திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சவளக்காரன் கிராமத்தில் இயங்கிவருகிறது அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்கள் தங்கிப் பயிலும் பள்ளி கட்டடமானது இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்துவந்தது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னை தொடர்பாக 08.01.2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் "உதவி கோரும் முதல்வரின் சொந்த ஊர் மக்கள்.. ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி" என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே மாணவர்களின் இந்தப் பிரச்னை மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கவனத்துக்குச் சென்றது. பிறகு மாவட்ட ஆட்சியரின் நேரடி உத்தரவின் பேரில் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு பள்ளியின் நிலை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்தது. அதில், மாணவர்கள் ஆபத்தான நிலையிலுள்ள பள்ளிக் கட்டடத்தில் கல்வி கற்றுவந்ததும், மாணவர்களுக்கு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படாமலிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆபத்தான கட்டடத்தில் கல்வி கற்ற மாணவர்கள் வேறு ஒரு கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, தற்போது அந்தப் பள்ளிக் கட்டடமானது முழுமையாக இடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையானது தூய்மை செய்யப்பட்டும், புதிதாக விளையாட்டு மைதானம் ஏற்படுத்தித் தர பள்ளிக்கு அருகிலுள்ள நிலம் வைத்திருக்கிற விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.

இது தொடர்பாகப் பேசிய அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ``நாங்க எத்தனையோ முறை எங்க ஊரு பள்ளிக்கு நல்ல கட்டடம் கட்ட தரச் சொல்லியும், அடிப்படை வசதிகள் கேட்டும், முதல்வரிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் வரைக்கும் மனு அனுப்பியும், யாருமே மாணவர்களோட இந்தப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கல..! ஆனா, கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஜூனியர் விகடன் புத்தகத்துல எங்க ஊரு பள்ளிக்கூடத்துல இருக்குற பிரச்னைகள் பத்தி செய்தி வந்துச்சி..! அதன் பிறகு நிறைய அரசு அதிகாரிகள் எங்க ஊரு பள்ளிக்கூடத்துக்கு வந்து ஆய்வு பண்ணிட்டுப் போனங்க, இப்போ எங்க பிள்ளைங்க படிச்சிட்டுருந்த ஆபத்தான கட்டடமெல்லாம் இடிச்சு தரைமட்டமாக்கப்பட்டிருக்கு..! ஜூனியர் விகடன் செய்தியாலதான் எங்க ஊரு பள்ளிக்கூடத்துக்கு இப்போ விடிவுகாலம் பொறந்திருக்கு..! சவளக்காரன் கிராம மக்கள் சார்பாக ரொம்ப நன்றி” என்றனர்.