை இருப்பது உண்மையென்றாலும், நிதி விரயமாகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதில் விதிவிலக்காகத் தகுதியுடையவர்கள் நிராகரிக்கப்படும் நிலையில், அதை முதல்வர், அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் பார்வைக்குக் கொண்டுவரலாம். அப்போது விதியைக் காரணம் காட்டி நலத்திட்டத்தை உரியவர்களுக்கு வழங்கக் கூடாது என்பது அரசின் நோக்கமல்ல” என்றார்.