கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் 72 மணி நேர தொடர் போராட்டத்தை தொடங்கினர். தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வை, ஊதிய குழுவின் சமீபத்திய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் மற்றும் ஒப்பந்த சட்டங்களை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

ஐக்கிய செவிலியர் சங்கம் (UNA) அழைப்பு விடுத்த இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட செவிலியர்கள் அனைவரும் போராட்டம் தொடங்கியது முதல், அடுத்த 72 மணி நேரத்துக்கு தீவிர சிகிச்சை பிரிவு போன்ற அனைத்து சேவைகளில் இருந்தும் விலகி இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
2017-ம் ஆண்டில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும் கிட்டத்தட்ட 1000 மருத்துவமனைகள் அதைச் செயல்படுத்தவில்லை என்றும், அதன்பிறகு ஊதியத் திருத்தம் நடைபெறவில்லை என்றும் UNA-வின் தேசிய தலைவர் ஜாஸ்மின் ஷா கூறினார்.
எனினும் 50% ஊதியத்தை உயர்த்தியுள்ள ஆறு தனியார் மருத்துமனைகளைச் சேர்ந்த செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டதில் இருந்து மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்யறது. ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த ஊதிய உயர்வு குறித்து அரசு முடிவெடுக்கும் என தனியார் மருத்துவமனைகள் தெரிவித்தன.

சுமார் 30 தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த செவிலியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 23 மருத்துவமனைகளைச் சேர்ந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்குத் திரும்பியுள்ளனர். அந்த மருத்துவமனைகள் செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று 50% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் மீதமுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நிர்வாகங்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இன்னும் எந்த தெளிவான முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. செவிலியர்களின் இந்த போராட்டத்தால் ஆபரேஷன்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ICU உள்பட பல மருத்துவமனை சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.