கர்நாடகா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த IAS ரோகிணி சிந்தூரிக்கும், கைவினைப்பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ரூபாவுக்குமிடையே, சமூக வலைதளத்தில் ஏற்பட்டிருந்த ஊழல் புகார் சண்டை, மாநிலம் முழுவதிலும் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.
முதற்கட்டமாக ரூபா, ரோகிணி சிந்தூரியின் சில தனிப்பட்ட படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, ‘‘ரோகிணி சிந்தூரி பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு தனது தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்புகிறார். வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்ப்பது என, பல ஊழல்களைச் செய்திருக்கிறார். ஆனால், அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. இதுவரை பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குடும்பம் சீரழிந்திருக்கிறது’’ என ரூபா கூறியது பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த ரோகிணி சிந்தூரி, ‘‘ரூபா ஒரு மன நோயாளி, அதனால்தான் இப்படியெல்லாம் பதிவிடுகிறார்’’ எனக் கூறியிருந்தார். விஷயம் அரசியல் களத்தில் அணுகுண்டுபோல் வெடிக்க, கர்நாடகா அரசு இருவரையும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, இருவரும் இது தொடர்பாக பொதுவெளியில் பேசத் தடைவிதித்து, சுமுகமாகப் பிரச்னையை முடித்துக்கொள்ள வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தது.
இப்படியான நிலையில், ஐ.ஏ.எஸ் ரோகிணி பெங்களூரு சிவில் கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக, மானநஷ்ட வழக்கு பதிவுசெய்து, ‘‘என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை ரூபா சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், ரூ.1 கோடி ரூபாய் நஷ்டஈடு அவர் வழங்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரோகிணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் படங்கள், தகவல்களை வெளியிடக் கூடாது என, ரூபா, கூகுள், மெட்டா தளங்கள் என, 59 ஊடகங்களுக்குத் தடைவிதித்தது.

இதற்கு எதிராக ரூபா உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுமீது, நேற்று முன்தினம், விசாரணை நடந்தது. அப்போது, ரூபா தரப்பில் ஆஜரான வக்கீல் மதுக்கர், ‘‘ரோகிணி சிந்தூரி பதிவுசெய்த வழக்கில், சட்டப்படி இடைக்காலத்தடை குறித்த அறிவிப்பு, இதர ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அவர் எந்த ஆவணமும் சமர்ப்பிக்காததால், இடைக்காலத்தடையை ரத்துசெய்ய வேண்டும்" என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ரூபா மீதான இடைக்காலத்தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.
இடைக்காலத்தடை நீக்கம் செய்யப்பட்டதால், IAS ரோகிணி மீது IPS ரூபா மீண்டும் ஏதேனும், ஊழல் புகார்களை முன்வைப்பாரா... இல்லை, அரசின் வாய்மொழி உத்தரவைப் பின்பற்றி பிரச்னையை சுமுகமாக முடித்துக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.