ஆமாம்... போலியாகத்தான் கணக்கு காட்டியிருந்தோம்! - ஊராட்சி ஒன்றிய அதிகாரியின் ‘அடடே’ விளக்கம்

மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்திலும் திட்டம் குறித்த விவரங்களைப் பொய்யாகப் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியத்திலுள்ள மோசூர் கிராம ஊராட்சியில், செய்யாத பணியைச் செய்ததாகக் கூறி அதிகாரிகள் லட்சக்கணக்கில் முறைகேடு செய்திருப்பதாக எழுந்திருக்கும் புகாரும், அதற்கு அதிகாரிகள் அளித்திருக்கும் சமாளிப்பு விளக்கமும் அதிரவைக்கின்றன!
இது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான், ‘‘2021-ல், 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்திலிருந்து, மோசூர் ஊராட்சியில் நாடக மேடை அமைக்க 4,98,874 ரூபாய் நிதி பெறப்பட்டிருக்கிறது. அதேபோல், பேவர் பிளாக் ரோடு அமைக்கவும் 4,72,121 ரூபாய் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு பணிகளும் நடைபெறவே இல்லை. செய்யாத பணியைச் செய்ததாக அதிகாரிகளே தில்லு முல்லு செய்து, கையாடல் செய்திருக்கிறார்கள்.

மேலும், மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்திலும் திட்டம் குறித்த விவரங்களைப் பொய்யாகப் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து விளக்கம் கேட்டால், உரிய பதில் அளிக்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக் கிறோம். இந்த ஒரு ஊராட்சியிலேயே இவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என்றால், மற்ற கிராம ஊராட்சிகளில் இன்னும் என்னவெல்லாம் திருட்டுத்தனம் செய்திருக்கிறார்களோ... ஒவ்வொரு ஊராட்சிக் கணக்கும் தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில், ஊழல் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார் ஆவேசமாக.
இது சம்பந்தமாக, மோசூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரனிடம் கேட்டபோது, ‘‘என் ஊராட்சியில் பால் உற்பத்தி யாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். எனவே, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தின் முன்பிருக்கும் மந்தைவெளியில் பேவர் பிளாக் ரோடு அமைத்துத் தருமாறு கேட்டிருந்தோம். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சரியான பதிலளிக்காமல் காலம்தாழ்த்திக்கொண்டேயிருந்தனர். இந்த நிலையில், ஒன்றரை வருடத்துக்கு முன்பே பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுவிட்டதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள் என்ற விவரம் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. நாடக மேடை விவகாரம் பற்றி சத்தியமாக எனக்கு எதுவுமே தெரியாது.

2021, மே மாதம் பணியைத் தொடங்கி அக்டோபருக்குள் பேவர் பிளாக் ரோடு போடப்பட்டிருப்பதாகவும், அதே ஆண்டில் ஜூலை தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள்ளாக நாடக மேடை கட்டிக்கொடுத்திருப்பதாகவும் பொய்யாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த நேரத்தில், நான் ஊராட்சி மன்றத் தலைவராக இல்லை. அதேபோல், கடந்தகாலங்களில், போடாத போர்வெல்லுக்கு கணக்கு காட்டி 1,87,000 ரூபாய் ஊராட்சி நிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார் தடாலடியாக.
இதையடுத்து குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு திமிரி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சக்திவேலிடம் பேசியபோது, ‘‘மோசூர் ஊராட்சிப் பணிகளில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை. கழிவுநீர் வடிகால் பணிக்கான நிதியை ஈடுசெய்வதற்காக, போலியாக கணக்கு காட்டியிருந்தோம். இது வழக்கமான நடைமுறைதான் என்பதால், இதற்கு நிர்வாக அனுமதி ஏதும் பெறவில்லை. அதனால்தான், இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD) இணைய தளத்திலும் பதிவுசெய்ய வில்லை. மத்திய அரசின் இ-கிராம் ஸ்வராஜ் (eGramSwaraj) இணையதளத்தில் மட்டும் ‘டம்மி வொர்க்’குக்காக இந்த இரண்டு பணிகள் செய்யப்பட்டதாகப் பதிவேற்றம் செய்திருந்தோம். மற்றபடி இதில் நிதி இழப்போ, முறைகேடோ நடைபெறவில்லை. 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை, ஊராட்சியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தியிருக் கிறோம்’’ என்றவரிடம்,
‘‘இப்படி முறையற்ற வகையில், செய்யாத திட்டப் பணிகளை கணக்கு காட்டி அதற்கான நிதியை எடுத்து, வேறு பணிக்கு பயன்படுத்திவிட்டோம் என்பதும், இந்தத் தவறை மறைக்க மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையத்தில் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டதாகப் பதிவேற்றம் செய்வதும் தவறுதானே?’’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு அந்த அதிகாரி, ‘‘தவறுதான். ஆனாலும், இப்படித்தான் டம்மி வொர்க் கணக்குகளைக் காட்டி மற்ற பணிகளையும் முடிக்க முடியும். இதுதான் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் எங்களிடம் விளக்கம் கேட்டிருந்தனர். உங்களுக்குக் கொடுத்த இதே விளக்கத்தைத்தான் அவர்களுக்கும் எழுத்துபூர்வமாக அனுப்பியிருக்கிறோம்’’ என்றார். உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த விளக்கக் கடிதம் நமக்கும் ரகசியமாக வந்து சேர்ந்தது. அதில், ‘போலியான பணி’ எனச் செய்த குற்றத்தை திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது பற்றி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் கேட்டபோது, ‘‘குறிப்பிட்ட இந்த இரண்டு பணிகளுக்கான நிதி என்று தனியாக எதுவும் ஒதுக்கப்படவில்லை. இணையத்தில் ஏற்கெனவே அப்லோடு செய்யப்பட்டிருக்கும் பணிகளுக்கான லிஸ்ட்டை குளோஸ் செய்வதற்காகவே இப்படியான டம்மி வொர்க் போடுவார்கள். இதில் தவறேதும் நடக்கவில்லை’’ என்றார்.
அப்படியானால், இனியும் அப்படித்தான் பதிவுசெய்வார்களா?!