அரசியல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

‘எனக்கு அமைச்சரை நல்லாத் தெரியும்...’ - கல்லாகட்டும் ‘ஃபைல்’ அதிகாரி!
‘எனக்கு அமைச்சரை நல்லாத் தெரியும்...’ - கல்லாகட்டும் ‘ஃபைல்’ அதிகாரி!

‘எனக்கு அமைச்சரை நல்லாத் தெரியும்...’ - கல்லாகட்டும் ‘ஃபைல்’ அதிகாரி!

‘திருவிளையாடல்’ மாவட்டத்தின் மைய அலுவலகத்தில், சமூகத்தைப் பாதுகாக்கும் துறையில் தூணாக இருப்பவர் அந்தப் ‘பொலிவான’ பெண் அதிகாரி. இவர் செய்யும் கோல் மால், அடாவடிகளை மாவட்ட உயரதிகாரியால்கூடத் தட்டிக்கேட்க முடியவில்லையாம். காரணம், அரசியல் செல்வாக்கு. கடந்த ஆட்சியில் ‘வருமான’ அமைச்சராக இருந்தவரின் ஆதரவில், மாவட்டத்தின் மங்கலமான பகுதிகளில் இஷ்டத்துக்கு குவாரிகளை அனுமதித்து, ஸ்வீட் பாக்ஸுகளைக் குவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே அவர்மீது புகார் சொன்ன பொதுமக்கள்மீது ஃபைல்களைத் தூக்கி வீசி பரபரப்பு கிளப்பினார். ஆட்சி மாறியதும் ‘பிரமாண்ட விழா’ அமைச்சரின் நம்பிக்கையை எப்படியோ பெற்றுவிட்ட அம்மணி, சில மாதங்களுக்கு முன்பு தலையாரி நியமனங்களில் பெருமளவு கல்லாகட்டியிருக்கிறார். அம்மணிமீது அடுக்கடுக்காகப் புகார்கள் குவிய, மாவட்ட மையத்துக்கு மாற்றப்பட்டபோதும் ‘பிரமாண்ட விழா’ அமைச்சர் பெயரைச் சொல்லியே, பல டீல்களைச் செய்துவருகிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தற்கொலைக்கு முயன்ற பணியாளர்... கொலை மிரட்டல் விடுக்கும் ஆய்வாளர்!
தற்கொலைக்கு முயன்ற பணியாளர்... கொலை மிரட்டல் விடுக்கும் ஆய்வாளர்!

தற்கொலைக்கு முயன்ற பணியாளர்... கொலை மிரட்டல் விடுக்கும் ஆய்வாளர்!

மாங்கனி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் பெண் ஒருவரை, அந்தப் பகுதியின் ‘சுகாதார’ ஆய்வாளர் தனிமையில் அழைத்ததாகப் புகார் கிளம்பியது. அந்தப் புகாரை விசாரித்த ‘யோகமான’ உயரதிகாரி புகார் கொடுத்த பெண்ணையே மிரட்டி அனுப்பியதால், அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் ‘ஆணையிடுபவர்’ காதுக்குச் செல்லவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். ஆனால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவிடாமல், ஆணையிடுபவரிடமே அரசியல் செல்வாக்கைக் காட்டியிருக்கிறார் சுகாதார ஆய்வாளர். இன்னொரு பக்கம், தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதனால் சம்பந்தப்பட்ட பெண் வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று ஊரைவிட்டே கிளம்பிவிட்டதாகத் தகவல்.

ஆக்கிரமித்த மூவர் கூட்டணி... அகற்றவிடாத ‘முருகக் கடவுள்’ அதிகாரி!
ஆக்கிரமித்த மூவர் கூட்டணி... அகற்றவிடாத ‘முருகக் கடவுள்’ அதிகாரி!

ஆக்கிரமித்த மூவர் கூட்டணி... அகற்றவிடாத ‘முருகக் கடவுள்’ அதிகாரி!

வெயில் மாநகராட்சியின் ஐயப்பன் கோயிலருகே இரண்டு ஏக்கர் மலைப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்றிருக்கிறது அங்கே கட்டப்பஞ்சாயத்து செய்யும் மூவர் கூட்டணி. இந்தக் கும்பலின் பேச்சை நம்பி, மனை வாங்கிய சிலர் அங்கு வீடும் கட்டிவிட்டனர். இது குறித்து தொடர்ந்து புகார்கள் குவியவே, மாவட்ட ஆட்சியர் நேரில் ‘விசிட்’ அடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி வருவாய்த்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், மூவர் கூட்டணியிடம் கைமேல் பலன் பார்த்துவிட்ட ‘முருகக் கடவுள்’ அதிகாரி, ஆய்வாளரையும் வி.ஏ.ஓ-வையும் சரிக்கட்டி, ஒரு சிறு துரும்பைக்கூட அங்கிருந்து அகற்றவிடாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கிறாராம்.

‘காப்பாத்தி வழியனுப்புங்க’ சரண்டரான பெண் அதிகாரி!
‘காப்பாத்தி வழியனுப்புங்க’ சரண்டரான பெண் அதிகாரி!

‘காப்பாத்தி வழியனுப்புங்க’ சரண்டரான பெண் அதிகாரி!

‘ஜில்’ மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் ஆரோக்கிய கல்லூரி கட்டுமானப் பணியில் ஏகப்பட்ட ஊழல் புகார்கள். சில அதிகாரிகளே சஸ்பெண்டாகும் அளவுக்குப் பிரச்னைகள் பூதாகரமாகியிருக்கின்றன. முக்கியப் பொறுப்பிலிருக்கும் ‘புராண கதாபாத்திர’ பெண் அதிகாரி ஒருவருக்கு இன்னும் ஆறு மாதங்களில் சர்வீஸ் முடியவிருப்பதால், சஸ்பெண்ட் ஆகாமல் ஓய்வுபெற முடியாது என்கிற பயத்தில், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருக்கிறாராம். விசாரித்த உயரதிகாரிகளோ ‘வி.ஆர்.எஸ் கொடுக்க முடியாது. போய் டூட்டியைப் பாருங்கள்’ என்று விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்களாம். “ஆறு மாசத்துக்கு என்னை எப்படியாவது காப்பாத்தி வழியனுப்புங்க” என உள்ளூர் அமைச்சரிடம் சரணடைந்திருக்கிறாராம் பெண் அதிகாரி.

‘ஐ அம் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட்’ நெகிழ்ந்து குழைந்த துணை அதிகாரி!
‘ஐ அம் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட்’ நெகிழ்ந்து குழைந்த துணை அதிகாரி!

‘ஐ அம் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட்’ நெகிழ்ந்து குழைந்த துணை அதிகாரி!

கொங்கு மண்டலத்திலுள்ள அந்த முக்கிய மாநகராட்சியில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட ‘மார்க்கண்டேய’ துணை அதிகாரி அவர். இடைத்தேர்தல், ரெய்டு என சமீபகாலங்களாக அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அவருக்கு, இந்தப் பதவி கிட்டத்தட்ட டி-புரொமோஷன்தான். வந்த இடத்திலும் வாய்க்கால் தகராறு ஏதும் வந்துவிடக் கூடாது என்று முடிவுசெய்த ‘மார்க்கண்டேய’ அதிகாரி, பதவியேற்றதுமே மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் என அனைவரையும் தனித்தனியாக நேரில் சென்று மரியாதை செலுத்தினாராம். ‘நல்லது செஞ்சதுக்காக நிறைய துரோகங்களைப் பார்த்துட்டேன். ப்ளீஸ் சப்போர்ட் மீ... ஐ அம் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட்’ என்கிற ரேஞ்சுக்கு மனிதர் நெகிழ்ந்து குழைந்துவிட்டாராம்.