
ஏப்ரல் 24-ம் தேதி ரெய்டு தொடங்கியபோது, பாலாவை ‘ரீச்’ செய்ய முடியவில்லை. காலை 8 மணிவாக்கில்தான் அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து ரெய்டு நடைபெற்ற இடத்துக்கு வரவழைத்தோம்.
யாரும் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் நுழைந்திருக்கிறது வருமான வரித்துறை. ஏப்ரல் 24-ம் தேதி காலை 6 மணியிலிருந்து, ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனைகள் தடதடக்கின்றன. ஜி ஸ்கொயருக்கும், முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதைத் தொடர்ச்சியாக ஜூ.வி எழுதிவந்திருக்கிறது. குறிப்பாக, 31-01-2022 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘மாப்பிள்ளை ‘இடம்’ வாங்க சொன்னார்! - மிரட்டப்படும் நில உரிமையாளர்கள்...’ என்கிற தலைப்பில் வெளியான கட்டுரை, அதிகார வட்டத்திலிருந்தவர்களின் விழிகளை மிரட்சியாக்கின.

நமது கட்டுரை வெளியாகி ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், ‘ஜி ஸ்கொயரை’ குறிவைத்து இறங்கியிருக்கிறது ஐ.டி. இந்தச் சோதனையில் சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜா, சபரீசனின் உறவினர் பிரவீன், அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகன், மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோரும் சிக்கியிருக்கிறார்கள். புதிதாக மேலும் சிலரையும் இந்த ரெய்டு வளையத்துக்குள் கொண்டுவரத் தீவிரமாகிறது ஐ.டி. என்ன நடக்கிறது இந்த ரெய்டில்?
ஜி ஸ்கொயரின் நிறுவனரான பாலாவின் ஒரிஜினல் பெயர் ராமஜெயம். திருப்பூரில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தியதில் பண முறைகேடு விவகாரத்தில் சிக்கி, சென்னைக்குத் தப்பிவந்த அவர் பின்னாளில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கின் நட்பு கிடைத்த பிறகு, பாலாவுக்கு சுபிட்சம் கிடைத்தது. ஆனால், தொழில்ரீதியாகப் பெரிய வளர்ச்சியில்லாமல் இருந்தார். 2020, 2021 காலகட்டங்களில், அவரின் ஜி ஸ்கொயர் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததாகச் சொல்கிறது அந்த நிறுவனத்தின் ஆடிட் ரிப்போர்ட். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. சமீபத்தில் தி.மு.க-வின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இரண்டே வருடங்களில் 38,827 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஜி ஸ்கொயர் பெற்றது எப்படி?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். முதலமைச்சரின் மருமகனுக்கும் ஜி ஸ்கொயருக்குமிடையேயான தொடர்புகளை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில்தான், வருமான வரித்துறை ரெய்டு வளையம் ஜி ஸ்கொயரைச் சூழ்ந்திருக்கிறது.

இந்த ரெய்டில் பங்கேற்றிருக்கும் சில அதிகாரிகளிடம் பேசினோம். “ஏப்ரல் 24-ம் தேதி ரெய்டு தொடங்கியபோது, பாலாவை ‘ரீச்’ செய்ய முடியவில்லை. காலை 8 மணிவாக்கில்தான் அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து ரெய்டு நடைபெற்ற இடத்துக்கு வரவழைத்தோம். ஆடிட்டர் சண்முகராஜாவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து மடக்கி, சென்னைக்கு அழைத்து வந்தோம். இவர்களின் அலுவலகம், வீட்டில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. சேலத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரிடம் வண்டல் மண் தொடர்பாக நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி சில துண்டுச்சீட்டுகள் சிக்கியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து, அந்தப் பிரமுகரின் கிரீன்வேஸ் சாலை இல்லத்திலும் ரெய்டு நடந்தது. இந்த மண் விவகாரத்தில் பெரும் பூதங்கள் கிளம்பலாம்.

ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடத்தில் நடத்தப்படும் சோதனையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற விவரம் ஏதும் இருக்கிறதா எனத் தேடுகிறோம். முதல்வர் துபாய் பயணம் செல்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக, துபாய்க்குச் சென்ற ஆடிட்டர் சண்முகராஜா, லூலூ நிறுவனத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது... சபரீசன் தொடர்ச்சியாக வெளிநாடு செல்வது ஏன்... என்பதையெல்லாம் விசாரிக்கிறோம். தற்போது ஆடிட்டர் சிக்கியிருக்கிறார். விரைவில் சபரீசனுக்கும் சிக்கல்தான். இனி அடுத்தடுத்து பல திருப்பங்கள் அமையப்போகின்றன” என்றனர் பீடிகையுடன்.
“ஜி ஸ்கொயருக்கும், முதல்வர் குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதை அந்த நிறுவனமே சொல்லிவிட்டது. தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக ரெய்டை ஏவிவிட்டிருக்கிறது பா.ஜ.க” எனக் கொதிக்கிறார்கள் தி.மு.க வட்டாரத்தில். இந்த வருமான வரித்துறை ரெய்டுகளால், மேலிடக் குடும்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ரெய்டுகள் தொடங்கியபோது, லண்டனில் இருந்தார் சபரீசன். “இனிமேல் யாரும் போனில் பேசக் கூடாது. ஐபோன் ஃபேஸ்டைமில்தான் பேச வேண்டும்” என்ற கட்டுப்பாடு மேலிடக் குடும்பத்துக்குள் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, ஆடிட்டர் சண்முகராஜாவிடம் உதவியாளராக இருந்த ‘அம்மன்’ பெயர் கொண்டவரை விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் வருமான வரித்துறை. அவர்தான் துறைவாரியாக பல டெண்டர் விவகாரங்களைக் கையாண்டவர் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். “அந்தப் பெண்மணி வாக்குமூலம் கொடுத்தால், ஆடிட்டருக்கு மட்டுமல்ல, சபரீசனுக்கும் சனிப்பெயர்ச்சிதான்” என்கிறது வருமான வரித்துறை வட்டாரம். ஜி ஸ்கொயரில் நடக்கும் சோதனையில், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தரவுகளைச் சேகரித்து, அமலாக்கத்துறை வசம் வழக்கு பதிவுசெய்யத் தீவிரமாகிறது டெல்லி. சபரீசன் சென்னைக்குத் திரும்பியவுடன், அவரும் விசாரிக்கப்படலாம்.
தி.மு.க மேலிடக் குடும்பத்தை டெல்லியின் கயிறுகள் இறுக்க ஆரம்பித்திருக்கின்றன. அரசியல் காய்நகர்த்தலில், கயிறு மேலும் இறுகுமா அல்லது அறுபடுமா என்பதெல்லாம் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.