அரசியல்
அலசல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி: அலுவலக அறையில் காதல் லீலை; குமுறும் ஊழியர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வாங்கிய லட்டுக்கு விசுவாசமாக சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறாராம் சாம்பல் அதிகாரி. கைப்பற்றிய ‘கன்’களையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் போக்கு காட்டிவருகிறாராம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

அசகாய அதிகாரியும் அதிர்ச்சி அமைச்சரும்!

ஆட்சியரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை பலரிடமும் பி.ஏ-வாக இருந்து வாரிச்சுருட்டிய மூன்றெழுத்து அதிகாரி அவர். ஏற்கெனவே ‘கானகம் கட்டியாண்ட’ அமைச்சரின் உதவியாளராக இருந்தபோது, டிரான்ஸ்ஃபரில் ஆரம்பித்து போஸ்ட்டிங் வரையில் ‘ஸ்வீட்’ ருசிபார்த்தவர். அமைச்சர் இலாகா மாற்றப்பட்டதற்கு இந்த அதிகாரியின் கைநீட்டலும் ஒரு காரணமாம். இதனால் கடுப்பான அமைச்சர், ‘‘இந்த ஏரியாப் பக்கம் உன்னை மறுபடியும் பார்த்தேன்...’’ என்று நாக்கைத் துருத்தி விரட்டியடித்துவிட்டாராம். அரசியலில் அமைச்சரைத் தாண்டிய செல்வாக்கு பெற்ற அதிகாரி, தூக்கியடிக்கப்பட்ட அதே வேகத்தில் திரும்பவும் ‘ஜில்’ மாவட்டப் பணிக்கே திரும்பிவிட்டார். இப்போது அதிர்ச்சியில் இருப்பது அமைச்சர்தான்!ஆபீஸர் அட்ராசிட்டி

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘கொஞ்சம் ஜோலி, நிறைய ஜாலி!’

‘கொசுவலை’ மாவட்டத்தில், சொத்துரிமைத்துறையில் பணியாற்றிவரும் அதிகாரி, ‘கொஞ்சம் ஜோலி, நிறைய ஜாலி’ என்ற பாலிசியில் பட்டையைக் கிளப்புகிறாராம். மாதம் முழுக்க லட்டுகளை வாரிக் குவிப்பதற்கென்றே தனியாக ஏஜென்ட்டுகளை நியமித்திருக்கிறார் மனிதர். தனக்கு அடுத்த கேடரிலுள்ள பெண் அதிகாரியோடு அலுவலக அறையிலேயே காதல் லீலை புரிகிறாராம். இந்தச் சங்கமத்துக்கு பெண் ஊழியர் ஒருவரைக் காவல் வைக்கும் கொடுமையும் நடக்கிறதாம். ‘காதல் மன்னன்’ நடிகரின் பெயரின் பிற்பகுதியையே தன் பெயராகக்கொண்டிருக்கும் இந்த அதிகாரியின் பலான செயல், எப்போது வேண்டுமானாலும் முச்சந்திக்கு வரலாம்’ என்று காதைக் கடிக்கிறார்கள் அலுவலக ஊழியர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

அலட்டல் அம்மணிக்கு ஏ.சி., எலெக்ட்ரிக் ஃபேன், குடை!

மேற்கேயுள்ள தொழில் மாவட்டத்தில், பசுமைத்துறையில் பணியாற்றுகிறார் அந்தப் பெண் அதிகாரி. மழை, வெயில் பார்க்காமல் காடு காடாகச் சுற்றவேண்டியதுதான் அவரின் வேலை. ஆனால், அம்மணிக்கு வெளியில் தலைகாட்டுவது என்றாலே அலர்ஜியாம். 24 மணி நேரமும் ஏ.சி வேண்டுமாம். மக்கள் சார்ந்த முக்கிய பிரச்னைகளின்போதுகூட மிகவும் அரிதாகத்தான் தலையைக் காட்டுவாராம். தவிர்க்க முடியாத இடங்களில் அவருக்கு ஒரு எலெக்ட்ரிக் ஃபேன், குடை பிடிக்க ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டுமாம். “ஹும்.... சினிமா ஷூட்டிங்குக்குப் போகவேண்டியவங்கல்லாம் டிபார்ட்மென்ட்டுக்கு வந்து நம்மை டார்ச்சர் பண்றாங்க” என்று குமுறுகின்றனர் கீழ்நிலை ஊழியர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கமிஷனர் அறைக்குள் அமளி துமளி!

வெயில் மாநகராட்சிக்குப் புதிதாக வந்த பெரிய அதிகாரியின் கறாரான பேச்சால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாநகரத் தந்தையும், ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் அவரின் அறைக்குள்ளேயே புகுந்து அமளி துமளி செய்திருக்கிறார்கள். என்ன பிரச்னை என்று விசாரித்தால், ஃப்ளாஷ்பேக்கிலிருந்து ஆரம்பிக்கிறார்கள் ஊழியர்கள். ஏற்கெனவே இருந்த பெரிய அதிகாரி கட்டிங், பெட்டிங் என ஆட்டம்போட்டதால் மூன்று மாதங்களுக்கு முன்பு தடாலடியாகத் தூக்கியடிக்கப்பட்டார். இந்த நிலையில், ‘பழைய அதிகாரியைப்போல்தான் இவரும் இருப்பார்’ என நினைத்து ஆளுங்கட்சியினர் வொர்க் ஆர்டர் ஃபைல்களை நீட்டினார்களாம். நிறுத்தி நிதானமாக ஃபைலை புரட்டிப்பார்த்த புதியவர், ‘இதில் ஏற்கெனவே நிறைய முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருப்பதாகத் தெரிகிறது. பழைய அதிகாரியிடமே போய் கையெழுத்து வாங்கிக்கொள்ளுங்கள். தவறுக்கு நான் பொறுப்பேற்க முடியாது’ எனக் கறார் காட்டிவிட்டாராம். இப்போது மாநகராட்சி நிர்வாகமே இரண்டுபட்டுக்கிடக்கிறது!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வேட்டையாளிகளிடமே வேட்டையாடிய அதிகாரி!

மாங்கனி மாவட்ட அணைக்கட்டுப் பகுதியில், சுடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொள்பவர் காட்டு இலாகா அதிகாரியாக இருக்கிறார். சமீபத்தில் ஐந்து பேர், இவரது எல்லைக்குள் துப்பாக்கியுடன் மான் வேட்டை ஆடியிருக்கிறார்கள். படையோடு சென்று பாய்ந்து பிடித்த அதிகாரி, வேட்டையாடிகளிடமிருந்த ‘கன்’களைக் கைப்பற்றிய கையோடு, அவர்களிடமிருந்து சில லட்டுகளை கலெக்ட் செய்து கமுக்கமாகிவிட்டாராம். பிடிப்பது வனத்துறையாக இருந்தாலும், வழக்கு காவல்துறைக்குத்தானே போக வேண்டும்... இவர் மூடி மறைத்த தகவல் சம்பந்தப்பட்ட எல்லையிலுள்ள காவல்துறை அதிகாரியின் காதுக்குச் செல்லவே, சாம்பல் அதிகாரியைத் தோண்டித் துருவி விசாரித்திருக்கிறார்கள். ஆனால், வாங்கிய லட்டுக்கு விசுவாசமாக சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறாராம் சாம்பல் அதிகாரி. கைப்பற்றிய ‘கன்’களையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் போக்கு காட்டிவருகிறாராம்!