அரசியல்
அலசல்
Published:Updated:

மீண்டும் மாஞ்சா நூல்... அலட்சிய போலீஸ்... அவதியில் சென்னை!

மாஞ்சா நூல்
பிரீமியம் ஸ்டோரி
News
மாஞ்சா நூல்

தற்போது சென்னையில் பெரும்பாலும், ஆன்லைன் மூலமாகவே மாஞ்சா நூல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதைத் தடுக்க ஆன்லைன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம்.

நாம் சாலையில் செல்லும்போது எங்கிருந்தோ பறந்து வந்த கண்ணுக்குத் தெரியாத ஒன்று நம் கழுத்தில், முகத்தில் வெட்டிப் படுகாயத்தை ஏற்படுத்தினால் எப்படியிருக்கும்... சிங்காரச் சென்னையில் சமீபகாலமாக அப்படியான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. காரணம், மாஞ்சா நூல்!

பட்டத்தை உயரமாகப் பறக்கவிடவும், எதிரிகளின் பட்டத்தை அறுத்துவிடவும் கண்ணாடித் துகள்கள் சேர்க்கப்பட்ட மாஞ்சா நூல்களைத் தயாரிக்கிறார்கள் சிலர். அதன் காரணமாகச் சென்னையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், 2007-ம் ஆண்டு முதல் மாஞ்சா நூல் தயாரித்தல், விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்குக் காவல்துறை தடைவிதித்தது. ஆனாலும், தடையை மீறிச் சிலர் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் விற்பனை செய்கிறார்கள்.

மாஞ்சா நூல்
மாஞ்சா நூல்

சமீபத்தில் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளைஞர் நிக்கி சரண், டி.நகர் விஜயராகவா தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, மாஞ்சா நூல் ஒன்று அவரின் கழுத்தில் ஆழமாக வெட்டியது. காயமடைந்த அவருக்கு உதவ முயன்றவரின் கையையும் பதம் பார்த்தது அந்த மாஞ்சா நூல். அதேபோல, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது, மாஞ்சா நூலால் தனது கழுத்து, கை விரல்கள் ஆகியவற்றில் காயம்பட்டதாக இளைஞர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்திருந்தார். சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் பைக்கில் சென்ற சுனில்குமாரின் முகத்திலும் வெட்டு விழுந்தது.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் பேசினோம். “தற்போது சென்னையில் பெரும்பாலும், ஆன்லைன் மூலமாகவே மாஞ்சா நூல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதைத் தடுக்க ஆன்லைன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம். மாஞ்சா நூல் பயன்பாடு தொடர்பாகச் சென்னை சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்துவருகிறோம். தடையை மீறி, விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

ஆணையர் நம்மிடம் பேசிய அடுத்த நாளே, சென்னை முழுவதும் 261 கடைகளில் திடீர் சோதனை நடத்தியது காவல்துறை. அதில் விற்பனைக்காக மாஞ்சா நூல் வைத்திருந்த 23 பேரைக் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 2,118 மீட்டர் நீளமுள்ள தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூல்களையும் பறிமுதல் செய்தது போலீஸ்.

சென்னையில் மாஞ்சா நூலால் யாராவது பாதிக்கப்படும்போது மட்டுமே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது என்றொரு கருத்து இருக்கிறது. இன்னொரு உயிர்ப்பலி ஏற்படும் முன்பு, மாஞ்சா நூல் அபாயத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டுமா காவல்துறை?