கனிம வளக் கடத்தல் விவகாரம்... “எம்.எல்.ஏ-வாக இருந்தபோது எதிர்ப்பு... அமைச்சரானதும் ஆதரவு?”

- மனோ தங்கராஜ் மீது பாயும் புகார்!
கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தார். கனிம வளங்களைக் கடத்திச் சென்ற வாகனங்களைச் சிறைப்பிடித்து, பரபரப்பாக்கினார். ஆனால், தற்போது ‘‘அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் தரப்பு, கடத்தல்காரர்களிடம் டீல் பேசிவிட்டதால், கனிம வளக் கொள்ளை குறித்து அமைச்சர் வாய் திறப்பதே இல்லை’’ எனக் கொதிக்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் குமரி மத்திய மாவட்டச் செயலாளர் சீலன், “எதிர்க்கட்சியாக எம்.எல்.ஏ-வாக இருந்தபோது கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடுவதுபோல நாடகம் ஆடினார் மனோ தங்கராஜ். ஆனால், அமைச்சரானதும் தற்போது அவரின் மகன் ரெமோன் மூலமாகப் பல இடங்களில் கலெக்ஷன் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

மாவட்டத்திலுள்ள அனைத்து செக்போஸ்ட்டுகள் வழியாகவும் தினமும் சுமார் 3,000 லாரிகளில் எம்-சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. மாநில எல்லையைக் கடந்து கேரளாவுக்குக் கொண்டுசெல்லப்படும் இந்தக் கனிம வளங்களால் குவாரி உரிமையாளர்களுக்கு மூன்று மடங்கு வரை லாபம் கிடைக்கிறது. இதனால், 25 டன் பாரம் ஏற்ற வேண்டிய லாரிகளில் 45 டன் வரை கனிம வளங்களை ஏற்றிச் செல்கிறார்கள். வாழைத்தோப்புக்கு மண் எடுத்துச் சென்றாலே பாய்ந்து வந்து வாகனங்களைப் பிடிக்கும் அதிகாரிகளுக்கு, இந்தக் கனிம வளக் கடத்தல்கள் மட்டும் கண்ணுக்குத் தெரியாதா?” என்று சீறினார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் மனோ தங்கராஜிடம் பேசினோம். “கன்னியாகுமரி மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் 39 குவாரிகள் செயல்பட்டுவந்தன. தற்போது நீதிமன்ற அனுமதியுடன் இயங்கும் மொத்த குவாரிகளின் எண்ணிக்கையே ஐந்துதான். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்குக் கொண்டுசெல்லப்படும் கனிம வளங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குவாரிகளிலிருந்து, பாஸ் பெற்று எடுத்துச் செல்லப்படுபவை. அவற்றில் ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடில் வரும் லாரிகளுக்கு மட்டுமே நாம் அபராதம் போட முடியும். அதேநேரம், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அந்த உரிமையை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களை என்னுடைய மகன் தி.மு.க-வில் சேர்த்துவருவதால், தேவையில்லாமல் அவனது பெயரையும் இந்த விஷயத்தில் இழுக்கிறார்கள்” என்றார்.
தடுக்க முடியாது என்பதை எவ்வளவு அழகா சொல்றீங்க?!