தமிழக கடல் வளத்தை காவு வாங்கும் அந்நிய கடல் பாசி... துரித நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?

மன்னார் வளைகுடாவில் மொத்தமுள்ள 21 தீவுகளில், வாளை, தலையாரி, குருசடை, பூமரிச்சான், சிங்கிலி, முல்லி ஆகிய ஆறு தீவுப் பகுதிகளிலுள்ள பவளப்பாறைகள் இந்த அந்நிய கடல் பாசியால் பெருமளவில் அழிந்திருக்கின்றன.
‘‘நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கட்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கங்கள் கொண்டுவந்த பல திட்டங்கள், மண்ணுக்கும் மக்களுக்கும் கெடுதல் விளைவித்துச் சென்ற வரலாறு உண்டு. அந்நிய மரங்கள், அந்நிய மீன் இனங்கள், அந்நிய விதைகள் பல, நாட்டு இனங்களை அழித்துவருதோடு மீட்டுருவாக்கம் செய்ய முடியாத பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், `கப்பாபைகஸ் அல்வரெஸி’ (Kappaphycus alvarezii) எனும் அந்நிய கடல் பாசியினம் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தமிழகக் கடல் வளத்தையே சூறையாடிவருகிறது’’ என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
பிலிப்பைன்ஸை தாயகமாகக்கொண்ட `கப்பாபைகஸ் அல்வரெஸி’ எனும் அந்நிய கடல் பாசியை வணிக நோக்கில் வளர்த்தெடுக்கும் திட்டத்தை 1995-ம் ஆண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடல்பகுதிகளில் மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனமும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து செயற்கையாக இந்தக் கப்பாபைகஸ் கடல் பாசியைப் பயிரிட்டன. அதிலிருந்து கிடைக்கும் `கேராஜீனான்’(Carageenan) எனும் வேதிப்பொருளுக்கு, பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில் பெருமளவு டிமாண்ட் இருப்பதால், இதை வளர்த்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டலாம் எனவும், மீனவப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரலாம் எனவும் இந்திய அரசு திட்டமிட்டது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் அரசுக்குக் காத்திருந்ததோ பேரதிர்ச்சி.

“மன்னார் வளைகுடாவில் எங்கெல்லாம் இந்த அந்நிய கடல் பாசிகள் பயிரிடப்பட்டனவோ அங்கிருந்து அவை பல கிலோமீட்டருக்குப் பரவி, சுற்றியிருக்கும் பவளப்பாறைகளையெல்லாம் அழித்தொழித்தன. குறிப்பாக, இந்த கடல் பாசியின் தாக்கத்தால் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் `அக்ரோபோரா பவளப்பாறைகள்’ கொத்துக் கொத்தாக அழிந்திருக்கின்றன. இந்த பாதிப்புகளை 2008-ம் ஆண்டிலேயே கடல் ஆராய்ச்சியாளர்களும், வனப் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், தற்போதுவரை எந்தவிதத் தீவிர நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை; இதனால் பல சதுர கிலோமீட்டருக்கு அந்நிய கடல் பாசிகள் பரவிவிட்டன” எனக் குற்றம்சாட்டுகிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான மருத்துவர் புகழேந்தி.
இது குறித்து மேலும் பேசிய அவர், ``மன்னார் வளைகுடாவில் மொத்தமுள்ள 21 தீவுகளில், வாளை, தலையாரி, குருசடை, பூமரிச்சான், சிங்கிலி, முல்லி ஆகிய ஆறு தீவுப் பகுதிகளிலுள்ள பவளப்பாறைகள் இந்த அந்நிய கடல் பாசியால் பெருமளவில் அழிந்திருக்கின்றன. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) கப்பாபைகஸ் கடல் பாசியை ஆபத்தான ஊடுருவும் உயிரினம் (Dangerous Invasive Species) என வரையறுத்திருக்கிறது. இந்தக் கடல் பாசி, பவளப்பாறைகள்மீது முழுமையாகப் படர்ந்து, ஒளிச்சேர்க்கை நடைபெறவிடாமல் தடுக்கிறது. இதனால் அரியவகை மீன்கள், இறால்கள், நத்தை, நண்டுகள், கணுக்காலிகள், கடல் அட்டைகள் எனப் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் உணவு மற்றும் இனப்பெருக்கப் புகலிடமான `அக்ரோபோரா பவளப்பாறைகள்’ அழிவைச் சந்தித்திருக்கின்றன.
கடந்த 2019-ல் `கைகளால்’ கப்பாபைகஸை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், வெறும் 2% மட்டுமே அவர்களால் அகற்ற முடிந்தது. மேலும், அவர்களின் `மேனுவல் ரிமூவ்’ எனும் கையால் அகற்றும் முறை அபத்தமானது. அவ்வாறு அகற்றும்போது, கப்பாபைகஸ் பல துண்டுகளாகச் சிதறி, இன்னும் அதிகமான இடங்களுக்குப் பரவக்கூடும். எனவே, கைகளால் நீக்கப்படும் முறைக்கு பதிலாக, அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் பயன்படுத்தப்படும் உறிஞ்சு இயந்திரம் மற்றும் `கலெக்டர் அர்ச்சின்’ என்ற உயிர்ம பாதுகாப்பு முறைகளின் மூலம் இந்த அந்நிய கடல் பாசியை முற்றிலும் அகற்ற வேண்டும். அந்நிய ஊடுபயிரான கருவேலமரத்தை அழிக்க அரசாங்கம் எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறதோ அதைவிட மோசமான கப்பாபைகஸை அகற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாகச் செயல்பட வேண்டும்” என்றார் விரிவாக.
தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பழ.செல்வகுமாரிடம் பேசினோம். ``சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கட்டுரையை நானும் படித்தேன். அந்நிய கப்பாபைகஸ் கடல் பாசியால் தமிழகக் கடல் வளம், மீன் வளம் அழிந்துவருவது உண்மைதான். இந்த விவகாரத்தை உடனடியாகத் தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வோம். ஏற்கெனவே தி.மு.க அரசு, கடற்புறச் சூழலியலைப் பாதுகாக்க ரூ.2,000 கோடியில் `தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தை’ தொடங்கியிருக்கிறது. இதன் மூலம், மன்னார் வளைகுடா பகுதி உட்பட தமிழகத்தில் பல்வேறு கடலோர மாவட்டங்களில், பல கோடி செலவில் செயற்கை பவளப்பாறை அலகுகளை அமைக்கவிருக்கிறோம். அதேபோல, செயற்கை கடல் புல்வெளிகளை உருவாக்குவதற்காக சுகந்தி தேவதாசன் நிறுவனத்துக்கு ரூ.96 லட்சம் ஒதுக்கியிருக்கிறோம். சுற்றுச்சூழல் புரிதலோடு இயங்கும் தி.மு.க அரசு, பவளப்பாறைகளைக் காப்பதற்கு உண்டான முயற்சிகளையும் நிச்சயம் மேற்கொள்ளும்” என்றார்.

நமது கேள்விக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு எழுத்துபூர்வமாக அளித்த விளக்கத்தில், ``மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவில், கப்பாபைகஸ் கடல் பாசி ஊடுருவதைத் தடுக்க, வனத்துறையினர் பவளப்பாறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களின் மூலம் தமிழ்நாடு வனத்துறை கப்பாபைகஸைத் தொடர்ந்து அகற்றிவருகிறது. குறிப்பாக, 2021-22 ஆண்டுகளில் 39 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், 2022-ல் 878 ச.கி.மீட்டர் பரப்பளவிலும் கப்பாபைகஸ் அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 2023-ம் ஆண்டில் `பவளப்பாறைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை’ திட்டத்தின் கீழ், 3,000 ச.கி.மீட்டருக்கு கப்பாபைகஸை அகற்ற முன்மொழியப்பட்டிருக்கிறது. தற்போது பவளப்பாறைகளுக்கு பாதிப்பு இல்லாமலும், கடல் பாசி பரவாத வகையிலும் ஸ்கூபா டைவிங் முறையில், பெண்களும் மீனவர்களும் இந்தக் கடல் பாசியை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பாபைகஸை முழுமையாகக் கட்டுப்படுத்த, வருடாந்தர நீக்கமும், தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசியமாகின்றன. எனவே, புதிய வியூகம் தயாரிக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
தாமதமாக, தாமதமாக... பாதிப்பும் செலவும் கன்னா பின்னாவென அதிகரித்துவிடும்!