சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’... துணைபோகும் அதிகாரிகள்... கொதிக்கும் மீனவர்கள்!

பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’
பிரீமியம் ஸ்டோரி
News
பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’

பாலை மீன்கள், பெரிய மீன்களுக்கு இரையாகக்கூடிய முக்கிய உணவு. கடந்த ஆண்டு மட்டும் 40 லட்சம் வரை பாலை மீன் குஞ்சுகள் வெளிமாநில நபர்களால் பிடிக்கப்பட்டிருக்கின்றன

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் பாலை மீன் குஞ்சுகளை, மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் துணையுடன் வெளிமாநில நபர்கள் பிடித்துச் செல்வதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் வெறும் கையோடு திரும்பும் அபாயம் உருவாகியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய கீழக்கரை மீனவர்கள், “மீனவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் பயனாக, கடந்த ஆண்டு பாலை மீன் குஞ்சுகளைப் பிடிக்க தமிழக அரசு தடைவிதித்தது. ஆனால், கீழக்கரை, திருப்புல்லாணி, சேதுக்கரை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில், மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் ஏர்வாடியில் முகாமிட்டு, கடற்கரையோரப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்துவரும் பாலை மீன் குஞ்சுகளை லட்சக்கணக்கில் பிடித்துச் செல்கின்றனர். தற்போதுவரை கேரள மாநிலத்தவர்கள் ராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளில் பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்துச் செல்வதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.

பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’
பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’

இது குறித்துப் புகார் அளித்தால், சம்பவ இடத்துக்கு வரும் மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், மீன் குஞ்சுகள் பிடிக்கப்படுவதைத் தடுக்காமல், மீன் குஞ்சு ஒன்றுக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை பேரம் பேசி, கேரள மாநிலத்தவர்களிடமே கையூட்டு பெறுகிறார்கள். மீன் குஞ்சுகளைப் பிடிப்பவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துச் சென்று நாங்கள் ஒப்படைத்தபோதும், அவர்கள் ஆடு மேய்க்க வந்தவர்கள் என்று கூறி எங்கள் குற்றச்சாட்டைப் புறக்கணிக் கிறார்கள்” என்றனர் ஆவேசத்துடன்.

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பியிடம் பேசினோம். “பாலை மீன்கள், பெரிய மீன்களுக்கு இரையாகக்கூடிய முக்கிய உணவு. கடந்த ஆண்டு மட்டும் 40 லட்சம் வரை பாலை மீன் குஞ்சுகள் வெளிமாநில நபர்களால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது 4,000 டன் பாலை மீன்கள், செயற்கையாகக் கடலில் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டன. பாலை மீன்களைத் தேடி தமிழகக் கடற்பகுதிக்கு வர வேண்டிய பெரிய மீன்கள், இரை தேடி இலங்கைக் கடற்பரப்புக்குச் சென்றுவிடுகின்றன. இதனால் மீனவர்களும் ஆழ்கடல் எல்லையைக் கடப்பது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ராமநாதபுரம் மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தங்கள் சுயலாபத்துக்காக ஒட்டுமொத்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவருகின்றனர்” என்றார்.

பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’
பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’

இதுபற்றி ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயனிடம் விளக்கம் கேட்டோம், “ராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளில் பாலை மீன் குஞ்சுகளைப் பிடிக்க யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், பாலை மீன் குஞ்சுகளைப் பிடிப்பதற்கு டெண்டர்விட தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். வெளி மாநிலத்தவர்கள் பாலை மீன் குஞ்சுகளைப் பிடிப்பதாக மீனவர்களிடமிருந்து புகார் வந்தது. மரைன் போலீஸாருடன் சென்று பார்த்தபோது, பிடிபட்டவை பாலை மீன் குஞ்சுகள் அல்ல. மேலும், அங்கிருந்த நபர்கள் ஓ.என்.ஜி.சி-யைச் சேர்ந்தவர்கள். அந்த இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று சமாளித்தவரிடம், பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்த நபர்களை மீனவர்கள் தடுத்து, ஒப்படைத்தபோதும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டதான புகார் குறித்துக் கேட்டோம். “மீனவர்கள் பிடித்துக்கொடுத்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்களைப் பறிமுதல் செய்து மீண்டும் கடலில் விட்டுவிட்டோம். வேறு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்கள்?’’ என்று நம்மிடம் திருப்பிக் கேட்டார்.

பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’
பறிபோகும் ‘பாலை மீன் குஞ்சுகள்’

மீன்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசும்போது, “பாலை மீன் குஞ்சுகளைக் கடத்தும் வெளி மாநிலத்தவர்களை நாங்கள் கஷ்டப்பட்டுப் பிடிக்கிறோம். ஆனால், வனத்துறையினர் குறுக்கிட்டு, `இது எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி. நீங்கள் எப்படி நுழையலாம்?’ என்று நாங்கள் பிடித்துவைத்த நபர்களை அழைத்துச் சென்று, எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களை விடுவித்துவிடுகின்றனர். வனத்துறையினர்மீது மீன்வளத்துறை துணை இயக்குநரிடம் புகாரளித்தாலும் `இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்’ என்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்பது எங்களுக்கே விளங்கவில்லை’’ என்று புலம்பினார்.

காத்தவராயன், சின்னத்தம்பி
காத்தவராயன், சின்னத்தம்பி

இதுகுறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாப்பு அதிகாரி சுரேஷிடம் பேசினோம், “நான் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இங்கு இடமாறுதலாகி வந்துள்ளேன். வெளிமாநில நபர்கள் பாலை மீன்குஞ்சுகள் பிடித்தது தொடர்பாக இதுவரை என்னிடம் புகார் ஏதும் வரவில்லை. இனிவரும் நாட்களில் அப்படிப் புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மீன்பிடித் தடைக்காலத்தில் உள்ளூர் மீனவர்கள் மீன்பிடித்தால் தப்பு, வெளிமாநிலத்தவர்கள் பிடித்தால் சரியா?!