அரசியல்
அலசல்
Published:Updated:

இவ பல குடும்பத்தை அழிச்சவ... அவ ஒரு மனநோயாளி! - கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் மோதல்

ரூபா, ரோகிணி சிந்தூரி
பிரீமியம் ஸ்டோரி
News
ரூபா, ரோகிணி சிந்தூரி

ஐ.ஏ.எஸ் அதிகாரிமீதான தனிப்பட்ட புகாரோடு நிற்காமல், அரசையே விமர்சிக்கும் வகையிலும் விவகாரம் பூதாகரமானதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது கர்நாடக மாநில அரசு.

‘பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா ஷாப்பிங் சென்றார்’ என்று பரபரப்பு கிளப்பிய ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரி மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் கர்நாடக மாநில அரசு இயந்திரத்தையே ஆட்டம் காணச் செய்திருக்கின்றன!

ஐ.ஏ.எஸ் தற்கொலைக்குக் காரணமானவர்!

ஒரே மாவட்டம் அல்லது ஒரே துறையில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளிடையே ஈகோ யுத்தம் மூள்வது சாதாரணம். ஆனால், கர்நாடகாவில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரான ரோகிணி சிந்தூரி மீது ஊழல் குற்றச்சாட்டுகளோடு, பாலியல் சம்பந்தப்பட்ட புகார்களையும் முன்வைத்தார் கைவினைப்பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநரான ரூபா.

கடந்த 18-ம் தேதி ரோகிணியின் தனிப்பட்ட படங்கள் சிலவற்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, ‘ஓர் அதிகாரி, பணி நேரத்தில் அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார், சமரசம் செய்யப்படுகிறதா... ரோகிணி சிந்தூரி தினமும் தனிப்பட்ட தனது புகைப்படங்களை, மூன்று ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி தற்கொலையில் ரோகிணிக்கும் தொடர்பு இருக்கிறது. தான் பணியாற்றிய இடங்களிலெல்லாம் ஊழல்கள் செய்திருக்கிறார் ரோகிணி. ஆனாலும் அவர்மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’ எனப் பரபரப்பைக் கிளப்பினார் ரூபா.

இதையடுத்து, ரூபாவை ‘அவ ஒரு மனநோயாளி...’ என்று விமர்சித்த ரோகிணி, கர்நாடகா தலைமைச் செயலாளரிடமும் ரூபா குறித்துப் புகாரளித்தார்.

ரோகிணி சிந்தூரி
ரோகிணி சிந்தூரி

காத்திருப்போர் பட்டியல்!

ஆனால், ரோகிணி சிந்தூரி மீதான ஏழு புகார்கள் அடங்கிய அறிக்கையை முதன்மைச் செயலருக்கு அனுப்பினார் ரூபா. அதில், ‘நூற்றுக்கணக்கானோர் கொரோனாவில் இறந்தபோது ரோகிணி சிந்தூரி, 2020-ல் தான் பணிபுரிந்த மைசூரு கமிஷனர் அலுவலகத்தில், நீச்சல்குளம் கட்டியிருக்கிறார். இது பற்றி விசாரணை நடத்திய ரவிசங்கர் ஐ.ஏ.எஸ்., அரசுக்கு முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். அடுத்தகட்ட விசாரணையை விரைவில் நடத்துவதுடன், விசாரணை தாமதிக்கக் காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனவரி 2023-க்கான சொத்து விவரத்தில், ஜலஹள்ளியில் கட்டிவரும் பிரமாண்ட வீடு குறித்து ரோகிணி சிந்தூரி எதுவும் குறிப்பிடவில்லை. இது குறித்தும் விசாரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிமீதான தனிப்பட்ட புகாரோடு நிற்காமல், அரசையே விமர்சிக்கும் வகையிலும் விவகாரம் பூதாகரமானதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது கர்நாடக மாநில அரசு. அது மட்டுமன்றி, கர்நாடகா நில அளவை, ஆவணங்கள் துறை கமிஷனராகப் பணியாற்றிவந்த, ரூபாவின் கணவரான ஐ.ஏ.எஸ் அதிகாரி முனிஷ் மூட்கில்லையும், நிர்வாகச் சீர்திருத்த துறையின் முதன்மைச் செயலாளராக பணிமாற்றம் செய்திருக்கிறது.

ரூபாவின் கோபத்துக்குக் காரணம் என்ன?

இந்த நிலையில், ஆர்.டி.ஐ ஆர்வலர் கங்கராஜ் என்பவருடன் ரூபா பேசும் ஆடியோ ஒன்று கடந்த 22-ம் தேதி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ‘‘இதை ரெக்கார்டு பண்ணுங்க. சோஷியல் மீடியாவுல அனுப்புங்க. எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும், ரோகிணி சிந்தூரின்ற அவ எத்தனை குடும்பத்தை அழிச்சுருக்கான்னு. அவளோட கணவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்துறதுக்காக, என் கணவர் வேலை செய்யற ஆபீஸ்லருந்து (நில அளவை மற்றும் ஆவணங்கள்துறை) நிலங்கள் தொடர்பான எத்தனை தகவல்கள், ஆவணங்களைச் சேகரிச்சுருக்கா. நான் உங்ககிட்டயும் சொல்றேன்... (ஆர்.டி.ஐ அலுவலர்) நீங்களும் அவங்ககூட சேர்ந்து உடந்தையா இருந்து, பணம் சம்பாதிச்சுருக்கீங்க. அவ்ளோதான் நான் சொல்லுவேன், வெளியில போங்க’’ எனக் கோபமாகப் பேசியிருக்கிறார்.

மேலும் 22-ம் தேதி மதியம் ரூபா, `பகீர்’ தகவல்களுடன் மீண்டும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘செய்தியாளர்களே... ரோகிணி சிந்தூரி மீது நான் வெளியிட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்துங்கள். பேட்டர்ன்-ஆக (ஒரே மாதிரியாக) நடக்கும் விஷயங்கள் குறித்தும் விசாரணை செய்யுங்கள். அந்த பேட்டர்ன் என்னவென்றால், முதலில் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தற்கொலை, தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி மரணம், கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் கணவன்-மனைவி விவாகரத்து செய்திருக்கின்றனர். இன்னும் நானும் என் கணவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நன்கு விசாரியுங்கள், இல்லையென்றால், பல குடும்பங்கள் நாசமாகும். ஆதரவு கொடுங்கள், நன்றி’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரூபா
ரூபா

இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, ‘‘ரோகிணி சிந்தூரி தன் கணவரின் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக, ரூபாவின் கணவரிடம் அடிக்கடி சில ஆவணங்களைப் பெற்றதால், ரூபாவுக்கும் அவர் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. தன் கணவரை ரோகிணி வசியப்படுத்திவிட்டதாக எண்ணுகிறார் ரூபா. இதுதான் அவர்களுக்கு இடையிலான சண்டைக்குக் காரணம். தேர்தல் நெருக்கத்தில் உச்ச அதிகாரிகள் இருவர் இதுபோல் அடித்துக்கொள்வதை விரும்பாத அரசுத் தரப்பும், ‘ரூபா, ரோகிணி இருவருமே இந்த விவகாரம் குறித்து இனி பொதுவெளியில் எதுவும் பேச வேண்டாம்’ என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது’’ என்கின்றனர்.

பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதற்கான படிப்பை முடித்துவிட்டு, ஒரு மாநிலத்துக்கே தலைவலியாக மாறியிருக்கிறார்கள் இந்த அதிகாரிகள். பாரபட்சமின்றி விசாரித்தால், பல குட்டுகள் உடைபடலாம்!