Published:Updated:

மீண்டும் தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் திறப்பு! - அமைச்சர் விளக்கமும் பின்னணியும்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( விகடன் )

``ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைந்திட வேண்டும், ஆகவே ஜூலை இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும்” என்றிருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

Published:Updated:

மீண்டும் தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் திறப்பு! - அமைச்சர் விளக்கமும் பின்னணியும்!

``ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைந்திட வேண்டும், ஆகவே ஜூலை இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும்” என்றிருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( விகடன் )

2012-ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்த திட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். 2019-ல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 88 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதி, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவருகிறது. இதில் புறநகர் பேருந்து நிலையமும், வெளியூருக்குச் செல்லும் பேருந்து முனையமும் அமைக்கப்பட்டுவருகின்றன. புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்திக்கொள்ளும் வசதியும் அமையப்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
விகடன்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமையப்பெற்றால் தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு வரும் அரசுப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையே முனையமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிடும். இதனால் கோயம்பேட்டுக்கு தற்போது வந்துசெல்லும் 60 சதவிகித பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும், பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட சென்னையின் மையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
விகடன்

அதேசமயம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்னைக்கு வெளியே அமைந்திருக்கும் பேருந்து நிலையத்தை வந்தடைவதற்கான போக்குவரத்து வசதிகளை அரசு விரைந்து மேம்படுத்திடுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. தற்போதைய பேருந்து முனையமான கோயம்பேட்டிலிருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது கிளாம்பாக்கம்.

பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும் வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரை அழைத்துக்கொண்டும், ஊர்வழி செல்வோர் லக்கேஜுகளைச் சுமந்தபடியும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை செல்வது சிரமம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே பேருந்து நிலையம் எப்போது தயாராகும்... கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றுவிட்டனவா... எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்விகள் சென்னை மக்கள் மத்தியில் சுழன்றடிக்கின்றன.

அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
டிவிட்டர்

2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்க, 2022-ம் ஆண்டு தீபாவளி, 2023-ம் பொங்கல் பண்டிகை, 2023-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு ஆகிய தருணங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் கிளம்பின. பின்னர் 2023-ம் ஆண்டு, ஜூன் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறப்பு தேதி தள்ளிப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சமீபத்தில் விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு, ”புதிதாகக் கட்டப்பட்டுவரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம், பேருந்துகளின் போக்குவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து நிலையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைந்திட வேண்டும், ஆகவே ஜூலை இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும்” என்றிருக்கிறார்.

``சென்னையின் மாபெரும் பிரச்னை போக்குவரத்து நெரிசல். அதைச் சீர்செய்திடும் நோக்கில் கொண்டுவரக்கூடிய திட்டத்தை இவ்வளவு காலதாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல. அதிலும் மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாதவாறும், பேருந்து வந்து செல்ல ஏதுவாகவும் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு சொல்வது ஒருபோதும் ஏற்புடையதல்ல. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. கட்டுமானப் பணிகளை அரசு அதிகாரிகளும் பொறியாளர்களும் முறையாக கவனிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார்கள் என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா..?" என வினவியிருக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சென்னையின் மையப் பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வருவதற்கு முறையான சேவைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்கள்.