இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,827 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்துசெய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, என்.ஜி.ஓ உரிமங்களை ரத்துசெய்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நித்யானந்த் ராய், ``கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ரூ.2,430.84 கோடி வெளிநாட்டு நிதியை நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, 2021-22-ம் ஆண்டில் ரூ.905.5 கோடியையும், 2020-21-ம் ஆண்டில் ரூ.798.18 கோடியையும், 2019-20-ம் ஆண்டில் ரூ.727.16 கோடியையும் வெளிநாட்டு நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன. கடந்த மார்ச் 10-ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Foreign Contribution Regulation Act (FCRA)) கீழ் வெளிநாட்டு நன்கொடையைப் பெற உரிமம் பெற்றிருக்கும் சுமார் 16,383 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் (NGOs) 14,966 அமைப்புகள், 2021-22 நிதியாண்டுக்கான வருமானச் சான்றுகளை சமர்ப்பித்திருக்கின்றன.

அதேசமயம், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்காத, சட்ட விதிமுறைகளை மீறிய சுமார் 1,827 தொண்டு நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்துசெய்திருக்கிறது!" எனத் தெரிவித்திருக்கிறார்.