தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களிலேயே எப்போதும் லைம்லைட்டில் இருப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. சர்ச்சைகளும், விமர்சனங்களும், அதிரடிகளும் அவர் அமைச்சரானது முதலே அவரை வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பாஜக மாநிலத் தலைவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உச்சரிக்கத் தவறியதேயில்லை. விஷச்சாராய மரணங்களுக்குப் பிறகு அதிமுக-வும் இதே அஸ்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டது. `கள்ளச்சாராய விற்பனை, உரிமமற்ற பார்கள், போலி மது விற்பனை, 24 மணி நேர மது விநியோகம்...’ என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் அள்ளித் தெளித்த பிறகு தற்போது அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி கறார் காட்டியிருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்ந்த மாவட்ட அளவிலான அனைத்துத் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடனான ஆய்வுக் கூட்டம் மே 24-ம் தேதி நடைபெற்றது. அதிகாரிகள் மத்தியில் பேசிய செந்தில் பாலாஜி கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்படுத்துதலைத் தடுத்திட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மதுக்கடைகள், பார்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மூடப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதிசெய்திட வேண்டும் என்பதையும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.
நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “கள்ளச்சாராய விவகாரமும், கூடுதல் நேரக் கடைத் திறப்பும் அதிகார வர்க்கத்துக்குத் தெரியாமல் நடக்கிறது என்ற கூற்றை ஒருபோதும் ஏற்க முடியாது. விஷச்சாராய விவகாரம் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், கூடுதல் நேர மதுக்கடைத் திறப்பு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொண்டன.

ஏற்கெனவே கடைத் திறப்பு நேரத்துக்கு முன்பு மது வாங்கிக் குடித்த இருவர் பலியாகியிருக்கின்றனர். விவகாரம் ஆளுநர் மாளிகை வரை புகாராகச் சென்றிருக்கிறது. இந்த வேளையில் கூடுதல் விமர்சனங்களுக்கு இடமளித்துவிட வேண்டாம் என்பதற்காகக்கூட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பறந்திருக்கலாம்” என்கிறார்கள்.
``மதுக்கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மூடுவதைக் கண்காணியுங்கள் என்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுக்கடைகளை 24 மணி நேரம் திறக்கச் சொல்வதும், பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிக்கச் சொல்வதும் அமைச்சர் தரப்பினர் என்பதற்குப் பல ஆதாரங்கள் பொதுவெளியில் கிடைக்கின்றன” என்கிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சசிரேகா. ”தமிழகத்தைப் பொறுத்தவரை பகல் 12 மணி முதல் இரவு 10 வரை டாஸ்மாக் கம்பெனி மது விற்றால், இரவு 10 முதல் பகல் 12 வரை கரூர் கம்பெனி மது விற்கிறது என்பது ஊரறிந்த செய்தி.

டாஸ்மாக் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதற்கு தஞ்சாவூர் போலி மதுவால் நிகழ்ந்த மரணங்களே சாட்சி. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால்தான் 20-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. மதுக் கொள்முதலில் முறைகேடு செய்வது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு டார்கெட் கொடுப்பது, கூடுதல் தொகை வசூலிக்க உத்தரவிடுவது, அமைச்சர் தரப்பே பிளாக்கில் மது விற்பது என இத்தனை அவலங்களை அமைச்சர் தரப்பில் செய்துவிட்டு, அதிகாரிகளை அழைத்து `கண்காணியுங்கள்’ எனச் சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பே. மது போதை விவகாரங்கள் குறித்து விழிப்புணர்வு செய்யச் சொல்கிறார்களே... அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவது சிறந்த விழிப்புணர்வாக இருக்கும்” எனக் கொதிக்கிறார் சசிரேகா.
``இந்தக் கூட்டம் இயல்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடப்பதே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை” என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலர் சிவ ஜெயராஜ். “அ.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள், திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக விஷமப் பிரசாரங்களை செய்கின்றன. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் 24 மணி நேரமும் மதுக்கடையும் பாரும் இயங்கின. அதை முறைப்படுத்தும் வேலையில் தற்போது திமுக அரசு மும்முரமாகச் செயல்படுகிறது. கூடுதல் கவனத்துடன் ஆங்காங்கே நடைபெறும் தவறுகளைத் தடுத்திட வேண்டும் என்ற நோக்கில்தான் அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

குட்கா விற்பனைக்கு ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கரை அருகில் வைத்துக்கொண்டு மது, போதை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேச அதிமுக-வுக்கு எந்த அருகதையும் இல்லை. தஞ்சாவூரில் மது அருந்தி மரணித்த சம்பவம் தற்கொலை என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. போதைக்கு எதிரான விழிப்புணர்வு என்பது மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையின் ஓர் அம்சம். இனி இது போன்ற கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க அரசு மிக உறுதியாக இருக்கிறது” என்கிறார் சிவ ஜெயராஜ்.