Published:Updated:

பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் - முதுமலையில் அளவுக்கு அதிகமான கெடுபிடியா?!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதுமலையில் அளவுக்கு அதிகமான கெடுபிடி விதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் - முதுமலையில் அளவுக்கு அதிகமான கெடுபிடியா?!

பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதுமலையில் அளவுக்கு அதிகமான கெடுபிடி விதிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி சென்னைக்கு வருகிறார். ஆந்திராவிலிருந்து தனி விமானம் மூலமாக அன்று மதியம் 2:45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க பாஜக-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

மாலை 3:15 மணிக்கு அங்கு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அதிநவீன முனையத்தைப் பார்வையிடுகிறார். அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வருகிறார். மாலை 4 மணிக்கு சென்னை - கோவைக்கிடையேயான அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடக்கிவைக்கிறார்.

பிறகு காரில் புறப்பட்டு மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்துக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் 125-ம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிறகு பல்லாவரம் சென்று விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் தொடங்கிவைக்கிறார். இரவு 8:45 மணிக்குத் தனி விமானம் மூலமாக மைசூர் செல்கிறார்.

சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்

பிறகு மறுநாள் (9-ம் தேதி) ஹெலிகாப்டர் மூலமாக மசினகுடிக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் செல்கிறார். அங்கு யானைகள் வளர்ப்பு தொடர்பாக மூன்று யானைப் பாகன்களுடன் கலந்துரையாடுகிறார். பிறகு ஆஸ்கர் விருது பெற்ற `தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ ஆவணப் படத்தில் வாழ்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்திக்கிறார்.

பின்னர் அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக முதுமலையில் அதிகமான கெடுபிடி காட்டப்படுகிறது.

முதுமலை
முதுமலை

அங்கு வனத்துறை சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதிகள், உணவகம் ஆகியவை ஏப்.6 (இன்று) முதல் 9-ம் தேதி வரை மூடப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கான வனத்துறையின் வாகன சவாரி ஏப்.7 முதல் 9-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இவ்வாறு அளவுக்கு அதிகமான கெடுபிடி ஏன்... என்ற கேள்வியெழுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய விவரம் அறிந்த சிலர், "முன்னதாக கடந்த ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்குப் பிரதமர் வருகைதந்தார். அப்போது, `பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இல்லை’ என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து குற்றம்சாட்டினார்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி

மேலும் அண்ணாமலை, "பாதுகாப்பு ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கையடக்க மெட்டல் டிடெக்டர்கள், டோர் ஃபிரேம் மெட்டல் டிடெக்டர்கள், வெடிகுண்டு கண்டறிதல் கருவிகள் ஆகியவை முறையாக இல்லாததால், பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்ததும், பராமரிப்பு, மாற்றியமைக்க காலதாமதம் ஏற்பட்டதும் தற்போது தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறிழைத்த குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார். பதிலுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு, "பாதுகாப்புக் குறைபாடு குறித்து எந்தவோர் அரசுத்துறையும் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

பிரதமர் வருகையின்போது பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான எந்தப் புகாரும் தமிழக காவல்துறையில் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாகத் தவிர்க்கப்படுகின்றன.

நூறு ஆண்டுக்காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் இருக்கிறது. தமிழக காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களைக் கையாளுகிறது. அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்குச் செல்கிறது" என்று தெரிவித்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல் கடந்த ஜனவரியில் கர்நாடகாவுக்கு பிரதமர் வரும்போதும் பாதுகாப்புத் தொடர்பான சர்ச்சை வெடித்தது. அந்த மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமர் வருகைதந்தார்.

டி.ஜி.பி சைலேந்திர பாபு
டி.ஜி.பி சைலேந்திர பாபு

அப்போது நடந்த பேரணியில் அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுவதால், அதைத் தடுக்கும் வகையில் இந்த முறை தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக முதுமலைப் பகுதி வனப் பகுதி என்பதாலும், மாநில எல்லைகள் வருவதாலும் அளவுக்கு அதிகமான கெடுபிடி விதிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.