அரசியல்
அலசல்
Published:Updated:

மண்ணெண்ணெய் விற்பனையில் ஊழல்... கூட்டுறவுத்துறை அதிகாரியைச் சுற்றும் சர்ச்சை!

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை
பிரீமியம் ஸ்டோரி
News
நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில், மண்ணெண்ணெய் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பதுதான் என்னுடைய வேலை. என் வேலையைச் சரியாகத்தான் செய்தேன்.

புதுக்கோட்டை மாவட்டக் கூட்டுறவுத்துறையில், ரேஷன் மண்ணெண்ணெயைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்த மோசடி குறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், “புதுக்கோட்டை, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின்கீழ் தனித்தனியாக, இரண்டு மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. பொது விநியோகத் திட்டத்தின்கீழ், நகர்ப் பகுதியிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இங்குதான் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் குமார், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த விற்பனை நிலையங்களின் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வட்டார கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரின் அனைத்து ரேஷன் கடைகளும் இவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை
நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

இந்த நிலையில், மண்ணெண்ணெய் விற்பனை நிலைய விற்பனையாளராக மஞ்சள்மாதா என்பவரை சிபாரிசின் பேரில் கொண்டுவந்தார் குமார். மஞ்சள்மாதா பொறுப்பேற்றது முதல் மண்ணெண்ணெய் விநியோகம் குறித்துப் பொதுமக்களிடையே புகார் எழுந்தது. மூன்று லிட்டர் கிடைக்கவேண்டியவர்களுக்கு ஒரு லிட்டர் மட்டுமே வழங்குவது, ஸ்டாக் இல்லை என்று கூறி பயனாளிகளைத் திருப்பியனுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவந்தார் மஞ்சள்மாதா. நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரியான குமார், மஞ்சள் மாதாவுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு, சுமார் 1,868 லிட்டர் பதுக்கல் மண்ணெண்ணெயைக் கள்ளச்சந்தையில் விற்று லட்சக்கணக்கில் சுருட்டியிருக்கிறார். மேலும், கூட்டுறவு பண்டகசாலை மேலாண் இயக்குநர், கள அலுவலர் உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகளையும் வைத்துக்கொண்டு கூட்டுறவுத்துறையில், பல மோசடிகளைச் செய்திருக்கிறார். அவையனைத்தும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டும் பெயரளவிலேயே குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

கவிவர்மன், குமார்
கவிவர்மன், குமார்

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சார்பதிவாளர் குமாரிடம் பேசியபோது, “மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில், மண்ணெண்ணெய் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பதுதான் என்னுடைய வேலை. என் வேலையைச் சரியாகத்தான் செய்தேன். விற்பனையாளருடன் சேர்ந்து கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்ததாகச் சொல்லும் குற்றச்சாட்டு பொய்யானது. என்மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் எதுவும் உண்மை இல்லை. எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால், நான் விடுப்பில் இருக்கிறேன்” என்றார்.

பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் கோபாலிடம் பேசியபோது, “புதுக்கோட்டை மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்களில் முறைகேடு நடைபெற்றது உண்மைதான். சம்பந்தப்பட்ட விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். வட்டார சார்பதிவாளராகப் பணியாற்றிய குமாரின் கூடுதல் பொறுப்புகள் பிடுங்கப்பட்டு, அவர் மணமேல்குடிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அவர்மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

வேலியே பயிரை மேய்ந்தால் என்னதான் செய்வது?!