அலசல்
Published:Updated:

பச்சைக்கொடி காட்டும் துரைமுருகன்... சிவப்புக்கொடி ஏந்தும் சிவசேனாதிபதி...

ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால்

- கீழ்பவானி விவகாரத்தில் தி.மு.க குஸ்தி!

ஈரோடு, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதில், ‘ஆதரவு - எதிர்ப்பு’ என தி.மு.க-வுக்குள்ளேயே எதிரெதிர் நிலைப்பாடு நிலவுவதால், விவகாரம் வில்லங்கமாகிவருகிறது!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ நீளம் கொண்டது. இந்த வாய்க்காலின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைத்தால் நீர்க்கசிவைத் தடுத்து, கடைமடை விவசாயிகளும் முழு அளவில் பயன்பெற முடியும் எனக் கூறி சீரமைப்புப் பணிகளுக்காக 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என விவசாயிகளே இரண்டுபட்டு நிற்கின்றனர்.

இந்தத் திட்டத்தைத் தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகிறார் தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி. அதேநேரம் திட்டத்தைச் செயல்படுத்துவதில், அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டிவருகிறார். ஆளுங்கட்சி நிர்வாகிகளே இப்படி எதிரும் புதிருமான நிலைப்பாடு எடுத்திருப்பதால், திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகக் குமுறுகின்றனர் விவசாயிகள்.

துரைமுருகன், சிவசேனாதிபதி...
துரைமுருகன், சிவசேனாதிபதி...

இது குறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கி.வெ.பொன்னையன் நம்மிடம் பேசுகையில், ‘‘கீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை மே 1 அன்று தொடங்கக் கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி திட்டம் நிறைவேற்றப்படவில்லை. திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளே எதிரெதிர் அணிகளாக முரண்பட்டு நிற்பதுதான் இந்த நிலைமைக்கான காரணம்.

அரசாணை 276-ன்படி, 200 கி.மீ வாய்க்காலில் 160 இடங்களில் பழுதடைந்திருக்கும் மதகுகள், கீழ்நிலை நீர்வழித்தடங்களைப் பராமரிக்கவும், மண் அரிப்பால் நீர்க்கசிவு ஏற்படும் இடங்களின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட விருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதுடன், குடிநீர்த் தட்டுப்பாடு, வாழ்வாதார பாதிப்பு ஏற்படும் எனவும் கார்த்திகேய சிவசேனாதிபதி விவசாயிகளிடம் தவறாகப் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். மேலும் கார்த்திகேய சிவசேனாதிபதியின் அழுத்தத்தால், மாவட்ட அமைச்சர் முத்துசாமியும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றுக்கொள்ளாமல், வழக்கில் தோற்றவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அதிகாரிகளும் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு பயந்துகொண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுக்கின்றனர்.

சரியான பராமரிப்பு இல்லாததால், இந்தப் பாசன ஆண்டில் மட்டும் நான்கு முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் நிறுத்தப்பட்டது, இதனால், கடைமடைப் பகுதியில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறோம். இந்த நிலையில், ஆளுங்கட்சி கொண்டுவந்த திட்டத்துக்கு அதே கட்சியைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதியே தடையாக இருந்துவருகிறார். எனவே, அவரது செயல்பாட்டைக் கண்டித்தும், அரசாணை 276-ஐ நிறைவேற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம்” என்றார்.

கி.வெ.பொன்னையன்
கி.வெ.பொன்னையன்

இதற்கிடையே திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் உறுதிப்பாடு குறித்துப் பேசும் விவரப்புள்ளிகள், ‘‘கடந்த ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலேயே, ‘கீழ்பவானிக் கால்வாய் சீரமைப்பு வேலைகள் செய்யப்படும்’ என்று துரைமுருகன் அறிவித்துவிட்டார். மேலும் இது தொடர்பாக கீழ்பவானி ஆயக்கட்டுதாரர்கள் கலந்துகொண்ட கூட்டத்தையும் தலைமை ஏற்று நடத்தி முடித்தார். அமைச்சர் இப்படி ஆர்வம் காட்டிவருவதன் பின்னணியில், ‘பசை’யான காரணம் இருக்கிறது’’ என்று கண்சிமிட்டுகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் பேசியபோது, “கீழ்பவானி வாய்க்காலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், வாய்க்கால் குறித்து எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. கீழ்பவானி வாய்க்காலின் இருபுறமும், கீழேயும் கான்கிரீட் தளம் போடுவதை 98 சதவிகித விவசாயிகள் எதிர்க்கின்றனர். ஏனெனில், இதனால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்; விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; சுமார் 4 லட்சம் மரங்களும் வெட்டப்படும். அதேநேரம் வாய்க்காலிலுள்ள பழைய கான்கிரீட் தளங்களை மீண்டும் அமைப்பதற்கும், எங்கெல்லாம் உடைகிறதோ, அரிப்பு ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகிறதோ, அந்த இடங்களில் கான்கிரீட் போடுவதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் சிலர் போலி விவசாய சங்கத்தை நடத்திக்கொண்டு ஆதாயத்துக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2016 தேர்தலின்போது, கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தை அமல்படுத்துவோம் என தி.மு.க தெரிவித்ததன் விளைவாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 15 தொகுதிகளை இழந்தது. அரசியல்ரீதியாக வும் இந்த அரசாணை 276-ஐ அமல்படுத்தினால், தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று முடித்துக்கொண்டார்.

இதையடுத்து அரசாணை 276-ஐ எதிர்த்துவரும் கார்த்திகேய சிவசேனாதிபதியின் நிலைப்பாடு குறித்து கருத்து கேட்பதற்காக அமைச்சர் துரைமுருகனை செல்பேசியில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து நமது கேள்வியை குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் அமைச்சருக்கு அனுப்பியிருக்கிறோம். அமைச்சர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில், பரிசீலனை செய்து பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்!