அலசல்
சமூகம்
Published:Updated:

பாவம் நாங்க... புது பஸ் ஸ்டாண்டு தாங்க! - கெஞ்சும் குளித்தலை மக்கள்

குளித்தலை
பிரீமியம் ஸ்டோரி
News
குளித்தலை

புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் கிடைப்பதிலுள்ள சிரமம்தான், பேருந்து நிலைய அறிவிப்பு தள்ளிப்போகக் காரணம்.

‘‘தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகளில், நிரந்தர பேருந்து நிலையம் இல்லாத ஒரே நகராட்சி, குளித்தலைதான். இந்த பட்ஜெட்டிலும் நவீன பேருந்து நிலையம் அமைக்க அறிவிப்பு வரவில்லை’’ என்று புலம்புகிறார்கள் கருணாநிதியை முதன்முதலில் எம்.எல்.ஏ ஆக்கிய குளித்தலை மக்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில், தற்போது இயங்கிவரும் பேருந்து நிலையம் மிகவும் சிறியது. பேராளகுந்தாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் இந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தில் ஐந்து பேருந்துகள் மட்டுமே நிற்க முடியும். ‘பாவம் நாங்க; புது பஸ் ஸ்டாண்டு தாங்க!’ என்று கடந்த ஐம்பது ஆண்டுகளாக குளித்தலை மக்கள் போராடிவருகிறார்கள்.

குளித்தலை
குளித்தலை

இது பற்றி நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் முத்துச்செல்வன், “கரூர் டு திருச்சி மார்க்கத்திலுள்ள குளித்தலைக்கு, நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து போகின்றன. ஆனாலும் இதுவரை நிரந்தரமாக ஒரு பேருந்து நிலையம் இங்கு இல்லை. எல்லாத் தேர்தலின்போதும், ‘புதிய பேருந்து நிலையம் அமைப்போம்’ என்று வேட்பாளர்கள் வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், வாக்குறுதியை யாரும் நிறைவேற்றுவதில்லை. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆனாலும் பேருந்து நிலையம் வரவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை.

கருணாநிதி, முதன்முதலாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி இது. தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏ-வான மாணிக்கம் உள்பட எல்லோரிடமும் மனு கொடுத்துப் பார்த்துவிட்டோம். ஆனால், யாருக்கும் குளித்தலை மக்களின் சிரமம் புரியவில்லை.

தற்காலிக பேருந்து நிலையத்தைச் சுற்றி கட்டடங்கள் கட்டி, வியாபாரம் செய்துகொண்டு இருக்கும் சில வணிகர்கள், வேறு இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால், தங்களின் வியாபாரம் பாதிக்கும் என்பதால், இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணைபோகிறார்கள்” என்றார் வருத்தத்துடன்.

முத்துச்செல்வன், மாணிக்கம்
முத்துச்செல்வன், மாணிக்கம்

இது குறித்து, குளித்தலை தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திடம் பேசினோம். “புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் கிடைப்பதிலுள்ள சிரமம்தான், பேருந்து நிலைய அறிவிப்பு தள்ளிப்போகக் காரணம். குளித்தலையைச் சுற்றி கோயில்களுக்குச் சொந்தமான இடங்களே அதிகம். முன்பெல்லாம் 99 வருட குத்தகைக்கு அந்த இடங்களைத் தருவார்கள். ஆனால், இப்போது கோயில் தரப்பில் இடங்களை அப்படிக் கொடுப்பதில்லை. அதனால், தனியார் இடங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தொழிலதிபர்களுக்குச் சார்பாக நடந்து, பேருந்து நிலையத்தை வரவிடாமல் தடுக்கிறோம் என்பது பொய்க் குற்றச்சாட்டு. இப்போதைக்கு, இருக்கும் பேருந்து நிலையத்தை மேம்படுத்துகிறோம். விரைவில், மாற்று இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்” என்றார்.

குளித்தலைக்குப் புதிய பேருந்து நிலையம் என்பது கனவுதான்போல!